31 மார்ச் 2011

ஊழலில் இந்தியா நான்காம் இடம் வகிக்கிறது!

ஆசியா பசிபிக் பிராந்திய நாடுகளில் ஊழல் மலிந்த 16 நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தை பிடித்துள்ளதாக ஹபெர்க்’ என்ற வர்த்தக ஆலோசனை நிறுவனம் மேற்கொண்ட கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிக மோசமான ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலில் 10-க்கு 8.7 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. இந்த வரிசையில் கம்போடியா (9.27) இந்தோனேஷியா (9.25) பிலிப்பைன்ஸ் (8.9) ஆகிய நாடுகள் முறையே முதல் மூன்று இடம் பெற்றுள்ளன. ஊழலற்ற நாடுகளில் சிங்கப்பூர் முதலிடம் (0.37) வகிக்கிறது. ஹாங்காங் (1.10)- ஆஸ்திரேலியா (1.39)- ஜப்பான் (1.90)- அமெரிக்கா (2.39) ஆகிய நாடுகள் அதற்கு அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளன. இந்தியாவில் தேசிய அளவிலான அரசியல் தலைவர்களை விட பிராந்திய மற்றும் வட்டார தலைவர்கள் அதிக ஊழல்வாதிகளாகவும் அதேபோல் தேசிய அளவை விட நகரங்களில் உள்ள அதிகாரிகள் அதிக ஊழல் மலிந்தவர்களாக இருப்பதாகவும் அந்த கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.

ஸ்ரீலங்கா கடற்படையினர் நால்வர் காணாமற்போயுள்ளனர்!

வட பிராந்தியக் கடலில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த கடற்படை வீரர்கள் அணியொன்று காணாமற் போயிருப்பதாக அறியக் கிடைத்துள்ளது.கடற்படை வீரர்கள் நால்வரைக் கொண்ட அணியொன்றே காணாமற் போயிருப்பதுடன், அவர்கள் பயன்படுத்திய வள்ளம் கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கை காரணமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவின் சாலை கடற்படை முகாமிலிருந்து சுண்டிக்குளம் முகாம் வரை பொருட்கள் எடுத்துச் சென்று கொண்டிருந்த நிலையிலேயே அவர்கள் காணாமற் போயுள்ளனர். அவர்கள் பயணித்த படகு எதுவித சேதமுமின்றி கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து பிரஸ்தாப வீரர்கள் யாரேனும் மர்ம நபர்களால் கடத்தப்பட்டிருக்கலாம் அல்லது கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. இதனையடுத்து, உடுத்துறை, ஆழியவளை, தாளையடி, சுண்டிக்குளம், முல்லைத்தீவு போன்ற கரையோரப் பகுதி மக்கள் மீது படையினர் கோவமாக நடந்துகொண்டதோடு, மக்களனைவரையும் பொதுமைதானத்தில் நிறுத்தி வீடுவீடாக சோதனை மேற்கொண்டதோடு, மக்களையும் சோதனைக்குள்ளாக்கி மிகவும் சிரமப்படுத்தியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

30 மார்ச் 2011

காங்கிரசுக்கு இது போதாத காலம்.

காங்கிரஸுக்கு இது போதாத காலம். ஏறக்குறைய, அந்தக் கட்சி போட்டியிடும் அனைத்துத் தொகுதிகளிலும் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளர்களை எதிர்த்து, அதிருப்தி வேட்பாளர்கள் கோதாவில் குதித்துள்ளனர். இன்னொரு பக்கம், சீமானின் ‘நாம் தமிழர்’ கட்சி, ‘காங்கிரஸை வேரறுப்போம்!’ என்ற கோஷத்துடன் களம் இறங்கி இருப்பதால், வெலவெலத்து நிற்கிறார்கள் காங்கிரஸ் வேட்பாளர்கள். ஈழ மக்களின் நலனுக்கு எதிராக மத்தியில் ஆளும் காங்கிரஸ் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டும் தமிழ் அமைப்புகள், காங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதி​களிலும் எதிர்ப் பிரசாரத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தன. அதையடுத்து, ‘நாம் தமிழர்’ கட்சி, பல்வேறு தமிழ் அமைப்புகளையும் ஒருங்கிணைத்துக் கச்சை கட்டி நிற்கிறது. நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் பிரசாரத்தைத் தொடங்கிய சீமானின் பேச்சில் ரௌத்ரம் தாண்டவமாடியது! ”இந்தத் தேர்தல், தமிழ்த் தேசிய இனத்தின் துரோகியான காங்கிரஸுக்கும் ‘நாம் தமிழர்’ இயக்கத்துக்கும் இடையே நடக்கும் அரசியல் யுத்தம். ‘இதில் நாங்கள் வெற்றி பெற வேண்டும்’ என்று உலகம் முழுவதும் பரவிக்கிடக்கும் அனைத்துத் தொப்புள்கொடி உறவுகளும் வாழ்த்துகின்றன. அதனால்தான், ‘வெள்ளையனே வெளியேறு’ என்று வீர முழக்கமிட்டு, இந்தியச் சுதந்திரத்துக்கு முதல் குரல் கொடுத்த நெல்லை மண்ணில் இருந்து… பூலித்தேவன் மண்ணில் இருந்து காங்கிரஸை வேரறுக்கும் இந்த அரசியல் யுத்தத்தைத் தொடங்கி இருக்கிறோம். திசையன்விளையில் தொடங்கப்பட்டு இருக்கும் இந்தத் ‘தொடக்கம்’… காங்கிரஸுக்கு ‘அடக்கம்’! சொந்தக் கட்சிக்காரர்களே காங்கிரஸை வீழ்த்தத் துடிக்கிறார்கள். ஜி.கே.வாசன், ஈ.வி.கே.எஸ்.இளங்​கோவன், ப.சிதம்பரம், அவர் செல்ல மகன் கார்த்தி என்று பல கோஷ்டிகளாகப் பிரிந்து, ஒருவருக்கு ஒருவர் குழி பறிக்கிறார்கள். அதனால், இந்த முறை எங்களுக்கு அதிக வேலை இல்லை. நாங்கள் சுற்றுலா செல்வதுபோல சும்மா அனைத்துத் தொகுதிகளுக்கும் சென்று வந்தாலே போதும்… மீதியை அவர்களாகவே முடித்துக்கொள்வார்கள். காங்கிர​ஸின் தோல்விதான் ‘நாம் தமிழர்’ இயக்கத்தின் வெற்றி! இப்போது இருக்கும் காங்கிரஸுக்கும், காமராஜருக்கும் ஒரு சொட்டுகூட தொடர்பு இல்லை. காமராஜர் இறந்ததுமே காங்கிரஸும் செத்துவிட்டது. மக்களுக்காக காங்கிரஸ் கட்சி என்றைக்காவது வீதிக்கு வந்து போராடி இருக்கிறதா? இப்போது இருக்கும் காங்கிரஸ், பிழைப்புவாதிகளின் கூடாரம்! தமிழக மீனவர்கள் 539 பேர் சிங்களக் கடற்படையால் கொல்லப்பட்டார்களே… அதனைக் கண்டித்து அந்தக் கட்சி ஓர் அறிக்கைவிட்டதா? பி.ஜே.பி-யின் சுஷ்மா சுவராஜ்கூட ஓடி வந்து பாதிக்கப்பட்ட மீனவக் குடும்பத்தைச் சந்தித்து ஆறுதல் சொன்னாரே! காங்கிரஸ் சார்பில் சோனியா, ராகுல்கூட வர வேண்டாம்… ஆனால், இங்கே இருக்கும் எந்த காங்கிரஸ் தலைவராவது அந்த மீனவக் குடும்பத்தினரை சந்தித்து எட்டணா தந்திருக்கிறீர்களா?! காவிரியில் எங்களுக்கு உள்ள உரிமைக்காக வாதாடி இருக்கிறீர்களா? கேரள அரசாங்கம் முல்லை பெரியாறில் எங்களுக்கு உரிய பங்கைத் தராமல் இருப்பதைக் கேள்வி கேட்டு இருக்கிறீர்களா? எங்களது உரிமையைக் கேட்டு வாங்கித் தர முன்வராத உங்களுக்கு, எங்களுடைய ஓட்டு மட்டும் வேண்டுமா? என் வாழ்க்கை முக்கியம் இல்லை… ஆனால், என் வாக்கு மட்டும் உங்களுக்குத் தேவை என்பது என்ன நியாயம்? அட்டைப் பூச்சியாக எங்களுடைய ரத்தத்தையும் வேர்வையையும் உறிஞ்சி வாழும் காங்கிரஸை விரட்டி அடிப்பதுதான் நமது முதல் வேலை. தேர்தல் அறிக்கையில் இலவசங்களை அறிவித்துத் தமிழர்களை மானம் இல்லாத கேவலமான சமூகமாக்கிவிட்டார்கள்! நாட்டில் எங்கும் ஊழல்… விலைவாசி விண்ணை முட்டுகிறது. மின்சாரமே இல்லை… ஆனால் கிரைண்டர், மிக்ஸி, டி.வி., லேப்டாப் தருகிறார்களாம்! ஜனநாயகம் பணநாயகமாக மாறிவிட்டது. ஈழ மண்ணில் நடந்த யுத்தத்துக்குப் பழிக்குப் பழி தீர்க்கும் அரிய வாய்ப்பு, உன்னத சந்தர்ப்பம் இது! நாம் பட்ட வலிக்குப் பழிதீர்க்கும் வகையில், ‘கை’ சின்னத்தைப் பார்த்தால் காறித் துப்பித் தோற்கடியுங்கள். தமிழர் ரத்தத்தில் மூழ்கியுள்ள அந்தக் கட்சியைக் கொன்று ஒழிக்காமல், தமிழர் விடுதலையை வென்று எடுக்க முடியாது!” - ஆண்டனிராஜ், படங்கள்: எல்.ராஜேந்திரன் நன்றி:ஜூனியர் விகடன்.

புலம்பெயர் தமிழரின் போராட்டத்தை மழுங்கடிக்க வேண்டுமாம்.

போரிடும் தகைமையை தமிழீழ விடுதலைப் புலிகள் இழந்துள்ளனர்.ஆனால் புலம்பெயர் தமிழ்ச் சமூகம் இழக்கவில்லை. அவர்களின் போராட்டத்தை மழுங்கடிப்பதற்கு அதிகளவிலான அரசசார்பற்ற நிறுவனங்களை அரசு உருவாக்க வேண்டும் என சிங்கப்பூரின் நாங்யாங் பல்கலைக்கழகத்தின் சர்வதேச விவகார மற்றும் பயங்கரவாத தடுப்பு தொடர்பான விரிவுரையாளரான ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார். இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம் பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் புலம்பெயர் தமிழர்கள் மேற்கொண்டுவரும் பிரசாரங்களை முறியடிப்பதற்கு அதிகளவான அரச சார்பற்ற நிறுவனங்களை அரசு உருவாக்க வேண்டும் என ரொஹான் குணரட்ன கொழும்பில் உள்ள ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். மனித உரிமை அமைப்புக்களின் ஊடாக புலம்பெயர் தமிழ் மக்கள் மேற்கொண்டு வரும் போராட்டங்களை இதன்மூலம் முறியடிக்க முடியும். வெளிவிவகார அமைச்சு இதற்கான நடவடிக்கைகளை எடுக்கலாம். நோர்வேயில் இயங்கிவரும் ஜீ.ரி.எப். அமைப்பு தமிழீழ விடுதலைப்புலிகளின் மறுவடிவமேயா கும். நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தை உருவாக்க முனைப்பு காட்டி வரும் உருத்திரகுமாரை விடவும் நெடியவன் ஆபத்தானவர். உருத்திரகுமாரன் இலங்கை அரசாங்கத்துடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளக்கூடிய அரசியல் சாணக்கியத்தைக் கொண்டவர். நெடியவன் தீவிர போராளி எனவும் தெரிவித்த ரொஹான் குணரட்ன, இலங்கைக்கு எவ்வாறான தீர்வுத் திட்டங்களை வழங்கவேண்டும் என்பது குறித்து பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக் வுக்கு தெளிவான விளக்கம் காணப்படுவதாகவும், தேவை ஏற்பட்டால் கடுமையான குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சிரேஷ்ட விடுதலைப்புலிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த கோத்தபாய தயங்க மாட்டார் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மக்களை கொல்ல யாருக்கும் அதிகாரம் இல்லையென்கிறார் மகிந்த.

லிபியாவின் மக்கள் சரியான திசையில் செல்வதாக சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா தெரிவித்துள்ளார். நேற்று முனத்தினம் (28) அலரிமாளிகையில் அனைத்துலக மற்றும் உள்ளூர் ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே மகிந்தா இவ்வாறு தெரிவித்துள்ளார். லிபியாவுக்கு ஆதரவாக சிறீலங்கா அரசு தொடர்ச்சியாக மேற்கொண்ட நடவடிக்கைகளை தற்போது அது கைவிடத்திட்டமிட்டுள்ளதா என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளன. எனினும் லிபியா மீதான தாக்குதலை நேட்டோ படையினர் பொறுப்பேற்றதே மகிந்தாவின் மாற்றத்திற்கான காரணம் என கொழும்பு இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர். யாரும் பொதுமக்களை கொல்லமுடியாது, அதற்கான அதிகாரம் யாருக்கும் கிடையாது என மகிந்தா தெரிவித்துள்ளார். ஆனால் சில வாரங்களுக்கு முன்னர் லிபிய அதிபரை தொலைபேசியில் தொடர்புகொண்ட மகிந்தா தாம் லிபியாவுக்கு ஆதரவுகளை வழங்குவதாக தெரிவித்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

29 மார்ச் 2011

அந்தக்காட்சிகளால் நான் அதிர்ந்து போனேன்!

நான் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளேன். அந்தக் காட்சிகள் நம்ப முடியாதனவையாக இருந்தன. மைல் கணக்கில் நிலங்கள் தரை மட்டமாக்கப்பட்டிருந்தன. வீடுகள் ஷெல் தாக்குதலில் தரைமட்டமாகி இருந்தன. மரங்களின் மேற்பகுதிகள் எரிந்து போயிருந்தன என மாங்குளத்திற்கு விஜயம் செய்த இங்கிலாந்து கிரிக்கெட் வீரரான இயன் பொத்தம் தெரிவித்துள்ளார். மாங்குளத்தில் விளையாட்டுத் திடல் ஒன்றை அமைப்பது தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக கொழும்பிலிருந்து 300 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள மாங்குளத்திற்கு ஞாயிறன்று விஜயம் செய்த இயன் பொத்தம் அது தொடர்பாக செய்தியாளர்களுக்கு விளக்குகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து தனது விஜயம் பற்றிக் குறிப்பிடுகையில், அங்கு பெரும் நிலப்பரப்பு ஒன்று எவ்வாறு தரைமட்டமாகிக் கிடக்கிறது என்பதைக் கண்டதும் நான் அதிர்ச்சியடைந்தேன் எல்லாமே தரை மட்டமாகக் கிடந்தன. அது ஒரு வெற்றுக்காடு போலக் காட்சியளித்தது என்றும் முன்னாள் கிரிக்கெட் வீரரான அவர் தெரிவித்தார். போரில் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கான பாடசாலைகள் அமைப்பது, ஆங்கிலம் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களை அவர்களுக்கு வழங்குவது, முதியோர் இல்லம் அமைப்பது, போரால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது வாழ்க்கையைப் புனரமைக்க அடுத்து இரண்டு வருடங்களுக்கு உதவுவது என பல திட்டங்களை இலங்கையின் கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் அறக்கட்டளை நடைமுறைப்படுத்தத் தீர்மானித்துள்ளது. இதில் இணைந்து கொண்டே இயன் பொத்தமும் மைக்கேல் வஹனும் மாங்குளம் சென்றிருந்தனர். அங்கு முன்னாள் சிறுவர் போராளிகளுடன் கிரிக்கெட் விளையாட்டிலும் இவர்கள் ஈடுபட்டனர். மாங்குளம் பாடசாலைக்குச் சென்ற இவர்கள் இருவரும் உணவு, நுளம்புவலைகள், ரோச் லைற்றுகள், மற்றும் சமையல் உபகரணங்களை வழங்கினர்.

ஆசிரியரின் கொலைக்கு படைகளே பொறுப்பு!

யாழ்.சாவகச்சேரி இந்துகல்லூரி ஆசிரியர் சம்பந்தன் சக்திதரன் கொலைக்கு இராணுவத்தினரும் பொலிசாருமே பொறுப்புக் கூற வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். கடந்த வாரம் இராணுவத்தினரால் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்த நிலையில் நேற்று முன்னாள் உயிரிழந்திருந்த ஆசிரியர் சம்பந்தன் சக்திதரனின் இறுதி நிகழ்வு இன்று குப்பிளானில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பாடசாலை சமூகத்தினர், மக்கள் என நூற்றுக்கணக்கானோர் பங்கு கொண்டிருந்தனர். பிற்பகல் இரண்டு மணியளவில் அவரது இல்லத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட சடலம் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக அவரது வீட்டில் நடைபெற்ற இறுதி நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா உரை நிகழத்தினார். அவர் தனதுரையில், முழு நிர்வாகமும் இராணுவத்தினரின் கண்காணிப்பின் கீழேயே உள்ளமையால் இவ்வாறான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் பதில்கூற வேண்டிய பொறுப்பு இராணுவத்தினருக்கும் பொலிசாருக்குமே உள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் யாழ்.மாவட்ட இராணுவத்தளதியிடம் பேச்சு நடத்தப்போவதாகத் தெரிவித்த மாவை, நாடாளுமன்றத்திலும் இது தொடர்பில் உரை நிகழ்த்தப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

28 மார்ச் 2011

பத்து வயது சகோதரி மீது படைகள் வல்லுறவு புரிந்தது!

தனது சகோதரி 10 வயதாக இருக்கும்போது இராணுவத்தினாலும் ஆயுதக் குழுவொன்றினாலும் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டதால் இன்று மனநிலை பாதிக்கப்பட்டு வாழ்வதாகவும் தனது சகோதரன் 1990 இல் க.பொ.த. உயர்தரம் படிக்கும்போது கொலக்கொட்டி எனும் இராணுவப்படையால் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், இன்றுவரை அவர் பற்றிய தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லையெனவும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளித்த கல்முனை பாண்டிருப்பைச் சேர்ந்த ரெட்ணம் பூங்கோதை என்பவர் தெரிவித்தார். இந்த ஆணைக்குழுவின் இறுதி அமர்வு அதன் தலைவர் சீ.ஆர்.டீ.சில்வா தலைமையில் கல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தில் நேற்று நடைபெற்றபோது அதில் சாட்சியமளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து சாட்சியமளிக்கையில்; 2007 ஆம் ஆண்டு இப்பகுதியில் இயங்கி வந்த ஆயுதக்குழுவொன்று நான் கடமை புரியும் வைத்தியசாலையில் வைத்து பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பார்த்துக் கொண்டிருக்கும்போது எனது கண்களைக் கட்டி வெள்ளை வானில் கொண்டு சென்றது. அதன் பின் நான் சிறையில் வைக்கப்பட்டு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர்தான் விடுதலைபெற்று வந்தேன். எனது வீடு கடல்கோளால் சேதமடைந்து அதன் பின்னர் எனக்குக் கிடைத்த வீட்டில் ஆயுதக்குழு உறுப்பினர் ஒருவர் பலவந்தமாகக் குடியேறினார். அதனைத் தட்டிக் கேட்டதற்காக என்னைக் கடத்திச் சென்றதுடன், எனது வீட்டிலிருந்த ஐந்து இலட்சம் ரூபா பணத்தையும் நகைகளையும் கொள்ளையடித்துச் சென்றனர். எனது உடலில் ஆணியேற்றி சித்திரவதை செய்ததுடன், பாலியல் சேஷ்டைகளும் புரிந்தனர். எனக்கு சிறுநீர் பருகத்தந்தார்கள். நான் ஒரு இருதய நோயாளி, தற்போது எனது தங்கையை பொலிஸார் கடத்தியுள்ளார்கள். அவர் எங்கு இருக்கின்றார் என்று தெரியாது. எதிர்காலத்தில் எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கின்றது. நான் ஒரு தாதிய உத்தியோகத்தர். எனவே, எனது வேலையை மீண்டும் பெற்றுக்கொள்ளவும் எனது தங்கையைத் தேடித்தரவும் ஆணைக்குழு உதவ வேண்டுமெனக் கண்ணீர்மல்க வேண்டினார். சேனைக்குடியிருப்பைச் சேர்ந்த சாமித்தம்பி நல்லம்மா இங்கு சாட்சியமளிக்கையில்; எனது மகன் சண்முகம் பாலகணேஷ் 10 ஆம் வகுப்புப் படிக்கும்போது 1990 ஆம் ஆண்டு இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டார். அவர் பற்றி இதுவரை எதுவித தகவலும் இல்லை. எங்கோ ஒரு முகாமில் இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்களாம். அங்கு அவர் உள்ளாரா எனக் கண்டு பிடித்துத் தருமாறு தள்ளாடிய வயதில் மனம் உருகிக் கேட்டார். இதனை அவதானித்த ஆணைக்குழு உறுப்பினர் திருமதி மனோ இராமநாதன்,அம்மூதாட்டியை அழைத்து சிறு பண உதவியை வழங்கியதுடன்,மகனைக் கண்டுபிடிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகத் தெரிவித்தார். தம்பிலுவிலைச் சேர்ந்த பத்மினி கனகேந்திரம் சாட்சியமளிக்கையில்; 2009.05.10 ஆம் திகதி எனது கணவர் அக்கரைப்பற்றிலிருந்து பஸ்ஸில் கொழும்புக்குச் செல்லும் வழியில் சியம்பலாண்டுவ வடினாகலை என்ற இடத்தில் வைத்து ஆயுதம் தரித்த சீருடை அணிந்த பொலிஸினால் கைதுசெய்யப்பட்டார். இத்தகவலை பஸ்ஸின் சாரதி, நடத்துனர் ஆகியோர் எமக்குத் தெரிவித்தனர். இதுவரை அவர் தொடர்பான தகவல்கள் ஏதுமில்லை. 2010 பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி காலை 10.45 மணியளவில் களுத்துறையிலிருந்து பொலிஸ் உயரதிகாரியொருவர் கதைப்பதாகவும் கணவரை விடுதலை செய்ய இரண்டு இலட்சம் ரூபா பணம் வேண்டுமென்றும் தாங்கள் தேசிய குற்றத்தடுப்புப் பிரிவினர் என்றும் கூறினார்கள். பணம் தராவிட்டால் பல சிக்கல்களுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்றும் கூறினார்கள். எனக்கு 6 வயதுப் பிள்ளையொன்று உள்ளது. இதுபற்றி திருக்கோவில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்தோம். மூன்று தடவை வந்து விசாரணை மேற்கொண்டு சென்றார்கள். இதுவரை எதுவித தகவலும் கிடைக்கவில்லையென்றார். திருக்கோவிலைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை அருளம்மா சாட்சியமளிக்கையில்; எனது மகன் ரவீந்திரன் அரியதாஸன் (21 வயது) 1996 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 16 ஆம் திகதி தலைமுடி வெட்டுவதற்கென வீட்டை விட்டு வெளியே சென்றார். இன்றுவரை வீடு திரும்பவில்லை. விசேட அதிரடிப்படை முகாம்கள்,பொலிஸ் நிலையங்கள் என்பனவற்றிலும் விடுதலைப்புலிகளின் பழுகாமம்,கொக்கட்டிச்சோலை, கிளிநொச்சி போன்ற இடங்களிலிருந்த முகாம்களிலும் விசாரித்தேன். இதுவரை எந்தத் தகவலும் இல்லை. மகனை நினைத்து நினைத்து எனது கணவர் நோயாளியாகிவிட்டார் என்றார். சாய்ந்தமருதைச் சேர்ந்த ஏ.அப்துல் மஜீட் சாட்சியமளிக்கையில்; எனது மகன் ஏ.எம்.றயிசுடீன் என்பவர் சாய்ந்தமருதில் வெல்டிங் கடையொன்று நடத்தி வந்தார். 2008 ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி வெள்ளை வானில் வந்தவர்களினால் வேலைத்தளத்தில் வைத்துக் கடத்திச் செல்லப்பட்டார். இவரைக் கடத்தும்போது அருகில் விசேட அதிரடிப்படையினர் இருந்தனர். இவரை கருணா குழு,விசேட அதிரடிப்படை முகாம்,பொலிஸ் நிலையங்கள், விடுதலைப்புலிகள் முகாம்கள் எனப் பல இடங்களிலும் தேடினோம். இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்றார். தம்பிலுவிலைச் சேர்ந்த சங்கரப்பிள்ளை சபாபதி சாட்சியமளிக்கையில்; எனது மகன் சிறுவயதிலிருந்தே எம்மைவிட்டுச் சென்றிருந்தார். பின்னர் அவர் விடுதலைப்புலிகளிடம் ஒருவருடப் பயிற்சி பெற்று அங்கு புகைப்படப்பிடிப்பாளராகச் செயற்பட்டார். பின்னர் அதிலிருந்து விலகி யாழ்ப்பாண யுவதியொருவரைத் திருமணம் முடித்து வன்னியில் வாழ்ந்து வந்தார். 2009.05.17 ஆம் திகதி முல்லைத்தீவில் வைத்து இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டார். இதுவரை அவர் தொடர்பாக எந்தவிதத் தகவலும் இல்லை. அவருக்கு ஐந்து பிள்ளைகள் இருக்கின்றார்கள். அவர் பற்றிய தகவலை பெற்றுத்தருமாறு கேட்டுக்கொண்டார்.

27 மார்ச் 2011

மகிந்தவை கண்டதும் நடுங்கிய எம்பி!

கடந்த செவ்வாய்க்கிழமை (22) சிறீலங்கா நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தின் போது, சிறீலங்கா அரசு காலிமுகத்திடலில் நிலத்தை விற்பனை செய்வது தொடர்பில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்த ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சிறீலங்கா அரச தலைவரை கண்டதும், பேச்சை மாற்றியதாக தெரிவிக்கப்படுகின்றது. காலிமுகத்திடலில் உள்ள நிலங்களை சிறீலங்கா அரசு குறைந்த விலையில் விற்பனை செய்து பெரும் ஊழல்களை மேற்கொண்டுவருவதாக ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் உரையாற்றிக்கொண்டிருந்த சமயம், மகிந்தா அங்கு வந்திருந்தார். மகிந்தாவை கண்டதும் அச்சத்தால் நடுக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் தனது பேச்சை நிறுத்திவிட்டார். அதனை தொடர்ந்து அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும் சத்தமிட்டு சிரித்ததுடன், மகிந்தா இருக்கும்போதே அவரை தொடர்ந்து பேசுமாறும் கோரிக்கைவிடுத்திருந்தனர். ஆனால் உடனே பேச்சை மாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர், இந்த விடயங்களை கேட்கவேண்டியது தனது கடமை என தெரிவித்ததுடன், மகிந்தா தனது பேச்சை கேட்டது மிக்க மகிழ்ச்சி தருவதாகவும் தெரிவித்து தனது உரையை உடனடியாகவே முடித்துக்கொண்டார்.

காணி,காவல்துறை எமக்கு வேண்டும்.

காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோருவதாக ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. வட மாகாணத்தில் காவல்துறை அதிகாரங்களையும், காணி மற்றும் வன வள அதிகாரங்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோருவதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்தக் கோரிக்கைகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் முன்வைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 13ம் திருத்தச் சட்ட மூலத்தில் இந்த விடயங்கள் ஏற்கனவே உள்ளடக்கப்பட்டுள்ளதாக கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. அதிகாரப் பகிர்வின் போது காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் பகிரப்பட வேண்டியது மிகவும் அவசியமானதென வலியுறுத்தப்பட்டுள்ளது. அதிகாரப் பகிர்வு தொடர்பில் முதல் தடவையாக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் நலத் திட்டங்கள் குறித்தே கடந்த கால சந்திப்புக்களின் போது கலந்துரையாடப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். உடல் நலக்குறைவினால் வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ம் திகதி நாடு திரும்ப உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரையில் தீர்வுத் திட்ட யோசனைகளை முன்வைக்கவில்லை என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அண்மையில் ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கே.பியை தேடுகிறது சர்வதேச காவல்துறை!

சர்வதேச காவல்துறையான இன்டர்போலின் தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் பட்டியலிலிருந்து, தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதனின் பெயர் இன்னமும் நீக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறெனினும், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் மற்றும் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் ஆகியோர் தேடப்பட்டு வருவோரின் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் உயிரிழந்துள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டதனைத் தொடர்ந்து அவர்களது பெயர்கள் சர்வதேச தேடப்பட்டு வரும் குற்றவாளிகளின் பெயர்ப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஆதரவு காணப்பட்ட போதிலும் குமரன் பத்மநாதன் தேடப்பட்டு வரும் ஓர் குற்றவாளியாகவே சர்வதேச அரங்களில் நீடிப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. குமரன் பத்மநாதனின் அண்மைய புகைப்படங்களை இன்டர்போல் அண்மையில் வெளியிட்டுள்ளதாகவும், இதன் மூலம் குமரன் பத்மநாதனை கைது செய்வதில் இன்டர்போல் காட்டும் தீவிரம் வெளிப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது. இன்டர் போல் காவல்துறையினர் இலங்கையைச் சேர்ந்த 81 பேரை தேடி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. இதில் 52 பேர் அரசாங்கத்தின் கோரிக்கைக்கு இணங்க தேடப்பட்டு வருவதாகவும் ஏனையவர்கள் வேறும் நாடுகளின் கோரிக்கைகளுக்கு அமைய தேடப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தேடப்பட்டு வருவோரில் 30 பேர் பயங்கரவாதிகள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இன்டர்போலினால் தேடப்பட்டு வரும் இலங்கையர்களில் ஐந்து பெண்களும் அடங்குவதாகவும் இதில் செலிங்கோ குழும நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் சபை உறுப்பினரான சிசிலி கொத்தலாவலவும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

26 மார்ச் 2011

சிங்களப்படைகளால் சீரழிக்கப்பட்ட பெண்ணின் துயரக்கதை!

'' நான் ஒரு இருண்ட அறையில் இருக்கிறேன். உயர்ந்த கறுத்த பனைமர முண்டங்கள் என்னைத் துரத்துகின்றன. அவை என்மேல் சரிந்து விழுகின்றன. நான் ஓடிக் கொண்டிருக்கிறேன். ஓடிக்கொண்டேயிருக்கிறேன். ஒவ்வொரு இரவும் எனக்கு மீளமீள வரும் கனவு இது தான். பயத்தால் நான் திடுக்கிட்டு விழிக்கிறேன். நான் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது எனக்கு நேர்ந்தவைகளை நினைத்து நான் அழுகிறேன்.'
18 மாதங்களாக பெரும்பாலும் ஒவ்வொரு நாளும் இவரையும் இவரோடு சேர்த்த நான்கு பெண்களையும் இலங்கை இராணுவத்தினர் இழுத்துச் சென்று பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கி வந்த பயங்கரமான அனுபவம் தொடர்பாக சொன்னவை தாம் அவை.
ஓக்ஸ்போர்ட்டில் நேற்று உளநல மருத்துவரால் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்ட அந்த யுவதி தனது இரண்டரை வருட கால மௌனத்திற்குப் பின்னர் நேற்று முதன் முறையாக வாய்திறந்து இவற்றைச் சொன்னார்.
அகதி அந்தஸ்து தொடர்பான வழக்குகளில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக நான் ஈடுபட்டு வருகிறேன். அகதி அந்தஸ்து பெறுவதற்காக சொல்லப்படுகிற ஏராளம் பொய்கள், நடத்தப்படுகிற நாடகங்கள் குறித்து நானறிவேன்.
ஆனால் இந்தப் பெண்ணுடைய சாட்சியம் அவ்வாறான ஒன்றல்ல. இது அவருடைய நேரடி அனுபவமாக அவர் பட்ட துன்பமாக இருந்தது. அவருக்கேற்பட்ட இந்த நிலைமையைக் கேட்ட போது ஒரு புறத்தில் எனக்குக் கடும் கோபமாகவும் அதே நேரத்தில் ஆச்சரியமாகவும் இருந்தது. ஆச்சரியம் ஏனென்றால் அரசாங்கமும் ஜெனரல் சரத்பொன்சோகாவும் கொழும்பின் பிரதான ஊடகங்களும் போரின் இறுதிக்காலகட்டத்தில் எத்தகைய மனிதப் பாதிப்புக்களும் ஏற்படவில்லை என்று இன்றும் கூறி வருவது தான்.
ஒழுக்கங்கெட்ட படையினரால் மேற்கொள்ளப்பட்ட இந்தக் கொடூரமான காட்டுமிராண்டித்தனமான மனிதாபிமானத்துக்கு முரணான நடவடிக்கை காரணமாக அந்த யுவதிக்கு இப்போது இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது.
நேற்றைய எனது இந்த அனுபவம் எனக்கு 1996இல் வடக்கில் நடந்த அந்நச் சம்பவத்தை ஞாபகமூட்டியது. க.பொ.த உயர்தர வகுப்பு பரீட்சை முடித்து வந்த 18 வயதான கிரிசாந்தி குமாரசாமி என்ற பாடசாலை மாணவி தடுப்புக்காவலரணில் வைத்து 11 படையினரால் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டதும், அவரைத் தேடிச் சென்ற தாயாரும் கூட பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டதும், பின் இருவரும் கொல்லப்பட்டதும் இவர்களைத் தேடிச் சென்ற சகோதரரும் அயலவரும் படுகொலை செய்யப்பட்டதும் நடந்தது.
கண்டதுண்டமாக வெட்டப்பட்டு புதைக்கப்பட்டிருந்த அவர்களது சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டு மிகவும் அழுகிய நிலையில் கொழும்புக்கு மருத்துவ பரிசோதனைக்காக எடுத்து வரப்பட்ட போது காலமான குமார் பொன்னம்பலமும் நானும் தான் அச்சடலங்கைப் பார்வையிட முதன் முதலில் சென்றிருந்தோம்.
அங்கு அந்தச் சடலங்கைப் படம் பிடிக்க எமக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதிலிருந்து வெளிவந்த துர்நாற்றம் சகித்துக் கொள்ள முடியாததாக இருந்தது. கண்டதுண்டமாக வெட்டப்பட்ட சதைத் துண்டங்களாக தோல் உரிக்கப்பட்டு அவிக்கப்பட்ட கோழி இறைச்சித் துண்டங்களாக தரப்பாளினால் சுற்றப்பட்டவையாக அது இருந்தது.
ஒவ்வொரு உடலின் கழுத்திலும் நீல நிற நைலோன் கயிறுகளால் இறுக்கி முடிச்சுப் போடப்பட்டிருந்தன. பின்னர் அந்த உடல்கள் அரசாங்கச் செலவிலேயே எரியூட்டப்பட்டன.
ஒரு பெண்ணான ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்கவின் ஆட்சியின் சிறப்பு அது. சர்வதேச மன்னிப்புச் சபையின் அழுத்தம் காரணமாகவும், ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவம் காரணமாகவும் சம்பந்தப்பட்ட படையினர் மீது பாலியல் வன்புணர்வு மற்றும் படுகொலைக் குற்றம்சாட்டப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது. ஆனால் அதில் உள்ள துயரம் என்னவென்றால் தண்டனை வழங்கப்பட்டவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டதனூடாக தண்டனையிலிருந்து விலக்களிக்கப்பட்டனர்.
அந்தப் பெண்ணின் அந்தரங்க உறுப்புக்களில் பீடிக்கட்டையால் சுடப்பட்ட தழும்புகளை நான் கண்டேன். அவர் எனது முன்னிலையிலேயே மயங்கி விழுந்தார். அவருடைய முழங்காலில் காயம் ஏற்பட்டது. அவர் அந்த உளநல மருத்துவரின் காலில் விழுந்து கெஞ்சினாள் தன்னை அந்த அறையில் தனியே விட்டுச் செல்ல வேண்டாம் என்று, அவள் அப்போதும் பயந்தாள் தான் வெளியே போனால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படுவேன் என்று.
அந்தப் பெண் உளநல மருத்துவர் தன்னைத் தொடுவதற்குக் கூட அப்பெண் அனுமதிக்கவில்லை. அவ்வளவுக்கு அவள் அஞ்சினாள். அவள் என்னுடன் பேசுவதற்குக் கூட அஞ்சினாள். ஆனால் அதற்குள்ளும் அவள் என்னை இவ்வாறு கேட்டுக் கொண்டாள். 'இவை எவற்றையும் எனது சகோதரிக்குச் சொல்லி விடாதீர்கள். சொல்ல மாட்டீர்கள் தானே?'
அந்த இரண்டு மணித்தியால விசாரணையின் போது என்ன நடந்தது என்பது முழுவதையும் இங்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை. அவளுடைய ஆறா ரணகாயம் கொதித்தது.
அந்தக் குழந்தை சந்தோசமாகவும் நலத்துடனும் இருந்தது. அதற்குக் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும். அக்குழந்தை பெண்குழந்தையாக இருந்தது ஒரு விதத்தில் நல்லது. இல்லாவிட்டால் தாயாரால் அதனைத் தன்னுடன் சேர்த்துக் கொள்ள முடியாதிருந்திருக்கும். அது ஒரு ஆண்குழந்தையாக இருந்திருந்தால் பாலியல் வன்புணர்வக்கு உள்ளாக்கியவர்களை அது ஞாபகமூட்டிக் கொண்டே இருந்திருக்கும் என்றார் அந்த உளநல மருத்துவர்.
கொரியப்பெண்களைப் போல நாங்கள் மௌனமாக அழுந்தியபடி காத்தருக்க வேண்டும் போல் இருக்கிறது. அவர்களுக்கு இழைத்த அநீதியை ஏற்று மன்னிப்புக் கேட்க அறுபது ஆண்டுகள் ஆகியது ஜப்பானுக்கு.
தற்போதைய கற்றறிந்த பாடங்களுக்கான ஆணைக்குழு வெறும் ஒரு கண்துடைப்பே. ஐநாவோ போர்க்குற்றம் தொடர்பில் சீரிய கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை.
போர்க்குற்றம் தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். அல்லாவிடில் நாங்கள் மனிதர்களே அல்ல.
நன்றி: பேர்ள் தேவநாயகம், சிறிலங்கா கார்டியன்.

வதை முகாமிலிருந்து இளைஞர் யுவதிகளை மீட்க மக்கள் குரல் கொடுக்க வேண்டும்.

கிளிநொச்சி பல்லவராயன்கட்டு கரியாலை நாகபடுவானை சேர்ந்தவரான ஆசீர்வாதம் நியூஸ்டன்(வயது27) என்பவா் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினா் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு வவுனியா நெளுக்குளம் தொழினுட்பக் கல்லூரி புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வு என்ற பெயரில் அடைக்கப்பட்டிருந்தார்.இவா் 21-03-2011 அன்று தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஊடகங்களுடாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறே வெலிக்கந்தை புனா்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் இளைஞா்களில் ஒருவா் 22-03-2011 இல் இறந்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த இரண்டு மரணங்களும் சந்தேகத்திற்குரிய விதமாகவே இடம்பெற்றுள்ளது.
புனர்வாழ்வு என்ற பெயரில் அடைத்து வைக்கப்பட்டுள்ள இளைஞா் யுவதிகள் மிக மோசமான உடல் உளரீதியான சித்திரவதைகளை எதிர்கொண்டு வருவதாகவும் கடந்த 21 மாதங்களாக இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றதென்றும் பலருக்கு வெளி உலகுடன் எவ்வித தொடா்புகளும் இல்லையெனவும் அறிகின்றோம். சா்வதேச சட்ட வரையறைகளை மோசமாக மீறுகின்ற அடிப்படையிலேயே இவை நடைபெறுகின்றன.
இறந்த இளைஞா்கள் இருவரும் முகாம்களில் இடம்பெறும் சித்திரவதைகளில் இருந்து தப்பிக் கொள்ளுவதற்காக தாங்களாகவே தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டும் அல்லது அங்கு இடம்பெறும் சித்திரவதைகளால் கொலை செய்யப்பட்டிருக்க வேண்டுமென்ற முடிவுக்கே நாம் வரவேண்டியுள்ளது.
இவ்வாறனதொரு சூழ்நிலையிலேயே அனைத்து தமிழ் இளைஞா்கள் யுவதிகளும் உள்ளனா்.
சர்வதேச சட்டங்களை அப்பட்டமாக மீறும் வகையில் ஸ்ரீலங்கா அரசு மேற்கொள்ளும் இச் செயற்பாடுகளை தமிழ் தேசிய மக்கள் முன்னணி வன்மையாகக் கண்டிக்கின்றது.
இணக்க அரசியல் என்ற போர்வையில் அரசுக்கு ஒத்துழைப்பதன் மூலம் இக் கொடுமைகள் மூடி மறைக்கப்படுமாயின் தான் மேற்கொள்ளும் கொடுமைகளை நிறுத்த வேண்டிய எந்தத் தேவையும் அரசுக்கு ஏற்படாது என்பதனை எமது மக்களுக்கு நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
தடுத்து வைக்கப்பட்டுள்ளவா்கள் சித்திரவதைகளில் இருந்து விடுவிக்கப்பட வேண்டுமாயின் நாம் இதனை கடுமையாக எதிர்க்க வேண்டும்.
இன்று பல நாடுகளில் அரசுகளால் மேற்கொள்ளப்படும் பொது மக்கள் மீதான ஐனநாயக அடக்கு முறைகளுக்கு எதிராக அந்தந்த மக்கள் போராட்டங்களை முன்னெடுக்கும்போது அப்போராட்டங்களை அரசுகள் வன்முறைகளை கையாண்டு நசுக்குவதனை அனுமதிக்க சா்வதேச சமூகம் இன்று தயாராக இல்லை என்பதனை தமிழ்த் தேசம் உணர வேண்டும்.
நன்றி
செ.கஜேந்திரன்
பொதுச் செயலாளர்
தமிழ் தேசிய மக்கள் முன்னணி
skajendren@yahoo.com

25 மார்ச் 2011

ஸ்ரீலங்கா படைகள் மீது திடீர் தாக்குதல்!ஐந்து அதிகாரிகள் பலி.

நேற்று (24) இரவு 10:22 மணியளவில் ஹபரணைக் காட்டுப்பகுதியில் சிறீலங்காப்படைகளின் தொடர்அணி ஒன்றின்மீது நடாத்தப்பட்ட திடீர் கெரில்லா தாக்குதல் ஒன்றில் ஐந்து சிறீலங்கா இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளதாக சுயாதீனமாக ஊர்ஜிதம் செய்யமுடியாத செய்தி ஒன்று தெரிவித்துள்ளது.
2009 ஆம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்காலின் நடைபெற்ற போரின் இறுதிநாட்களில் வெள்ளைக்கொடியுடன் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் திரு பா நடேசன், சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவன், கட்டளைத்தளபதி கேணல் ரமேஸ் ஆகியவர்கள் மீதான கோழைத்தனமான படுகொலை தாக்குதலுக்கு பொறுப்பான இராணுவ அதிகாரிகளே கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொல்லப்பட்ட இராணுவ அதிகாரிகளின் பெயர் விபரம் வருமாறு:
1 ஆவது சிறப்புபடைஅணியின் கட்டளை அதிகாரி மேஜர் மகிந்தராஜசிங்கே
1 ஆவது சிறப்புபடை அணியின் 2 ஆவது கட்டளை அதிகாரி மேஜர் விபுல திலக இலகே
சிறப்புப்படைஅணியின் கோல்ப் கெம்பனியின் கட்டளை அதிகாரி கப்டன் சமிந்தகுணசேகரா
’ரோமியோ’ கொம்பனியின் கட்டளைஅதிகாரி கப்டன் கவிந்த அபயசேகரா
“எக்கோ” படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் கோசல விஜயக்கோன்
ஆகியோரோ கொல்லப்பட்ட உயர்அதிகாரிகள்.
அத்துடன் இந்தத்தாக்குதலில் சிறீலங்கா இராணுவத்தின் 59 ஆவது படையணியின் சிறப்புப்படை அதிகாரியான கேணல் அத்துல கொடி பீலி படுகாயத்துடன் உயிர் தப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இந்த தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ள “சங்கிலியன் படையணி” இத்தகைய தாக்குதல் வருங்காலத்தில் தொடரும் என்று தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.எனினும் இச்செய்தியை ஸ்ரீலங்கா படை வட்டாரங்கள் மறுத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

24 மார்ச் 2011

அரசியல் தீர்வு இல்லையேல் மீண்டும் போர் வெடிக்கும்.

இலங்கையில் போர் முடிந்து இரண்டு ஆண்டுகளாகப் போகிறது. ஆனா​லும், அங்குள்ள தமிழர்களின் இன்னல்கள் இன்னும் ஓயவில்லை. அதன் பிரதிபலிப்பு, இந்த ஆண்டு நடந்த கச்சத் தீவுத் திருவிழாவிலும் எதிரொலித்ததுதான் கொடுமை!
இந்தியா வசம் இருந்த கச்சத்தீவு, 1974-ல் இலங்​கைக்குத் தாரைவார்க்கப்பட்டது. ஆனாலும், அங்கு உள்ள புனித அந்தோணியார் கோயில் திருவிழாவில், இரு நாட்டு பக்தர்களும் தடைகள் இன்றிப் பங்கேற்றனர். 83-ல் தமிழர்கள் மீதான தாக்குதல் தீவிரம் அடைந்த நிலையில், இந்த விழா தடைப்பட்டது. அதன் பிறகு தமிழக பக்தர்கள் பங்கேற்க, இந்திய அரசு அனுமதிக்கவில்லை.
கடந்த 2009-ம் ஆண்டு, புலிகள் இயக்கத்துடனான போர் முடிவுக்கு வந்ததும், சென்ற ஆண்டு கச்சத்தீவுத் திருவிழாவில் தமிழக பக்தர்கள் பெருமளவில் கலந்து​கொண்டனர். இந்த ஆண்டுக்கான திருவிழாவும் கடந்த 19, 20-ம் தேதிகளில் நடந்தது. அப்போது கச்சத்தீவு அந்தோணியாரிடம் தங்கள் துயரங்களை முறையிட வந்திருந்த ஈழத் தமிழர்கள் சிலரிடம் பேசினோம்.
ஊர்க்காவல்துறையைச் சேர்ந்த ஒரு மீனவர் நம்மிடம், ''பிரச்னை முடிஞ்சு பல காலமாகியும் எங்கட கஷ்டம் மட்டும் இன்னும் தீரலை. முள்ளி வாய்க்கால் சண்டையின்போது பிடி​பட்ட சனங்களில் பல ஆயிரம் பேர், இன்னும் முகாமில்தான் இருக்காங்க. விசாரணை என்ற பெயரில் எங்கட சகோதரர்கள் ஏராளமானோர் இன்னும் வதை முகாம்களில்தான் அடைபட்டு இருக்காங்க. ஆனா, உலக மக்களை ஏமாத்தும் விதமா, இலங்கையில் தமிழர்கள் சந்தோ​ஷமா இருப்பதாகப் பொய் பரப்பு​றாங்க. உண்மையில், இன்னும் நாங்க இரண்டாம் குடிமக்களாவே நடத்தப்​படுறோம். சண்டை முடிஞ்சு இவ்வள காலமாயிட்டதுதானே... இன்னும் எங்கட மக்களைத் தங்களோட சொந்த இடங்களுக்கு அனுப்பலையே... எங்கட இடத்துல எல்லாம் 'இது எங்கட பூர்வீக பூமினு சொல்லி சிங்கள மக்களைக் குடியமர்த்தும் வேலையை ஆர்மியும் அரசாங்கமும் நடத்துது. எதிர்த்துக் குரல் கொடுத்தா, ராத்திரியோட ராத்திரியா வீடு புகுந்து அந்த ஆளைப் பிடிச்சுட்டுப் போய், கொன்னு போட்டுடறாங்க!
டக்ளஸ், பிள்ளையான், கருணா போன்ற எங்கட ஆட்களோட, முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி-யான ரிசாட் பயதுல்லா மற்றும் மலையகத் தமிழாட்களையும் சேர்த்துக்கொண்டு எங்களுக்கு எதிரா இலங்கை அரசாங்கம் இயங்குது. சமீபத்தில் நடந்த உள்​ளாட்சித் தேர்தலிலும் இந்தக் கூட்டணி போட்டியிட்டது. இதுக்கு எதிரா தமிழர் கூட்டமைப்பு இயங்குது. ஆனா 'சைக்கிள் கொடுக்குறோம், தையல் மெஷின் கொடுக்குறோம், கடல் தொழில் பாக்க சிலிண்டர் கொடுக்குறோம்னு சொல்லி ஓட்டு கேக்குறாங்க. ஏற்கெனவே எங்கட மக்கள் ஆர்மியோட தாக்குதல்ல கை, கால் இழந்துகிடக்காங்க. கை இழந்தவனுக்கு சைக்கிளையும், கால் இழந்தவங்களுக்கு தையல் மெஷினும் கொடுக்குறதால என்ன கிட்டும்? எங்கட கோரிக்கை எல்லாம் இப்ப இதுதான்... எங்கட மக்கள அவங்க சொந்த இடத்துல குடியேற அனுமதி கொடுக்கணும்! அவங்க ஆட்களுக்குக் கொடுக்​குற உரிமைகளையும் சலுகைகளையும் எங்கட மக்களுக்கும் கொடுக்கணும்! வதை முகாமில விசாரணைக் கைதியா இருக்கிறவங்களை (அவங்கள்ல எத்தனை பேர் இப்ப உயிரோட இருக்காங்கன்னே தெரியல) விடுதலை செய்​யணும். இது நடந்தாத்தான் எங்கட பிரச்னை தீர்ந்ததா சொல்ல முடியும்!'' என்றார் சோகமாக.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றி அவர்களிடம் கேட்​டோம். ''பிரபாகரன் கொல்லப்பட்டார்னு இலங்கை ஆர்மி சொல்றதை ஏத்துக்க முடியாது. நேருக்கு நேர் சண்டை நடக்கும்போது எதிராளிகளை ஊடறுத்துச் செல்லும் வலிமைகொண்டவங்க விடுதலைப் புலிகள். அதனால், அரசியல் தீர்வுக்கான ஆட்களைக் களத்தில விட்டுட்டு, மறைவா இருக்கார் பிரபாகரன். அரசியல் தீர்வு கிட்டலைன்னா... நிச்சயம் ஆயுதப் போர் மீண்டும் நடக்கும்!'' என்றவர், ''என்னோட போட்டோவை மட்டும் போட்டுறாதிங்க!'' என்ற வேண்டுகோளுடன் முடித்தார்.
அந்தோணியார் திருவிழாவின்போது சிலுவைப்பாடு நிகழ்ச்சி நடந்தது. இதில் உரையாற்றிய இரு நாட்டுப் பங்குத் தந்தையர்கள் 'இழப்பு, துயரம், நம்பிக்கை� போன்ற தலைப்புகளை மையமாகவைத்துப் பேசியது, இலங்கை மக்களின் மனநிலையைச் சொல்வதாகவே இருந்தது. இதுபற்றி நம்மிடம் பேசிய முன்னாள் முதன்மை குரு அமல்ராஜ், ''அரசுகளின் ஆதரவின்றி ஏதோ ஒரு குற்றச் செயல்போல் நடந்து வந்தது கச்சத் தீவுத் திருவிழா. தற்போது அந்த நிலை மாறி, இரு நாட்டு அரசுகளின் பங்களிப்புடன் இந்த விழா நடக்கிறது. திருப்பலியில் கலந்துகொண்ட ஈழத் தமிழர்கள் ஒருவித பயத்துடனேயே காணப்பட்டனர். இலங்கையில் இருந்து வந்திருந்த பங்குத் தந்தையர்கள் இரண்டு விஷயங்களை எங்களுடன் பகிர்ந்துகொண்டனர். முதலாவது, இன்னும் ஈழத் தமிழர்களுக்கான தீர்வு கிடைக்கவில்லை என்பது. இரண்டாவது, தமிழக மீனவர்களால் ஈழத்து மீனவர்களுக்கு ஏற்படும் தொழில் பாதிப்பு. இதை சரிசெய்ய வேண்டும். அப்போதுதான் ஈழத் தமிழர்களுக்கு நிம்மதி கிடைக்கும்!'' என்கிறார்.
புத்தனின் பூமியில் இருந்து... யேசுவின் திருவடியில் வைக்கப்படும் இந்தப் பிரார்த்தனைகள் நிறைவேறட்டும்!
நன்றி:விகடன்.

ஸ்ரீலங்காவிற்கான நிதி உதவி நிறுத்தம்.

சிறீலங்காவின் சுற்றுச்சூழல் அபிவிருத்திக்கு வழக்கப்படுவதாக தீர்மானிக்கப்பட்ட 30 மில்லியன் டொலர் கடன் உதவி நிறுத்தப்படுவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
சிறீலங்காவின் சுற்றுச்சூழல் அபிவிருத்திக்கு 30 மில்லியன் டொலர்களை வழங்குவதாக உலக வங்கி 2009 ஆம் ஆண்டு தெரிவித்திருந்தது. அதற்கான கூட்டம் ஒன்று கடந்த மாதம் 21 மற்றும் 22 ஆம் நாட்களில் நடைபெறவிருந்தது.
ஆனால் தமது அபிவிருத்தி திட்டங்களில் சில மாற்றங்களை மேற்கொள்ளவுள்ளதாக சிறீலங்கா அரசு தெரிவித்ததை தொடர்ந்து உலக வங்கி தனது நிதி உதவியை நிறுத்தியுள்ளது.
இதனிடையே, வெள்நாட்டு நிறுவனங்கள் அபிவிருத்திக்கு என வழங்கும் நிதிகளை சிறீலங்கா அரசு தனது தேவைகளுக்கு பயன்படுத்தி வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

23 மார்ச் 2011

தமிழினியை தொடர்ந்து தடுத்து வைக்க ஸ்ரீலங்கா நீதிமன்றம் உத்தரவு!

தமிழீழ அரசியற்துறையின் மகளிர் பிரிவு பொறுப்பாளராக விளங்கிய தமிழினியை எதிர்வரும் மே,9ம் திகதிவரை தொடர்ந்தும் விளக்கமறியவில் வைக்குமாறு ஸ்ரீலங்காவின் கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழினி எனப்படும் சுப்பிரமணியம் சிவகாமியை நேற்று நீதிமன்றில் ஆஜர்படுத்திய ஸ்ரீலங்கா இரகசியப் பொலிஸார் அறிக்கை ஒன்றையும் சமர்பித்தனர்.
குறித்த அறிக்கையை பரிசீலித்த கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. சட்டமா அதிபர் வழங்கும் ஆலோசனைக்கு அமைய தமிழினி குறித்து எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இரகசியப் பொலிஸார் நீதிமன்றிற்கு அறிவித்துள்ளனர். வன்னி இறுதிக் கட்ட யுத்தத்தின் போது அரச படைகளிடம் சரணடைந்த தமிழினியை இரகசியப் பொலிஸார் கைது செய்து தடுத்து வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.நாவைக் கண்டித்த தமிழீழ அரசின் பிரதிநிதி.

இன்று லிபியா விடயத்தில் காட்டிய அவசரத்தினை அன்று தமிழர் விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபை வெளிக்காட்டவில்லை என ஐ.நா. மனித உரிமைகள் சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதி சிறிசஜீதா சிவராஜா குற்றஞ்சாட்டினார்.
ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையின் 16வது கூட்டத் தொடரில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகளான சுகிந்தன் முருகையா, ஜனார்த்தனன் புலேந்திரன்(சந்தோஸ்), சிறிசஜீதா சிவராஜா ஆகியோர் பங்கெடுத்துள்ளனர்.
22 மார்ச் 2011 - செவ்வாய்கிழமை இடம்பெற்ற பொது நிலவரங்களுக்கான பிரிவில், தமிழர் பிரதிநிதி சிறிசஜீதா சிவராஜா ஆற்றிய உரையில், ஆயதப்போர்கள் இடம்பெறும் சூழல்களில் பெரும் இனப்படுகொலைகள் இடம்பெறும் வாய்ப்புக்கள் உள்ளது பற்றி, சர்வதேச சமூகம் விழிப்புடன் இருத்தல் வேண்டும் எனப் பல ஆண்டுகளுக்கு முன்பே, முன்னாள் ஐநா பொதுச்செயலாளர் கொபி அனான் ஆலோசனை கூறியிருந்த போதும், பல்வேறு ஆயதப் போர்ச்சூழல்களில் பொதுமக்கள் மோசமாகப் பாதிக்கப்பட்ட நிலைமை, கவனிப்பாக கையாளப்படவில்லை என்று சுட்டிக்காட்டினார்.
இலங்கைத் தீவில் இடம்பெற்ற போரினை, அதற்கான உதாரணமாக முன்வைத்த சிறிசஜீதா சிவராஜா அவர்கள், தொடர்ந்து தனதுரையில், தமிழர் தாயகப் பகுதியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், மையங்கள், தாக்கி அழிக்கப்பட்டு 100000 மேற்பட்ட மக்கள் போரின் இறுதி வாரத்தில் கொல்லப்பட்டிருக்கலாம் என்று மதிப்பிடப்படுகின்றது. 40000 மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று ஐநா அதிகாரிகளே சொல்லியிருந்த போதும், ஐநா அமைதி காத்துள்ளது.
இன்று செயலாளர் நாயகத்தின் சிறப்புக் குழு போர்க்குற்றங்கள் இடம்பெற்றிருக்கலாம் என்று கூறுகின்றது என்றும், நேரிடையான முறையில் ஐநாவின் அன்றைய செயலற்றதன்மையை தமிழ் பிரதிநிதி எடுத்துரைத்தார்.
இன்று தமிழ்மக்களின் நிலைமை போர்க்காலத்திலும் பார்க்க மோசமாகவுள்ளது என்பதை சுட்டிக்காட்டிய தமிழர் பிரதிநிதி, சிங்கள அரசு, உலகம் முழுவதும் பயணம் செய்து, புலம்பெயர்ந்த தமிழ்சமூகத்தினை குற்றஞ்சாட்டுவதிலும், அவர்களது சனநாயக நடவடிக்கைகளை கொச்சைப்படுத்துவதிலும், கவனம் செலுத்துகின்றது என்றும் நாடுகடந்த அரசு பிரதிநிதி சிறிசஜீதா சிவராஜா சுட்டிக்காட்டினார்;. உலகசமூகம், தமிழ்மக்களிற்கு உதவிடும் என நம்பிக்கையை வெளியிட்ட தமிழர் பிரதிநிதி, ஐநாவின் இனத்துவேசத்திற்கு எதிரான சிறப்புப்பிரதிநிதியும் சிறீலங்காவின் நடவடிக்கைகளை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் வேண்டுகோளை விடுத்தார்.
இறுதியாக, உலக நாடுகள், புலம்பெயர் தமிழ் மக்கள் பிரதிநிதிகளுடன் உரையாடல்களை நிகழ்த்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். கடந்தாண்டு 15வது மனித உரிமைகள் கவுன்சிலின் கூட்டத் தொடரிலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் பங்கெடுத்திருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.

22 மார்ச் 2011

மற்றுமொரு போராளி மர்மச்சாவு!

புனர்வாழ்வென்ற பெயரில் சித்திரவதை சிறை முகாம்களை அமைத்து அங்கு தமிழீழ விடுதலைப் புலி போராளிகளுக்கு கடுமையான சித்திரவதைகளை செய்துவரும் சிங்கள காடைய ராணுவத்தினர் இன்றும் ஒரு போராளியின் மரணத்துக்கு காரணமாகவோ அல்லது இந்த கொலையையே திட்டமிட்டு செய்துள்ளனர் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
பொலநறுவை மாவட்டத்தின் வெலிக்கந்தை புனர்வாழ்வு முகாமில் சிகிச்சை பெற்றுவந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளியான கிளிநொச்சியை சேர்ந்த கந்தசாமி நடேசலிங்கம் (26வயது)என்ற போராளியே தான் சிகிச்சை பெற்று வந்திருந்த அறையில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை மர்மமான முறையில் மரணித்திருந்தார் என்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவித்துள்ளன.
இதே போல் நேற்றும் கிளிநொச்சி முழங்காவிலைச் சேர்ந்த நியூட்டன் என்ற போராளி வவுனியா பம்மை மடு சிறை முகாமில் கிணற்றுக்குள் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்று அரச ஊடகங்களும் அரச ஆதரவு ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருந்த நிலையில் அதிலும் இன்னும் மர்மம் தொடர்வதாகவே நாம் கருதுகிறோம்.

காணாமல் போனோர் தொடர்பாக ஐ.நா.ஆராய்வு.

இலங்கையில் கடத்தப்பட்டுக் காணாமற்போனோர் தொடர்பாக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் தூதரகம் தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. மெக்ஸிக்கோ நாட்டின் தலைநகரான மெக்ஸிக்கோ சிற்றியில் கடந்த 15 முதல் 18 வரையான நான்கு நாள்கள் நடைபெற்ற உயர் மட்ட மாநாட்டில் இந்த விவகாரம் சர்வதேசப் பணிக்குழுவால் விரிவாக ஆராயப்பட்டது என்று ஐ.நா. நேற்று வெளியிட்ட அறிக்கை கூறுகின்றது.
பலவந்தமாகக் காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் மற்றும் தாமாகவே காணாமல்போனவர்கள் தொடர்பில் ஆராயும் ஐ.நாவின் சர்வதேசப் பணிக்குழு கடந்த வாரம் மெக்ஸிக்கோ சிற்றியில் கூடியது.
இதில் காணாமல்போனவர்கள் குறித்த 200க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் குறித்து தீவிர கவனம் செலுத்தப்பட்டன. அவற்றில் 11 முறைப்பாடுகளுக்கு முன்னுரிமை கொடுத்து பணிக் குழு செயற்பட்டது என்று ஐ.நா. அறிக்கை கூறியது.
இலங்கை உட்பட 23 நாடுகளில் காணாமல்போனவர்கள் தொடர்பில் பணிக் குழு, இந்தக் கூட்டத்தொடரில் கவனம் செலுத்தி இருந்தது. காணாமல்போனவர்கள் தொடர்பில் அகதிகளுக்கான ஐ.நா. தூதரகம் விடுத்த அவசரக் கோரிக்கைகள் மற்றும் கடிதங்களுக்கு அரசுகள் எத்தகைய எதிர்வினையாற்றின என்பதையும் சுயாதீனமான மனித உரிமைகள் நிபுணர்கள் 5 பேர் அடங்கிய பணிக்குழு ஆராய்ந்தது.

21 மார்ச் 2011

தடுப்பு முகாம் போராளி நீதி வேண்டி தற்கொலை!

தனது இறப்பு மூலமாவது ஏனைய போராளிகளுக்கு விடுதலை கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி வவுனியா பம்பைமடு தடுப்புமுகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் போராளி ஒருவர் தற்கொலை செய்திருக்கின்றார்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
வன்னியின் இறுதிப் போரின் போது சரணடைந்திருந்த கிளிநொச்சி முழங்காவிலைச் சேர்ந்த நியூட்டன் என்ற போராளி வவுனியா பம்மை மடு தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.
குடும்பத்தில் பெண் பிள்ளைகள் உள்ளமையாலும் குடும்பத்தினைப் பார்ப்பதற்கு எவரும் இல்லை என்ற காரணத்தினாலும் தன்னையும் தன்னைப் போன்ற போராளிகளையும் விடுதலை செய்யுமாறும் தடுப்பு முகாமிற்கு பொறுப்பான அதிகாரிகளிடம் அவர் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.
இரண்டு ஆண்டுகளாகியும் எந்தவித பதிலும் வழங்கப்படாமையை அடுத்து இன்று அதிகாலை 5.00 மணியளவில் பம்பைமடு தடுப்பு முகாமில் உள்ள கிணற்றில் அவர் வீழ்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கின்றார்.
தான் உயிரிழக்கப் போவதாகவும் தனது மரணம் மூலமாவது ஏனைய போராளிகளுக்கு தீர்வு கிடைக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் தனது நண்பர்களிடம் தெரிவித்ததாக தெரியவந்திருக்கின்றது.
குறித்த முன்னாள் போராளி அதிகாலை உயிரிழந்த போதிலும் இன்று முற்பகல் 11.00 மணியளவிலேயே அவரது சடலம் கிணற்றில் இருந்து எடுக்கப்பட்டு வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
சடலத்தைப் பார்வையிடுவதற்கு மஹிந்த ராஜபக்சவின் இணைப்பாளர் சிவநாதன் கிசோர் உட்பட்டவர்கள் தடுப்பு முகாமிற்குச் சென்றிருந்ததாக தெரியவருகின்றது.
இதேவேளை பம்பைமடு தடுப்பு முகாமில் இருந்து வவுனியா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்த மற்றொரு முன்னாள் போராளி ஒருவர் இன்று தப்பிச் சென்றிருப்பதாக பம்பைமடு தடுப்பு முகாம் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

மகிந்தவின் அழுத்தத்தினால்தான் ஜெயலலிதா வைகோவை விலக்கினார்!

மதிமுகவை கூட்டணியை விட்டு ஜெயலலிதா விரட்டியதில் கர்நாடகம் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த இரு நிறுவனங்களுக்கு முக்கிய பங்கு இருப்பதாகப் பேசப்படுகிறது.
முதலில் நாடாளுமன்றத் தொகுதிக்கு ஒரு சட்டமன்றத் தொகுதி என்ற கணக்கில் அதிமுகவிடம் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிய இடங்கள் மொத்தம் 39. இப்படித்தான் அவருக்கு்ம் இரு கட்சிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை ஆரம்பித்தது.
ஜெயலலிதாவின் முன்னாள் உட்கார்ந்து இருக்கிறார்களா.. இல்லை நின்று கொண்டிருக்கிறார்களே என்று யூகிக்க முடியாத அளவுக்கு ‘எஸ் டைப் சேர்’மாதிரியே உட்கார்ந்து தரையை மட்டுமே பார்க்கும் அதிகாரம் கொண்டவர்களான ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகியோர் தான் வைகோவிடம் இந்த 39 தொகுதி பட்டியலை வாங்கிச் சென்றனர். போனவர்கள் போனது தான். அதிமுகவிடமிருந்து அடுத்த 20 நாட்கள் எந்த பதிலும் வரவில்லை.
21வது நாள் திரும்பி வந்த இருவரும் வைகோவிடம், அம்மா உங்களுக்கு 8 தொகுதிகள் தருவதாக சொல்கிறார்கள் என்று சொல்லிவிட்டு, வைகோவிடம் திட்டு விழும் என்று பயந்து அதே வேகத்தில் திரும்பி ஓடிவிட்டனர்.
இதையடுத்து 25 தொகுதியாவது வேண்டும் என்று பதில் அனுப்பினார் வைகோ. அடுத்த இரு நாட்களில் திரும்பி வந்த இந்த இருவரும் ”அண்ணே.. 8 தான் தர முடியும்னு அம்மா சொல்லச் சொன்னாங்க” என்று பழைய ராகம் பாடினர்.
அடுத்த இரண்டு நாட்களில் மீண்டும் வைகோவை சந்திக்க வந்த இந்த இருவரும் நீண்ட நேரமாக பேசாமல் தரையையே பார்த்து தவித்துக் கொண்டிருக்க.. அவர்களைப் பார்த்து பரிதாபப்பட்ட வைகோ.. ”உங்கள் தலைவி என்ன சொன்னார்னு சும்மா சொல்லுங்க.. நான் உங்க மேலே எரிச்சல் பட்டு என்ன ஆகப் போகுது” என்று தைரியம் தந்ததோடு, காபியும் தந்தார்.
காபி டம்ளரை கையில் கூட எடுக்காமல், அண்ணே, அண்ணே என்று தயங்கிய இருவரும்.. மொதல்ல 8 தொகுதினு சொன்ன அம்மா இன்னிக்கி காலைல எங்களை கூப்பிட்டு 7 இடம் தர முடியும்னு உங்கிட்ட சொல்லிட்டு வரச் சொன்னாங்க என்று கூறிவிட்டு, அதே வேகத்தில் அந்த இடத்திலிருந்து வேகமாக வெளியே காரில் ஏறிப் பறந்துவிட்டனர்.
அவர்கள் போய் பல மணி நேரம் ஆகியும் அவர்கள் சொன்ன தகவல் தந்த அதிர்ச்சியிலிருந்து வைகோ மீளவில்லை என்கிறார்கள். இது குறித்து தனக்கு நெருக்கமான நிர்வாகிகளிடம் மட்டும் வைகோ பகிர்ந்து கொண்டார். அப்போது அவர்கள், ”நம்மை கூட்டணியை விட்டு வெளியே போகுமாறு ஜெயலலிதா மறைமுகமாகச் சொல்கிறார்” என்பதை யூகித்து வைகோவிடம் சொல்ல, நானும் அதே தான் நினைக்கிறேன் என்றிருக்கிறார்.
மீண்டும் மீண்டும் 9,8,7,8,7,9,7 என்று அதிமுக தரப்பிலிருந்து தொகுதிகளின் எண்ணிக்கை ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை மாறிக் கொண்டே இருக்கவே வைகோ என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தார். இப்படி அவரை அதிமுக டார்ச்சர் செய்ததற்குக் காரணம், அவர் கூட்டணியை விட்டு வெளியேற வேண்டும் என்பது தான். ஆனால், அவரோ கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாகப் போய்க் கொண்டுள்ளதாக தனது கட்சி நிர்வாகிகள் மூலம் அறிவிப்பு வெளியிட்டு ஜெயலலிதாவை கடுப்பாக்கினார்.
சரி.. இனியும் வைகோ தானாகவே போக மாட்டார் என்பதால் தான் 160 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலை ஜெயலலிதா வெளியிட்டார். இதற்கு முக்கிய காரணம் இரு தொழிலதிபர்கள் அதிமுகவுக்கு நீட்டியுள்ள ‘உதவி’ தான் என்கிறார்கள்.
தூத்துக்குடியில் ஒரு ஆலைக்கு எதிரான வைகோ நடத்திய போராட்டமும் இதனால் பாதிக்கப்பட்ட அந்த ஆலையினர் அதிமுக தரப்பை சந்தித்துப் பேசியதாகவும் சொல்கிறார்கள்.
இன்னொருவர் ஜெயலலிதாவுக்கு அவ்வப்போது ஹெலிகாப்டர், விமானம் தந்து
உதவும் கர்நாடக தொழிலதிபர். விடுதலைப் புலிகள் ஒடுக்கப்பட்ட நிலையில், இவர் தனது நிறு​வனத்தை இலங்கையில் விரிவாக்கவுள்ளார். இதற்காக இவருக்கு உதவிகள் செய்ய முன் வந்துள்ள இலங்கை அதிபர் ராஜபக்சே தரப்பு, இந்தத் தொழிலதிபர் மூலமாக ஜெயலலிதாவுக்கு நெருக்கடி தந்து வைகோவை கூட்டணியிலிருந்து வெளியே விரட்டிவிட்டுவிட்டது என்கிறார்கள்.
வைகோவை கூட்டணியிலிருந்து வெளியேற்றினால் திமுகவின் பண பலத்தை எதிர்கொள்வதற்கான ‘சக்தியை’ இவர்கள் அதிமுகவுக்கு நீட்ட முன் வந்துள்ளனர். மேலும் ராஜபக்சே தரப்பும் கூட கூட அதிமுகவுக்கு மறைமுகமாக உதவலாம் என்கிறார்கள்.

தேசத்தின் அன்னைக்கான நினைவு வணக்கம்!

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’’உலகெங்கும் வாழும் தமிழர்கள் நெஞ்சத்தில் போற்றிடும் அன்னை பார்வதி அம்மையார் 31-வது நினைவு நாளாகிய மார்ச் 22 அன்று, தமிழ் ஈழத்திலும், தரணியில் தமிழர்கள் வாழும் இடங்கள் அனைத்திலும், அன்னையாரின் அந்தியேட்டி நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தலைநகர் சென்னையில், வங்கக்கடல் அலைகளில் மலர்களைத் தூவி நீர்க் கடன் ஆற்றும் நிகழ்ச்சி, பழ.நெடுமாறன் தலைமையில் நடைபெற இருக்கிறது.
மாவீரர் திலகம் பிரபாகரனை தன் வயிற்றில் சுமந்த நமது அன்னை பார்வதி அம்மையாரின் ஈமச்சாம்பல், ஈழத்தில் இருந்து வந்து சேர்ந்து இருக்கிறது.
அதனை, வங்கக் கடலில் தூவிட இருக்கிறோம். அதே நேரத்தில், கடலுக்கு அப்பால் ஈழத்தில், கண்ணீர் கடலில் தத்தளிக்கும் தமிழ் ஈழ மக்களைப் பாதுகாத்து, அவர்கள் மானத்தோடும், உரிமையோடும் வாழ, அவர்களின் தாயக மண்ணை மீட்டெடுத்து, சுதந்திரத் தமிழ் ஈழ தேசம் அமைத்திட, அன்னை பார்வதி அம்மையாரின் நினைவாக வீர சபதம் ஏற்போம்.
எனவே, நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 4 மணிக்கு பத்தினித்தெய்வம் கண்ணகி சிலை அருகில், தமிழ் ஈழ உணர்வாளர்கள் அனைவரும் வருகை தந்து, நம் அன்னையின் புகழ் அஞ்சலியில் பங்கு ஏற்குமாறு அன்போடு வேண்டுகிறேன்’’ என்று கூறியுள்ளார்.

20 மார்ச் 2011

மட்டக்களப்பில் நிலம் வெடித்துள்ளது!

மட்டக்களப்பு நகரில் திடீரென நிலம் வெடித்துள்ளதாக மக்கள் அறிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு ரயில் நிலையத்திற்கு அருகாமையில் இவ்வாற நிலம் வெடித்துள்ளதாகவும், இந்த வெடிப்புக்களிலிருந்து நீர் வெளியேறி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நிலகீழ் நீர் இவ்வாறு வெளியேறி வருவதாக அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் ஊகம் வெளியிட்டுள்ளது.
பௌர்ணமி தினத்தினால் இவ்வாறு நிலக்கீழ் நீர் வெளியேறியிருக்கலாம் என அனர்த்த முகாமைத்துவ நிறுவன அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
அனர்த்த முகாமைத்துவ நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குறித்த பிரதேசத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனினும் பாரியளவில் எவ்வித ஆபத்துக்களும் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

நிபுணர் குழு அறிக்கை பகிரங்கப்படுத்தபடவேண்டும் என்கிறது ஐரோப்பிய ஒன்றியம்.

சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் ஆலோசனைகளை வழங்குவதற்காக ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் பான் கீ மூனினால் அமைக்கப்பட்ட ஆலோசனைக்குழுவின் அறிக்கை பொதுமக்களுக்கு வெளியிடப்பட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இது தொடாபில் மேலும் தெரிவருவதாவது:
ஐ.நாவின் போர்க்குற்ற ஆலோசனைக்குழு தனது அறிக்கையை பூர்த்தி செய்துள்ளது. அதில் சிறீலங்கா தொடர்பில் மிகவும் அழுத்தமான தகவல்கள் உள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த இராஜதந்திரி ஒருவர் தெரிவித்துள்ளார்..
அதாவது ஐ.நாவின் அறிக்கை சிறீலங்கா அரசுக்கு சாதகமானது அல்ல என அவர்கள் தெரிவித்துள்ளார்.
ஆனால் ஐ.நாவின் அறிக்கை பொதுமக்களுக்கு வெளிப்படையாக வெளியிடப்பட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் பான் கீ மூனுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது.
எனினும் இந்த மாதம் சமர்ப்பிக்கப்படும் இந்த அறிக்கை பொதுமக்களின் பார்வைக்கு அளிக்கப்படுமா என்பது தொடர்பில் இதுவரை முடிவுகள் மேற்கொள்ளப்படவில்லை.

19 மார்ச் 2011

புலிகளின் தலைவர் பற்றிய செய்தி உண்மைதானா என்று எனக்குத்தெரியாது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டுள்ளார் எனக் கூறுகிறார்கள். இதை யார் நேரில் கண்டது என ஸ்ரீலங்கா பிரதமர் டி.எம்.ஜயரத்ன கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் கொல்லப்பட்டு விட்டார் எனத் தெரிவித்தார்கள். உண்மையில் கொல்லப்பட்டது அவர் தானா என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது.
இவையல்லாம் நான் கேள்விப்பட்டவைகளே தவிர நேரில் சென்று எதனையும் பார்க்கவில்லை.
இதேபோன்று தான் அண்மையில் என்னால் தெரிவிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் பயிற்சி முகாம்கள் தமிழகத்தில் இயங்கி வருகின்றது என்ற தகவலும் ஆகும்.
பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டிருந்ததையும் யாரோ சொன்னதையும் தான் தெரிவித்தேன் என கண்டியில் அண்மையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் டி.எம்.ஜயரத்ன தெரிவித்திருக்கின்றார்.

பூமிக்கு அருகில் நிலா,மக்கள் பீதியடையத்தேவையில்லை!

இன்று சந்திரன் பூமிக்கு அருகில் வருவதால் மிகப் பெரிய அளவில் காட்சியளிப்பதைக் காணக் கூடியதாக இருக்கும். இவ்வாறு பூமிக்கு அருகில் வருவதால் தான், பூமியில் தற்போது பல்வேறு அசம்பாவிதங்கள் நிகழ்கின்றன என்று பரப்பப்படும் வதந்திகள் பொய்யானவை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.பூமியை சந்திரன் நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது. இந்த நீள்வட்டப்பாதை இரு இடங்களில் பூமிக்கு நெருக்கமாக வரும். அந்தப் பகுதியில் சந்திரன் வரும் போது வழக்கத்தை விடப் பெரிதாகத் தெரியும்.
இன்று பூமியில் இருந்து மிகக் குறைந்த தொலைவான 3,56,577 கி.மீ., தொலைவில் சந்திரன் தோன்றும். அதனால், அது உருவ அளவில் சற்றுப் பெரிதாகவும், அதிக ஒளியுடையதாகவும் இருக்கும். கடந்த 18 ஆண்டுகளுக்குப் பின், இது போல சந்திரன் பூமியை நெருங்கி வருவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
சமீபத்தில், ஜப்பானில் நிகழ்ந்த நிலநடுக்கம், சுனாமி ஏற்பட்டது, சந்திரன் பூமிக்கு மிக அருகில் வருவதால் தான் என்ற கருத்து மக்களிடையே நிலவி வருகிறது. ஆனால், இது வழக்கமான ஒன்று என்றும், இதனால் மக்கள் பீதியடையத் தேவையில்லை என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜெனீவாவில் திணறுகிறது ஸ்ரீலங்கா!

ஜெனீவாவில் தொடர்ந்து நடைபெற்றுவரும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரிலும், அரசசார்பற்ற நிறுவனங்களின் கூட்டங்களிலும் சிறீலங்கா தொடர்பான நிலை தொடர்ந்து ஆராயப்பட்டு வருகின்றது.
சிறீலங்காவில் தொடரும் வன்முறைகள், அங்கு காணாமல்போனவர்கள், ஊடகசுதந்திரம், படுகொலைகள் தொடர்பில் பெருமளவான அரசசார்பற்ற நிறுவனங்கள் கவனம் செலுத்தி வருகின்றன.
சிறீலங்காவில் இருந்து வருகை தந்துள்ள மனித உரிமை செயற்பாட்டாளர்களான திருமதி நிமல்கா பெர்ணான்டோ, திருமதி சுனிலா அபயசேகரா, திரு பாக்கியசோதி சரணவமுத்து, மறைந்த ஊடகவியலாளர் பிரகீத் எக்நலிகொடவின் மனைவி சந்தியா எக்நலிகொட ஆகியோhருடன் கத்தோலிக்க அமைப்பான “பக்ஸ் றோமலின்” அமைப்பின் பிரதிநிதி திரு பேதுரு ஜெகதாசன், தமிழர் மனிதர் உரிமைகள் மையத்தின் பொதுச்செயலாளர் திரு கிருபாகரன் ஆகியோர் கலந்துகொண்டு சிறீலங்காவில் ஏற்பட்டுள்ள மனித உரிமை மீறல்கள், மனிதாபிமான நெருக்கடிகள் குறித்து ஆராய்ந்துள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் பேசிய ஹங்கோரியின் பிரதிநிதி சிறீலங்கா தொடர்பில் பல கேள்விகளை எழுப்பியிருந்தார். ஆனால் அதற்கு பல தவறான தகவல்களுடன் ஜெனீவாவுக்கான சிறீலங்கா பிரதிநிதி ஹெனுகா செனிவரத்தினா பதில் அளித்திருந்தார்.
ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் மேலும் ஒருவாரம் நடைபெறவுள்ளபோதும், சிறீலங்கா தொடர்பான விடயங்கள் ஆராயப்படும் சாத்தியங்கள் குறைவாகவே உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே, சிறீலங்காவை பொறுத்தவரை அங்கு நீதி அமைச்சு மற்றும் வெளிவிவகார அமைச்சு என்பன தற்போது செயலிழந்துள்ளதாக ஐ.நாவின் மண்டபத்தில் நடைபெற்ற அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் கூட்டத்தொடரில் பேசிய பிரான்ஸ் நாட்டை தளமாகக் கொண்ட தமிழர் மனிதர் உரிமைகள் மையத்தின் பொதுச்செயலாளர் திரு கிருபாகரன் தெரிவித்துள்ளார்.
நீதி அமைச்சு மற்றும் வெளிவிவகார அமைச்சு ஆகியவற்றின் செயற்பாடுகள் சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சகத்திடம் சென்றுள்ளதகவும், அவை தொடர்பிலான தீர்மானங்களை சிறீலங்கா பாதுகாப்புச் செயலாளரும், சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சாவின் சகோதரருமான கோத்தபாயா ராஜபக்சாவே மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

18 மார்ச் 2011

மிரட்டினார் ஸ்ரீரங்கா சல்யூட் அடித்தார் கனகரத்தினம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவத்தினை பிஸ்ரல் முனையில் மிரட்டிய பிரஜைகள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஸ்ரீரங்கா தனக்கு சல்யூட் அடிக்குமாறு மிரட்டி சல்யூட் அடிக்கவைத்திருக்கின்றார்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாந்தை கிழக்கு அம்பாள்புரம் பகுதியில் தேர்தல்ப் பரப்புரைக்காகச் சென்ற ஸ்ரீரங்காவின் குழுவினருக்கும், அமைச்சர் றிசாட் பதியுதீன் குழுவினருக்கும் இடையில் முறுகல் இடம்பெற்றுள்ளது.
அம்பாள்புரம் பகுதியில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுகின்ற ராஜன் என்பவரது விளம்பரப் பதாதை எழுதித் தொங்கவிடப்பட்டிருக்கின்றது. அந்த இடத்திற்குச் சென்ற ரங்கா குழுவினர் குறித்த பதாதையினைக் கிழித்தெறிந்திருக்கின்றனர். பதாதை கிழிக்கப்பட்ட பொழுது அங்கிருந்த பதாதைக்குச் சொந்தமான ராஜன் என்பவர் அதனைத் தடுத்து நிறுத்த முற்பட்டிருக்கின்றார். இதனை அடுத்து ரங்கா குழுவினருக்கும், றிசாட் குழுவினருக்கும் இடையில் மோதல் இடம்பெற்றிருக்கின்றது.
ராஜன் என்பர் அம்பாள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதால் ரங்கா குழுவினர் தாக்க முற்பட்டதை அடுத்து அங்கு மக்கள் திரண்டு ரங்கா குழுவினரைத் தாக்கியிருக்கின்றனர். ரங்கா குழுவினர் தாக்குதலில் ஈடுபட்டிருந்தபோது அவர்கள் சென்றிருந்த வாகனச் சாரதி அவர்களைக் கைவிட்டுவிட்டு வாகனத்தை எடுத்துக்கொண்டு ஓடியிருக்கின்றார். இதனை அடுத்து ரங்கா குழுவினர் மீதான தாக்குதல் உக்கிரமடைந்து அதில் அங்கம் பெற்றிருந்தவர்கள் மோசமாக தாக்குதலுக்கு உட்படிருக்கின்றனர்.
இந்தச் சம்பத்தின் தொடராக முன்னாள் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போது றிசாட் பதியுதீனின் சகாவுமான சதாசிவம் கனகரத்தினத்திற்கும் பிரஜைகள் முன்னணித் தலைவர் ஸ்ரீரங்காவிற்கும் இடையில் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. றிசாட் பதியுதீனின் சகோதரனும் சதாசிவம் கனகரத்தினமும் ஸ்ரீரங்காவுடன் முரண்பட்டிருக்கின்றனர். சம்பவத்தினை அடுத்து ஆத்திரமடைந்த ஸ்ரீரங்கா கனரத்தினத்திற்கு பிஸ்ரலைக் காட்டி சுட்டுப்போடுவேன் என்று மிரட்டியதுடன். தனக்கு சல்யூட் அடிக்குமாறும் அச்சுறுத்தியிருக்கின்றார். அதன் பின்னர் கனரத்தினம் ஸ்ரீரங்காவிற்கு சல்யூட் அடித்திருக்கின்றார்.
இதேவேளை இன்று காலை மாந்தை கிழக்கு மக்களைச் சந்தித்த ரங்கா குழுவினர் மக்களை தமக்கு வாக்களிக்காது விடின் கூட்டமைப்பிற்கு வாக்களிக்குமாறும் றிசாட் குழுவினருக்கு வாக்களிக்க வேண்டாம் என்றும் கோரிக்கைவிடுத்ததாக வன்னியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முள்ளிவாய்க்காலில் இன அழிப்பை இந்தியாவே முன்னின்று நடத்தியது!

வன்னியில் போர் உக்கிரமடைந்தபோது அதனை தடுப்பதற்கு அனைத்துலக சமூகம் முற்பட்டபோது அதனை தந்திரமாக இந்தியா தடுத்ததுடன், இறுதி நேரத்தில் நடைபெற்ற படுகொலைகளுக்கு இந்தியாவே காரணம் என விக்கிலீக்ஸ் இணையத்தளம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
2009 ஆம் ஆண்டு வன்னியில் போர் உக்கிரமாக நடைபெற்றபோது அதனை நிறுத்துவதற்கு மேற்குலகம் முற்பட்டபோதெல்லாம் இந்தியா தடுத்துவிட்டது. அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகள் போரை நிறுத்துவதற்கு முற்பட்டிருந்தன. ஆனால் அதற்கு இந்தியா தனது எதிர்ப்பை தெரிவித்திருந்தது.
2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமளவில் அமெரிக்க அதிகாரிகளை தொடர்புகொண்ட இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம் கே நாராயணன் நாம் கூறும் வரை வாயை முடிக்கொண்டு இருக்குமாறு எச்சரிக்கையும் விடுத்திருந்ததாக அமெரிக்க தூதரகத்தின் தகவல்களை மேற்கோள்காட்டி விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
மனிதாபிமான நெருக்கடிகள் குறித்து அனுதாபம் தெரிவிப்பது போல இந்தியா நடித்தபோதும், அது சிறீலங்கா அரசின் போருக்கு ஊக்கம் அளித்தே வந்திருந்தது. ஐக்கிய நாடுகள் சபை ஊடாகவோ அல்லது வெளிநாடுகளின் பொதுமன்னிப்பு ஊடாகவோ விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்கள் காப்பாற்றப்படும் ஒப்பந்தங்களை எதனையும் மேற்கொள்ளவேண்டாம் என இந்தியா மகிந்தாவுக்கு கடும் உத்தரவுகளையும் வழங்கியிருந்தது.
மேற்குலக இராஜதந்திரிகளை ஏமாற்றுவதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி மற்றும் இந்திய வெளிவிவகாரச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் மற்றும் பாதுகாப்பு ஆலோசகர் எம் கே நாராயணன் ஆகியோர் சிறீலங்காவுக்கு சென்றதுடன், மனிதாபிமான நெருக்கடிகள் குறித்தும் அறிக்கைகளை வெளியிட்டிருந்தனர்.
ஆனால் இந்த அறிக்கைகள் மேற்குலகத்தை ஏமாற்றும் நோக்கத்துடன் வெளியிடப்பட்டவை. அவர்கள் இரகசியமாக சிறீலங்கா அரசுக்கு ஆதரவுகளை வழங்கியதுடன், ஐ.நாவோ அல்லது வெளிநாடுகளின் ஆதரவுடனோ போரை நிறுத்தும் ஒப்பந்தங்களை மேற்கொள்ளவேண்டாம் என சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சாவுக்கு கடும் உத்தரவுகளையும் இந்தியா விடுத்திருந்தது.
2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சிறீலங்காவுக்கு சென்ற இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் பயணம் தொடர்பான தகவல்களை சிறிலங்காவுக்கான இந்திய தூதுவர் விக்ரம் மிஸ்ரி சிறீலங்காவில் உள்ள அமெரிக்க தூதுவருக்கு வழங்கியிருந்தார்.
விடுதலைப்புலிகளுடன் நடைபெற்றுவரும் போரை நிறுத்துவதற்கு ஐ.நாவின் உதவிகள் தேவையற்றது என சிறீலங்கா அரசு தம்மிடம் தெரிவித்துள்ளதாக இந்திய வெளிவிவகாரச் செயலாளர் மேனன், அமெரிக்க அதிகாரி பீற்றர் பேலேஜ் இற்கு 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தெரிவித்திருந்தார்.
போரை நிறுத்துவதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்ற தோற்றப்பாட்டை அவர்கள் அமெரிக்காவுக்கு ஏற்படுத்த முனைந்திருந்தனர்.
அதனை தொடர்ந்து மூன்று வாரங்களின் பின்னர் சிறீலங்காவுக்கான அமெரிக்காவின் சிறப்புத் தூதுவர் டெஸ் பிரவுணி புதுடில்லிக்கு சென்றபோது, மேனன் மற்றும் நாரயணன் ஆகியோர் தாம் சிறீலங்கா மீது அழுத்தங்களை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
போரில் மகிந்தா வெற்றிபெற்றால் அவர் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை உடனடியாகவே முன்வைப்பார் என அவர்கள் பிறவுணியை சமாதானப்படுத்தியும் உள்ளனர்.
2009 ஆம் ஆண்டு மே மாதம் 15 அம் நாள் இந்திய வெளிவிவகாரச் செயலாளரை தொடர்புகொண்ட அமெரிக்க அதிகாரி ஊடனடியாக மனிதாபிமான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தபோதும், அதனை இந்தியா நிராகரித்து விட்டதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

த,தே,கூட்டமைப்பு பல சபைகளை கைப்பற்றியுள்ளது.

நேற்று நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 12 சபைகளைக் கைப்பற்றியுள்ளது.
வவுனியா வடக்கு
வவுனியா தெற்கு
வவுனியா செட்டிகுளம்
மன்னார் நகரசபை
மன்னார் பிரதேச சபை
மன்னார் நாநாட்டான்
முல்லைத்தீவு மாந்தை மேற்கு
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு
அம்பாறை நாவிதன்வெளி
அம்பாறை ஆலையடிவேம்பு
திருகோணமலை நகரசபை
திருகோணமலை ஈச்சிலம்பற்று
ஆகிய உள்ளூராட்சி சபைகளே அவைகளாகும் அத்துடன் மூதூரில் மூன்று ஆசனங்களைப் பெற்று எதிர்க் கட்சியாக தெரிவாகி உள்ளது.
இந்த தேர்தல் தொடர்பாக கருத்துத் தெரிவித்த மட் மாவட்ட தமிழ் தேசி கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் அவர்கள் கூறும்போது.
இந்த அரசாங்கம் தமிழ் தேசிய கூட்டமைப்பை தோற்கடிப்பதற்கு பல முயற்சிகளையும் மேற்கொண்டது ஆனால் தமிழ் மக்களின் அரசியல் சக்தி தமிழ் தேசிய கூட்டமைப்புத்தான் என்பதனை மீண்டும் மக்கள் நிரூபித்திருக்கிறார்கள்.
நடந்து முடிந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு முதலாவதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இரண்டாவது பெரிய அரசியல் சக்தியாகவும் திகழ்கின்றது எனவே தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயமாக விரைவான முறையில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் அரசு பேசுவதற்கான ஆணையை தமிழ் மக்கள் வழங்கி இருக்கிறார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

17 மார்ச் 2011

இப்படியும் ஈனப்பிறவிகள்!

அரியாலை பூம்புகார் பகுதியில் கன்று ஈன்று இரு நாட்களே ஆன பசு மாட்டை கொலை செய்து அதன் இறைச்சியையும் கன்றையும் ஆட்டோ ஒன்றில் ஏற்றிச் சென்ற பரிதாபிமான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு தாய்ப் பசுவைக் கொலை செய்து அதன் இறைச்சியையும் கன்றுக் குட்டியையும் கடத்திச் சென்ற மூன்று திருடர்களும் ரோந்தில் சென்ற ஸ்ரீலங்கா படையினரிடம் வசமாக மாட்டிக் கொண்டார்கள்.
அவர்களைச் செம்மையாக நையப்புடைத்த படையினர் அவர்கள் கொண்டு வந்த பசுவின் தோல் மற்றும் உறுப்புக்களால் அவர்களை அலங்கரித்து அடித்து விரட்டி ஊர்வலமாக வீதி வழியே கொண்டு திரிந்த காட்சியை பொதுமக்கள் கண்டு களித்தார்கள்.
உடனடியாக அவர்களை தமது முகாமிற்கு கொண்டு சென்ற ஸ்ரீலங்கா படையினர் அவர்களை செம்மையாக கவனிக்கவே தங்களால் திருடப்பட்டு கொலை செய்யப்பட்ட பசு மாட்டின் கழிவு, உறுப்புகள் என்பனவற்றை புதைத்த இடத்தையும் உரிமையாளரையும் அடையாளம் காட்டியுள்ளார்கள்.

வேட்டைக்குசென்ற முன்னாள் போராளியை காணவில்லை!

வன்னி மல்லாவி கள்ளுவான் காட்டுப்பகுதியில் வேட்டைக்குச் சென்ற விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் காணாமல் போயிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. கடந்த திங்கட்கிழமை காலை 8 மணியளவில் முயல் வேட்டைக்கென தாங்கள் வைத்த பொறிகளில் முயல்கள் அகப்பட்டிருக்கின்றனவா என பார்ப்பதற்காக இவர் வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றதாக மனைவி கூறுகின்றார்.
விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினரான இவர் புனர்வாழ்வளிக்கப்பட்டு அண்மையிலேயே விடுவிக்கப்பட்டிருந்தார். புனர்வாழ்வு முகாமின் மற்றுமொரு பெண் போராளியை இவர் விரும்பியிருந்ததனை அடுத்து படையினரின் ஏற்பாட்டில் அவருக்கு திருமணமும் செய்து வைக்கப்பட்டது. இவரது மனைவி தற்பொழுது கர்ப்பவதியாக உள்ளார்.
25 வயதுடைய புஸ்பராஜா விஜயபாகு எனும் முன்னாள் போராளியே காணாமல் போயிருக்கின்றார். திங்கட்கிழi காலை மல்லாவியில் இருந்து புறப்பட்டதை அவரது மனைவி உறுதிப்படுத்தியிருக்கின்றார். இந்நிலையில் காட்டுக்குள் சென்ற இவர் திரும்பியிருக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. இவருக்கு என்ன நடந்திருக்கலாம் எனும் சர்ச்சைகள் தொடர்கின்றன.

டக்ளஷை புகழ்ந்து பாடிய சாந்தனும் சுகுமாரும்!

விடுதலைப்புலிகளினால் முன்னெடுக்கப்பட்ட தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் ஆரம்பம் முதல் அதன் இறுதிக்காலம் வரை தேசிய எழுச்சிப் பாடகர்களாக செயலாற்றிய சாந்தன், சுகுமார் ஆகியோர் பாடிய ‘தேவாவின் கானங்கள்’ இறுவட்டு வெளியீட்டு நிகழ்வு நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளது.தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் தொடக்கம் பெற்றது முதல் அதன் இறுதிக்காலம் வரையில் பலநூற்றுக் கணக்கான பாடல்களைப் பாடியிருந்த தாயகத்தின் முன்னணிப் பாடகர்களான சாந்தன், சுகுமார் ஆகியோர் பிரதானமாகப் பாடிய பாடல்களை உள்ளடக்கியதாக ஈ.பி.டி.பி.யினரின் இறுவட்டு வெளிவந்திருக்கின்றது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஈபிடிபி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இறுவட்டினை வெளியிட்டுவைத்ததுடன், பாடகர்கள் சாந்தன், சுகுமார் உட்பட்டவர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விருதுகளையும் வழங்கியிருக்கின்றார்.
வன்னிப் போர் தீவிரம் பெற்றிருந்த 2009 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பாடகர் சுகுமார் அம்பலவன் பொக்கணை கிராமம் ஊடாக இராணுவ ஆக்கிரமிப்புப் பிரதேசத்தினைச் சென்று சேர்ந்து படையினரிடம் சரணடைந்திருந்தார். ஆனாலும் அவர் தடுப்பு முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கவில்லை.
பாடகர் சாந்தன் 2009ம் ஆண்டு மேமாதம் 18ம் திகதி இராணுவத்தினரிடம் சரணடைந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டு இராணுவத்தினரின் தடுப்பு முகாமில் இருந்து கடந்த ஆண்டு இறுதிப் பகுதியிலேயே விடுவிக்கப்பட்டிருந்தார்.
தேசியத்தலைவர் அவர்களையும், கரும்புலிகளையும், மாவீரர்களையும் பாடியவர்கள் இன்று தமிழின அழிப்பில் பெரிதும் துணைநின்ற சிங்கள அரசில் அமைச்சராகவுள்ள டக்ளஸ் தேவானந்தாவைப் புகழ்ந்து பாடியிருப்பது தமிழ் மக்கள் மிகுந்த வருத்தத்தினைத் தோற்றுவித்திருக்கின்றது என்றார் இசைக்கலைஞர் ஒருவர்.

16 மார்ச் 2011

போர்க்குற்றம் விசாரிக்கப்பட்டே தீரவேண்டும்!

போரின் இறுதிக் கட்டத்தின் போது இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட்டே ஆகவேண்டும் என்று அமெரிக்கா அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தியுள்ளது.அத்துடன், போர்க்குற்றங்களை யார் செய்தார்களோ, செய்தவர்கள் அவற்றுக்குப் பொறுப்புச் சொல்லியே ஆகவேண்டும் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு வாரங்களுக்குள், இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்துவது இது இரண்டாவது தடவையாகும். இந்த விடயத்தில் அது இறுக்கமான போக்கைக் கடைப்பிடிக்கிறது என்பதையே இந்த அறிக்கைகள் காட்டுகின்றன என்று அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு பொறுப்புக் கூறுதல் என்பது மிக முக்கியமானது என்று, தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க இராஜாங்கத் துணைச் செயலர் ரொபேர்ட் ஓ பிளேக் தெரிவித்தார்.
போரின் இறுதி நாள்களில் நீதிக்குப் புறம்பான செயல்கள் இடம்பெற்றமை மற்றும் துஷ்பிரயோகங்கள் குறித்துக் கட்டாயம் விசாரிக்க வேண்டும். அவற்றை யார் செய்தார்கள் என்பது ஒரு விடயமே இல்லை. அவற்றுக்குக் காரணமானவர்கள் பொறுப்புச் சொல்லியே ஆகவேண்டும் என்று பிளேக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2ஆம் திகதியும் பிளேக் இவ்வாறானதொரு அழுத்தத்தை இலங்கைக்குக் கொடுத்திருந்தார். போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச நியமங்களுக்கு நிகராக விசாரணைகளை இலங்கை அரசு நடத்தவில்லை என்றால், அது சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றின் முன்பாக இழுத்து வரப்படும் அபாயம் உள்ளது என்றும் அவர் அப்போது எச்சரித்திருந்தார்.
நியூயோர்க்கில் நடைபெற்ற ஆசிய சமூகத்தில் சிறிலங்கா என்ற கலந்துரையாடலில் உரையாற்றும் போதே பிளேக் நேற்றைய கருத்துக்களை வலியுறுத்தினார்.
ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கைத் தூதுவர் பாலித கோஹன்னவையும் உடன் வைத்துக் கொண்டே அவர் தனது கருத்துக்களை வெளிப்படையாகத் தெரிவித்தார்.
அங்கு கருத்துத் தெரிவித்த கொஹன்ன கடந்த காலங்களில் நடந்தவை குறித்துக் கவனம் செலுத்தும் அதேவேளை எதிர்காலம் குறித்தும் பார்வையைச் செலுத்த வேண்டும் இல்லையேல் எதிலாவது போய் முட்டிக் கொள்ள வேண்டிவரும் என்றார்.

தமிழ் தாலி கட்டியிருந்த பெண் கனடாவில் தடுத்துவைப்பு!

கடந்த வருடம் கனடாவுக்கு சென்று அடைக்கலம் கோரிய ஈழத்தமிழ் பெண் ஒருவர் தமிழ் தாலி கட்டியது தொடர்பில் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் கனடாவின் வன்கூவர் கடற்கரையை சென்றடைந்த சன் சீ என்ற கப்பலில் சென்ற 492 ஈழத்தமிழ் மக்களில் பலரை தொடர்ந்தும் கனடா அரசு தடுத்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களை தடுத்து வைத்திருப்பதற்கான ஆதராங்களை கனேடிய அதிகாரிகள் இதுவரை சமர்ப்பிக்கவில்லை. வன்னியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வசித்த பெண் ஒருவர் தமிழ் தாலி கட்டிய குற்றத்திற்காக அவரின் பிள்ளைகளுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கப்பலில் சென்றடைந்த 63 பெண்களில் 25 பெண்கள் அவர்களின் பிள்ளைகளுடன் சிறையில் அடைக்கப்பட்டபோதும், அவர்களில் ஒருவர் மட்டுமே தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பிட்ட பெண் கட்டியுள்ள தமிழ் தாலி தொடர்பில் முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்படும்வரை அவர் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக கனேடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

15 மார்ச் 2011

வலிகாமத்தில் சித்திரவதை முகாம்!

வலிகாமம் வடக்கில் பாரிய சித்திரவதை முகாம்கள் காணப்படுவதாகச் செய்திகள் கூறுகின்றன.முற்று முழுதாக கதவுகள் மூடி அடைக்கப்பட்ட நிலையில் இருண்ட அறைகளையும் அங்கு பெருமளவில் இரத்தம் சிந்தப்பட்டு அவை தோய்ந்த நிலையில் காணப்பட்டமையும் அவதானிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மீண்டும் இயங்குவதற்கு அனுமதிக்கப்பட்ட வசாவிளான் மத்திய மகாவித்தியாலய சூழலில் சர்ச்சைக்குரிய வகையில் சித்திரவதைக் கூடங்களை அப்பகுதிப் பொதுமக்கள் அவதானித்துள்ளனர். முற்றுமுழுதாக கதவுகள் மூடி அடைக்கப்பட்ட நிலையில் இருண்ட அறைகளையும் அங்கு பெருமளவில் இரத்தம் சிந்தப்பட்ட தடயங்களையும் கண்டுள்ளனராம். அத்துடன் பலகைகள் கொண்ட கட்டில்கள் பல சித்திரவதை செய்வதற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டும் குறிப்பாக முட்கம்பிகளால் கைகள் கட்டப்பட்ட நிலையில் சித்திரவதை செய்யப்பட்டதான முட்கம்பித் தடயங்களையும் அப்பகுதி மக்கள் கண்டனர் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக படை அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டதையடுத்து, அவசர அவசரமாக சென்ற அதிகாரிகள் அங்கு பிரசன்னமாகியிருந்த அனைவரையும் திருப்பி அனுப்பியுள்ளனர். பின்னர் படையினர் மீண்டும் ஓரிரு வாரங்கள் அங்கிருந்து அனைத்தையும் சுத்திகரித்த பின்மே பாடசாலையை மீண்டும் வழங்கியதாகவும் கூறப்படுகிறது.
இதேவேளை, வன்னி யுத்தத்தில் கைது செய்யப்பட்ட போராளிகளில் ஒரு தொககுதியினர் பலாலியில் உள்ள தடுப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிய வருகிறது.

தேசியப்பற்றாளர் சிவராசா காலமானார்!

தமிழ்த் தேசியப்பற்றாளர் கனகசபை சிவராசா அவர்கள் கடந்த 11.03.2011 அன்று இயற்கை எய்தினார். 1970களில் தமிழ் மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த தமிழ் இளைஞர் பேரவையின் செயற்பாட்டுடன் விடுதலைப் பயணத்தில் தன்னை இணைத்துக் கொண்ட அவர், அரசியல் ரீதியாக வெகுசனப் போராட்டங்களில் ஈடுபட்டதோடு, ஆயுதப் போராட்டங்களின் தொடக்க காலம் முதல் இறுதிவரை நெருக்கடியான வேளைகளில் எல்லாம் துணிந்து நின்று தோள் கொடுத்தார்.
கிராம சேவகர், வடக்கு மாகாண கிராம சேவையாளர் சங்கத்தின் தலைவர், திருநெல்வேலி இந்து வாலிபர் சங்கத்தின் தலைவர் உட்பட்ட பொதுப் பணிகளில் அயராது உழைத்த சிவராஜா அவர்கள் இறக்கும் போது அவருக்கு வயது 68.
2002 ஆம் ஆண்டு தமிழர்விடுதலைக் கூட்டணி தேர்தல்ப் பரப்புரை நடவடிக்கையில் ஈடுபட்டு தீவகம் பகுதிக்குச் சென்றிருந்த வேளை அங்கு ஈபிடிபியினரால் நடத்தப்பட்ட கொலை வெறித் தாக்குதலில் முள்ளந்தண்டுப் பகுதியில் பலத்த தாக்குதலுக்கு ஆளானார். அதன் காரணமாக ஏற்பட்ட எலும்புப் புற்றுநோய்த் தாக்கத்தின் காரணமாகவே அவர் தற்போது உயிரிழந்தார். அதே சம்பவத்தில் இருவர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
போர் நெருக்கடிகாலத்தில் வன்னி மக்களுடனேயே வாழ்ந்திருந்த அவர் போரின் பின்னர் வவுனியாவில் உள்ள இராணுவத்தினரின் நலன்புரி வாழ்வினையும் அனுபவித்தே யாழ்ப்பாணம் சென்றிருந்தார்.
கனகசபை சிவாராஜா அவர்களின் இறுதி நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் நடைபெற்றன.
திருநெல்வேலி இந்து வாலிபர் சங்க மண்டபத்தில் நடைபெற்ற இறுதி வணக்க நிகழ்விற்கு சூழலியலாளர் பொ.ஐங்கரநேசன் தலைமை தாங்கினார்.
நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுரேஸ் பிறேமச்சந்திரன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வராசா கஜேந்திரன், சொலமன் சூ சிறில், பேராசிரியர் க. சண்முகதாஸ், வலம்புரி நாளிதழ் ஆசிரியர் விஜயசுந்தரம் உட்பட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு நினைவுரை ஆற்றினர்.
இறுதி நிகழ்விலும் இறுதி ஊர்வலத்திலும் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டிருந்தனர்.

14 மார்ச் 2011

தீவிரவாதி என்று பட்டம் கட்டி விடாதீர்கள்!

நாம் தமிழர் கட்சியின் மாநிலத்தலைவர் சீமான் ‘’சட்டப்படி குற்றம்’’ என்ற திரைப்படத்தில் வழக்கறிஞராக நடித்துள்ளார்.
இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடந்தது. படத்தின் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன், நடிகர் சத்யராஜ், இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட பலர் இவ்விழாவில் பங்கேற்றனர்.
சீமான் இவ்விழாவில், ’’சட்டப்படி குற்றம் என்று படம் எடுத்திருக்கிறீர்கள். அந்த குற்றத்திற்கு தீர்ப்பும் உங்களிடமே இருக்கிறது. அந்த தீர்ப்புதான் விஜய்.
எங்கெல்லாம் அக்கிரமங்கள் நடக்கிறதோ அங்கெல்லாம் புரட்சி வெடிக்கவேண்டும். மக்களுக்கு புரட்சியை சொல்லித்தரவேண்டும். அப்படி புரட்சியை சொல்லித்தருகிறது இப்படம்.
தம்பி விஜய் அரசியலுக்கு வரக்கூடாது என்று சொல்லாதீர்கள். அவர் வரவேண்டும். அவருக்கான அரசியலை அவர்தான் செய்யவேண்டும்.
உலக வரைபடத்தில் இலங்கை என்ற நாடே இருக்காது என்று சிங்கள அரசுக்கு எதிராக விஜய் கோபப்பட்டார். என் தம்பி விஜய் ஏன் அப்படி கோபப்பட்டார்.
மண்ணையும்,மக்களையும் உயிருக்கு உயிராய் நேசிப்பவர்களுக்குத்தான் அப்படி கோபம் வரும். இப்படி பேசுவதால் தீவிரவாதி என்ற பட்டம் கட்டிவிடாதீர்கள். எப்போதும் போலவே இப்போதும் அப்படி செய்துவிடாதீர்கள். என் தம்பி விஜய் தீவிரவாதி அல்ல; தன் இனத்திற்காக குரல் கொடுக்க வந்திருக்கும், போராட வந்திருக்கும் போராளி.
அமைதியாக இருந்த தம்பி இப்போதுதான் கோபப்பட்டிருக்கிறார். அந்த கோபத்தை குறைத்து விடாதீர்கள்’’ என்று பேசினார்.

படைகளின் கருத்தரங்கை புறக்கணிக்கிறது அமெரிக்கா!

சிறிலங்கா இராணுவம் ஏற்பாடு செய்துள்ள போர் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் கருத்தரங்கைப் புறக்கணிப்பதற்கு அமெரிக்காவும் ஜப்பானும் முடிவு செய்துள்ளதாக இணையத்தள செய்திகள் தெரிவித்துள்ளது.
‘தீவிரவாதத்தை தோற்கடித்த சிறிலங்காவின் அனுபவங்கள்‘ என்ற பொருளில் சிறிலங்கா இராணுவம் இந்தக் கருத்தரங்கை எதிர்வரும் மே 31ம் திகதி முதல் ஜுன் 2ம் திகதி வரை கொழும்பில் நடத்தவுள்ளது. இந்தக் கருத்தரங்கில் பங்கேற்க அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட 54 நாடுகளுக்கு சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் அழைப்பு அனுப்பியுள்ளார். ஆனால் ஜப்பானின் அரசியலமைப்பு இந்தக் கருத்தரங்கிற்குப் பிரதிநிதிகளை அனுப்புவதற்குத் தடையாக உள்ளது.
அதேவேளை அமெரிக்கா இந்த கருத்தரங்கைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. போர்க்குற்றங்கள் தொடர்பான அனைத்துலக விசாரணைகளை நடத்துவதற்கு சிறிலங்கா மறுப்பதற்கு, எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே அமெரிக்கா இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிய வருகிறது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்து இரண்டு ஆண்டுகளாகின்ற நிலையில் சிறிலங்கா அரசாங்கம் பல தொடர் நிகழ்வுகளுக்கு ஏற்பாடுகளைச் செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்தக் கருத்தரங்கும் கூட சிறிலங்காவின் சுற்றுலா ஊக்குவிப்பு நடவடிக்கையாகவே கருதப்படுகிறது. ஆனால் சிறிலங்காவின் நல்லிணக்க முயற்சிகள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பாக பொறுப்புக் கூறுதல் விடயங்களில் அமெரிக்க திருப்தி கொள்ளவில்லை. இதன் காரணமாகவே இந்த முடிவை எடுத்துள்ளது.
அதேவேளை மேலும் பல நாடுகள் இந்தக் கருத்தரங்கைப் புறக்கணிக்கவுள்ளதாகத் வெளிவந்துள்ளது குறிப்பிட்டுள்ளது.

ஸ்ரீலங்கா படைகளின் கருத்தரங்கை புறக்கணிக்குமாறு வேண்டுகோள்!

விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த அனுபவங்கள் குறித்து விளக்கமளிக்கும் நோக்கில் ஸ்ரீலங்கா இராணுவம் மூன்று நாள் கருத்தரங்கை நடத்தவுள்ளது. எதிர்வரும் மே 31ம் திகதி தொடக்கம் ஜுன் 2ம் திகதி வரை கொழும்பு கலதாரி விடுதியில் இந்தக் கருத்தரங்கை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்தக் கருத்தரங்கில் பங்கேற்குமாறு ஸ்ரீலங்கா பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ச 54 நாடுகளுக்கு அழைப்புகளை அனுப்பியுள்ளார். ஆனால் இந்தக் கருத்தரங்கைப் புறக்கணிக்கமாறு மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் இந்த நாடுகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுதொடர்பாக மனிதஉரிமைகள் கண்காணிப்பகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பிறட் அடம்ஸ் பிபிசி 'சந்தேசய' வுக்கு கூறுகையில்,
இந்தக் கருத்தரங்கில் பங்கேற்பதில்லை என்று பல முக்கிய அழைப்பாளர்கள் முடிவு செய்துள்ளதைப் புரிந்து கொள்ள முடிகிறது. பெருமளவு பொதுமக்களைப் படுகொலை செய்த நிகழ்வுடன் தொடர்புடைய இராணுவக் கொள்கையைக் கொண்டாடும் வகையிலான இந்தக் கருத்தரங்கைப் புறக்கணிக்குமாறு அனைத்துலக நாடுகளை கேட்டுக் கொள்கிறோம்.� என்று தெரிவித்தார்.
இந்தக் கருத்தரங்களில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், அதிபரின் செயலர் லலித் வீரதுங்க, பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச, மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால், தீவிரவாத முறியடிப்பு நிபுணர் கலாநிதி றொகான் குணரட்ண மற்றும் போரில் பங்கெடுத்த இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் பேச்சாளர்களாக கலந்து கொள்ளவுள்ளனர்.
உலகளாவிய தீவிரவாதத்தை முறியடிப்பதற்காக இலங்கையின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் நோக்கிலேயே இந்தக் கருத்தரங்கு நடத்தப்படவுள்ளதாக இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.
ஆனால் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கைஇராணுவத்தினரால் கையாளப்பட்ட பல தந்திரோபாயங்கள் சட்டவிரோதமானவை என்று மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் கூறியுள்ளது.
உலகின் எந்த இராணுவமாயினும் இந்தக் கருத்தரங்கில் பங்கேற்றால், இலங்கை இராணுவத்தின் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பாக பேச வேண்டும். அதேவேளை இலங்கை அரசின் கோட்பாட்டை பின்பற்ற முனையக் கூடாது� என்றும் மனிதஉரிமைகள் கண்காணிப்பகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அடம்ஸ் கேட்டுள்ளார். இது ஒரு உண்மையான நிகழ்ச்சி நிரலாக இருந்தால், இது சுதந்திரமானதாக நடத்தப்பட வேண்டும்.
அத்துடன் போரின் தீமைகள் நல்லதா கெட்டதா என்று பார்க்கவும் நடுநிலையாளர்கள் அனுமதிக்கப்பட வேண்டும். அப்போது தான் இந்தக் கருத்தரங்கை வரவேற்க முடியும். ஜப்பானின் அரசியலமைப்பு அனைத்துலக ஆயுத மோதல்களில் தலையிடுவதை அனுமதிக்கவில்லை.
எனவே கொழும்பில் நடைபெறவுள்ள இந்தக் கருத்தரங்கில் இருந்து அவர்கள் தொலைவிலேயே உள்ளனர். தேசியப் பிரச்சினைக்கு அரசியல் மறுசீரமைப்பு மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை அரசாங்கம் அடிக்கடி பொய் கூறி வருகிறது. அவர்கள் எப்போதும் கூறுவது போல அரசியல் மறுசீரமைப்பு ஒன்றை ஒருபோதும் செய்யப் போவதல்லை என்று என்னால் உறுதியாகக் கூறமுடியும்.
அரசியல் மறுசீரமைப்பு பேச்சுகளின் ஒரு அங்கமாக இருந்தாலும் அவர்களால் அதைச் செய்ய முடியாது. அது வெறும் வெட்டிப் பேச்சு. இது அடிப்படையில் ஒரு பொய். விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத அமைப்பு என்பதில் நாம் சந்தேகம் கொள்ளவில்லை.
நாம் புலிகளை மிக அதிகமாகவே விமர்சித்துள்ளோம். ஆனால் அவர்களை அழிப்பதற்காக பொதுமக்கள் தாக்கப்பட்டதை ஏற்க முடியாது.
விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் இந்தக் கருத்தரங்கு நடத்தப்படுவது தமிழ்ச் சமூகத்துக்கு ஒரு கோரமான தகவலைச் சொல்கிறது என்றும் அடம்ஸ் மேலும் கூறியுள்ளார்.

13 மார்ச் 2011

புலிகளின் முக்கியஸ்தர்கள் அரச புலனாய்வு பிரிவில் என்கிறது லங்கா கார்டியன்!

ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பிடியில் சிக்கியுள்ள விடுதலைப்புலிகளின் முக்கியஸ்த்தர்கள் அரசாங்கத்தின் புலனாய்வு சேவையில் இணைக்கப்படவுள்ளதாக லங்கா காடியன் செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் விளையாட்டுத்துறை பொறுப்பாளர் பாபா, பொருளாதாரத்துறை பொறுப்பாளர் கரிகாலன், யோகரட்ணம் யோகி, மூத்த உறுப்பினர் பாலகுமார், முன்னாள் பேச்சாளர் லோரன்ஸ் திலகர், யாழ்ப்பாண பொறுப்பாளர் இளம்பரிதி, திருகோணமலை பொறுப்பாளர் எழிலன், நிர்வாகப்பொறுப்பாளர் பூவன்னன், சர்வதேச உதவிபொறுப்பாளர் ஞானம் உள்ளிட்ட முக்கிய உறுப்பினர்கள் அரச புலனாய்வு சேவையில் இணைக்கப்படவுள்ளமை உறுதியாகியுள்ளதாக லங்கா காடியன் தகவல் வெளியிட்டுள்ளது.
அதில் பாபா ஏற்கனவே இலங்கை அரசின் புலனாய்வுப்பிரிவில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் லங்கா காடியன் கூறியுள்ளது.
பாலகுமார் மற்றும் யோகி ஆகியோர் இறுதிச் சண்டையின் போது இறந்து விட்டதாக ஏற்கனவே அமைச்சர் டியு குணசேகர தெரிவித்திருந்தார்.
எனினும், 2009 ஆம் ஆண்டு மே 31 ஆம் திகதியன்று, லங்கா பெஸ்ட் என்ற இணைத்தளத்துக்கு தகவல் வழங்கியிருந்த அரசாங்கம் தகவல் திணைக்கள தரப்புக்கள், தமிழீழ விடுதலைப்புலிகள் உயர் தலைவர்கள் தீவிரமான விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டமையை லங்கா காடியன் சுட்டிக்காட்டியுள்ளது.
பாபா, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புலனாய்வு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
புலிகளுடன் தொடர்புடையர்கள் விமான நிலையத்துக்குள் வரும் போதும் வெளியேறும்போதும் அவர்கள் தொடர்பாக தகவல்களை வழங்குவதே பாபாவின் பொறுப்பாக அமைந்துள்ளது.
இவரின் தகவல்படி, விமான நிலையத்தில் உள்ள கணணி, குறித்த சந்தேகநபர் கைது செய்யப்படும் வரை சமிஞ்சைகளை காட்டிக்கொண்டிருக்கும்.
வெளிநாட்டில் இருந்து செல்லும் இலங்கையர்கள் புலிகளுடன் தொடர்புடையவர்களாக கருதப்பட்டால், அவர்கள் விசேடமான முறையில் விசாரிக்கப்படுகிறார்கள். இவர்களை சிங்கள அதிகாரிகள் விசாரணை செய்யும் அதேநேரம் தமிழில் பாபா விசாரணை செய்வார்.
எனினும் புலிகளுடன் தொடர்புகளை கொண்டவர்கள் என கைது செய்யப்படுபவர்கள், எங்கே தடுத்து வைக்கப்படுகிறார்கள் என்பது தொடர்பில் குடிவரவு அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துவதில்லை என லங்கா காடியன் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை விடுதலைப் புலிகளின் உயர்மட்டத் தலைவர்கள் 100 பேர் வரையில் அரச படையினரால் தனியான இடம் ஒன்றில் வைத்து கொல்லப்பட்டதாகவும் முன்னர் தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.