15 மே 2010

மே,17,18ல் கருப்பு உடை அணியுங்கள்!பல உணர்வாளர்கள் ஒன்றிணைந்து கூட்டறிக்கை.



இலங்கையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை 5 மாதங்கள் மிகப் பயங்கரமான இறுதி கட்டப்போர் நடந்தது. விடுதலைப்புலிகளை அழிப்பதாக கூறி சிங்கள ராணுவம் திட்டமிட்டு தமிழ் இனத்தையே அழிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டது. அப்பாவி ஈழத்தமிழர்கள் குறிவைத்து கொல்லப்பட்டனர்.

முல்லைத்தீவு மாவட்டமே சூறையாடப்பட்டது. சுமார் ஒரு லட்சம் ஈழத்தமிழர்கள் ஈவு இரக்கமின்றி கொல்லப்பட்டனர். போரின் உச்சக்கட்ட தாக்குதல் மே 17, 18 ந்தேதிகளில் முள்ளி வாய்க்கால் பகுதியில் நடந்தது.
அந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 40 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். எந்த நாடும் ஈழத் தமிழர்களை காப்பாற்ற முன்வரவில்லை. சுமார் 3 லட்சம் தமிழர்கள் வீடுகளை இழந்து சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கப்பட்ட கொடூரம் நடந்தது. முள்ளி வாய்க்கால் சம்பவத்தை உலகம் முழுக்க வாழும் ஈழத்தமிழர்கள் நெஞ்சில் சோகத்தை சுமந்து கண்ணீர் மல்க நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். சிங்கள ராணுவ அரக்கர்களால் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு, அவர்கள் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். கனடா, ஜெர்மனி, டென்மார்க், நார்வே, பிரான்சு, ஆஸ்திரேலியா, ஆலந்து உள்பட ஈழத்தமிழர்கள் உள்ள நாடுகளில் எல்லாம் மே 18 ந்தேதியை போர் குற்றவியல் நாள் ஆக அறிவிக்கக்கோரி கூட்டங்கள் நடந்து வருகிறது. வரும் 18 ந்தேதி இலங்கை தூதரகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தவும் ஈழத்தமிழர்கள் தயாராகி வருகிறார்கள். ஈழத் தமிழர்களின் படுகொலைக்கு தமிழ்நாட்டிலும் அஞ்சலி செலுத்த பல்வேறு அமைப்புகள் ஏற்பாடு செய்து வருகின்றன. அஞ்சலி பொதுக்கூட்டம், தீபம் ஏந்தி ஊர்வலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. இந்த நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 100 பேர் கூட்டறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டனர். அதில் அவர்கள், ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை வேதனையோடு நினைவுப்படுத்தும் விதத்தில் வரும் 17, 18 ந்தேதிகளில் தமிழராய் பிறந்த ஒவ்வொரு வரும் கருப்பு சின்னம் அணிய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கூட்டறிக்கையில் டைரக்டர்கள் மகேந்திரன், பாலுமகேந்திரா, ஆர்.சி. சக்தி, மணிவண்ணன், காந்திய சிந்தனையாளர் தமிழருவி மணியன், கவிஞர்கள் புலமைப்பித்தன், காசி ஆனந்தன், தாமரை, எழுத்தாளர்கள் பிரபஞ்சன், பா. செய் பிரகாசம், மூத்த மருத்துவர் செ.நெ. தெய்வநாயகம், ஓவியர்கள் மணியம் செல்வன், மாருதி, அரஸ், நடிகர்கள் நாசர், சத்யராஜ், உள்பட 100 பேர் கையெழுத்திட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக