தமிழீழ தேசிய தலைவர் பெயரான வேலுப்பிள்ளை பிரபாகரன் என பச்சை குத்தியவர் இறந்துவிட்டார். அவர் யார் என தெரியாமல், தமிழநாடு, கோவை பொலிஸார் விசாரணையில் இறங்கியுள்ளனர்.
இதுபற்றி தெரியவருவதாவது:
தாராபுரம் பஸ் ஸ்டாண்டில் கடந்த 7ம் தேதி காலை, 41 வயது மதிக்கத்தக்க ஆண் திடீரென இடது கால், கை செயல்படாமல் மயங்கி விழுந்தார். பஸ் ஸ்டாண்டில் காத்திருந்தவர்கள், மயங்கி விழுந்த நபரை, அங்கு தயாராக நின்றிருந்த அம்புலன்சில் ஏற்றி, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அடையாளம் தெரியாத நபரின், வலது மார்பகத்தின் மேல், 'வேலுப்பிள்ளை பிரபாகரன்' என பச்சை குத்தியிருந்ததைப் பார்த்து, அதிர்ச்சியடைந்த மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
பொலிஸார், அவரிடம் விசாரிக்க முற்பட்டனர். எப்போது சுய நினைவு திரும்பும் என, டாக்டர்களால் தெரிவிக்க இயலவில்லை. இவர் இலங்கையில் இருந்து தப்பி வந்த விடுதலைப் புலிப் போராளியா அல்லது தமிழ் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவரா என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் தாராபுரத்தைச் சேர்ந்த தி.க., - பெ.தி.க., மற்றும் புலிகள் ஆதரவு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வந்து பார்த்தும், அடையாளம் தெரியவில்லை.
தாராபுரம் மருத்துவமனையில் பக்கவாத சிகிச்சைக்கு போதிய வசதி இல்லாததால், அந்த நபருக்கு மேல் சிகிச்சை அளிக்க கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல டாக்டர்கள் பரிந்துரை செய்தனர்.
இதையடுத்து, அரசு அம்புலன்சில் சந்தேக நபர் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். ஆனாலும், சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 3.30 மணிக்கு இறந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக