18 மே 2010

தமிழீழ விடுதலை புலிகள் விடுத்துள்ள அறிக்கை!



தலைமைச் செயலகம்,

தமிழீழ விடுதலைப் புலிகள்,

தமிழீழம்.

18/05/2010
அன்பார்ந்த தமிழ் மக்களே!
எமது மக்களின் அரசியல் அபிலாசைகள் சிங்களப் பேரினவாத சக்திகளால் தொடர்ந்தும் நிராகரிக்கப்பட்ட சூழலில் மக்கள் பலத்தினூடான அரசியல் இராணுவ வழிமுறைகளைக் கைக்கொண்டு போராட்டத்தை முன்னெடுத்த நாம் இன்று இராணுவரீதியான பின்னடைவுக்கு உட்பட்டுள்ளோம். கடந்த ஆண்டு மே 18 ஆம் நாள் வரை எந்த விட்டுக்கொடுப்புமற்ற உறுதிகுலையாத விடுதலைப்போரை முன்னெடுத்து வந்த எமது விடுதலை இயக்கம் தொடர்ந்துவந்த மனிதப் பேரழிவிலிருந்து மக்களைக் காப்பதற்காக ஆயுதங்களை மெளனித்தது.
தமிழரின் தாயக மண்ணில் பாரிய இன அழிப்பு நிகழ்ந்து முடிந்ததால் அக் கொடிய விளைவுகளுக்கு தமிழ் மக்களே முகங் கொடுத்து வருகின்றனர். நீண்ட கொடிய யுத்தம் இது வரை ஓர் இலட்சத்திற்கும் அதிகமான தமிழர்களின் உயிர்களைப் பலி கொண்டதுடன் அவர்களின் பொருண்மிய வாழ்வாதாரம் அனைத்தையும் அடியோடு அழித்துள்ளது. உள்நாட்டிலும் வெளிநாடுகளிலுமாக பல இலட்சம் மக்களை இடம்பெயர வைத்துள்ளது. உயிரழிவும், பொருளழிவுமாக ஒர் இனத்தின் அடையாளத்தைச் சிதைத்து ஏதிலிகளாக்கி வதை முகாங்களுக்குள் தொடர்ந்தும் சிறைப்படுத்தி வைத்துள்ளது.
எமது மக்களுக்கு எதிராக மிகவும் பாரதூரமான மனித உரிமை மீறல்களும், போர்க் குற்றங்களும் இழைக்கப்படுகின்றன. இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் திறந்தவெளிச் சிறைச்சாலைகளாக மாற்றப்பட்டு கைதுகளும் காவல்வைப்பும் காணாமற்போதலும் சித்திரவதையும் பாலியல் வல்லுறவும் கொலைகளுமாக மிகவும் மிருகத்தனமான இராணுவப் பயங்கரவாத ஆட்சி எமது தாயகத்தில் நடைபெறுகின்றது.
தமிழ் மக்கள் சிங்கள இனவாத அரசின் அடக்குமுறைக்கு ஆளாகி நிற்கின்றார்கள். அந்நிய தேசமான சிங்களத்தின் இராணுவ ஆதிக்கத்திற்கும் படையெடுப்பிற்கும் உட்பட்டு நிற்கின்றார்கள். ஆயுத பலத்தால் தமிழ் மக்களை அடிமைப்படுத்தி அவர்களை சிங்கள இராச்சியத்துடன் பலவந்தமாக இணைத்து விட சிங்கள பெளத்த பேரினவாதம் விடாப்பிடியாக முனைந்து வருகின்றது.
மனித உரிமை நிலைமை படுமோசமாகி இருக்கும்போது, உதவி வழங்கும் நாடுகளும் தொடர்ந்து இலங்கைக்கு நிதியுதவியை வழங்கி வருகின்றன. இந்த நிதியில் பெரும் பகுதி அரசாங்கத்தின் சுயநல அரசியலுக்கும், போருக்குச் செலவாகிய நட்டத்தை ஈடுசெய்வதற்கும், கொல்லப்பட்ட காயமடைந்த இராணுவத்தினரின் மறுவாழ்வுக்குமே பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ஆனால், போருக்கு முகங்கொடுத்து இழப்புக்களைச் சந்தித்த மக்களோ தற்பொழுதும் மரங்களின் கீழும் கூடாரங்களின் கீழும் அடிப்படை வசதிகளின்றி துன்பதுயரங்களுக்கு மத்தியில் வாழ்கின்றனர். மனித உரிமையோடு நிதியுதவியைத் தொடர்புபடுத்தி செல்வந்த நாடுகள் அழுத்தத்தைப் பிரயோகிக்கத் தயக்கம் காட்டுவதால் அது மகிந்த அரசாங்கத்திற்கு ஊக்கத்தை அளித்திருப்பதுடன் அவரது கொடூரமான ஒடுக்குமுறை ஆட்சியை நீடிக்கவும் வழிகோலியுள்ளது.
அன்பார்ந்த தமிழ் மக்களே!
ஆயுதப்போராட்டத்தை பயங்கரவாதமாகக் காட்டி தமிழ்மக்களின் அரசியல் அபிலாசைகளை புறம்தள்ளிய சிங்களப்பேரினவாதம் இன்று ஜனநாயக வழிமுறைகளினூடாக தாயகத்தில் எமது உரிமைகளை வென்றெடுக்க மக்களால் மேற்கொள்ளப்படும் ஜனநாயகம் தழுவிய அரசியல் முன்னெடுப்புக்களையும், அவற்றை முன்னெடுக்கும் மக்கள் பிரதிநிதிகளையும், அவர்களின் நியாயமான அரசியல் கோரிக்கைகளையும் பிரிவினைவாதமாகவும், பயங்கரவாதமாகவும்; காட்டி தடைசெய்ய முனைகின்றது. இதனை முறியடித்து தாயகத்தில் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் ஒட்டுமொத்த தமிழ் இனத்தின் அபிலாசைகளுக்கு அமைவாக செயற்படுவார்களென எதிர்பார்க்கிறோம்.
புலம்பெயந்த நாடுகளில் மக்கள் தாங்களாகவே மேற்கொள்ளும் மக்களவை மற்றும் நாடுகடந்த தமிழீழ அரசுக்கான ஜனநாயக தெரிவினூடான மக்கள் கட்டமைப்புக்களுக்கு புலம்பெயர்வாழ் மக்கள் ஒற்றுமையுடன் ஒன்று திரண்ட பேராதரவை வழங்க வேண்டும். இத்தகைய ஜனநாயகம் தழுவிய கட்டமைப்புக்களுக்காக தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் தமிழீழத் தனியரசுக்கான இலட்சியத்தில் தெளிவும், கொள்கைப்பற்றும், எச்சந்தர்ப்பத்திலும் தமிழ் மக்களின் அபிலாசைகளை விட்டுக்கொடுக்காது செயற்படக்கூடியவர்களாகவும் தமிழர் நடத்தி வரும் நியாயமான போராட்டத்தின் உண்மைத் தன்மையை சர்வதேச சமூகத்திற்குத் தெளிவாக உணர்த்தும் பணியை, பொறுப்புடனும், இதயசுத்தியுடனும் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம்.
இதுவரை காலமும் எமது விடுதலைக்குத் தோளோடு தோள்கொடுத்த மக்கள், யுத்தத்தினால் பல அழிவுகளையும் இழப்புக்களையும் தாங்கி நாளாந்தம் வேதனைகளையும் மன உளைச்சலையும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த உறவுகளின் மறுவாழ்வுக்கும் அவர்களுடைய எதிர்கால நலன்பேணலுக்கும் அச்சாணியாக புலம்பெயர் மக்கள் செயற்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இந்த உதவிகளை தனிப்பட்ட ரீதியிலும் நிறுவன மயப்படுத்தலூடாகவும் மேலும் அதிகரித்து அவர்களின் ஒளிமயமான வாழ்வுக்கு உதவுமாறு புலம்பெயர்ந்த தமிழர்களை வேண்டி நிற்கிறோம். அத்துடன் பயங்கரவாதத் தடைச்சட்டம், அவசரகாலச் சட்டம் ஆகியவற்றின் கீழ் சந்தேகத்தின் பேரில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான தமிழர்களையும் எமது விடுதலைப் பயணத்தில் தமது வாழ்க்கையை அர்ப்பணித்து தற்போது தடுப்புக்காவலில் சிறைவைக்கப்பட்டு, சித்திரவதையை அனுபவித்துக் கொணடிருக்கும் பல்லாயிரக்கணக்கான போராளிகளின் விடுதலைக்கும், முட்கம்பி வேலிகளுக்குள் முடக்கப்பட்டிருக்கும் மக்களின் மீள்குடியேற்றத்திற்கும் குரல் கொடுக்குமாறு தமிழ்மக்கள் அனைவரையும், அரசியல் மனித உரிமை அமைப்புக்களையும் கேட்டுக் கொள்கிறோம்.
ஊடக உலகிற்கு!
தமிழ்தேசியத்தின் மீதும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மீதும் நீங்கள் பற்றுக் கொண்டு ஆற்றி வரும் பணிகளை நாம் பாராட்டுகின்றோம். தமிழ் ஊடகத்துறையின் வளர்ச்சி அளப்பரியது. நீங்கள் எமது மக்களுக்கு ஆற்றி வரும் பணியை நாம் மதிப்பளித்துக்கொள்ளும் அதேவேளை, உங்கள் பணி என்றும் ஆரோக்கியமான பாதையூடாக பயணித்து எமது மக்களை செல்நெறி தவறாத பாதையில் வழிநடத்திச் செல்ல வேண்டிய பாரிய பொறுப்பும், கடமையும் உங்களைச் சார்ந்தது என்றே நம்புகின்றோம். எதிர்காலத்திலும் தேசியத்திற்கு வலுச்சேர்க்கும் வகையிலான ஆலோசனைகளையும், புதிய சிந்தனைகளையும் வழங்கி உங்களது தார்மீகப் பணியை முன்னெடுக்க வேண்டுமென வேண்டி நிற்கின்றோம். தனிமனித விமர்சனங்களைத் தவிர்த்து ஒன்றுபட்டவர்களாய் உங்கள் எழுத்தும் கருத்தும் பொது எதிரிக்கு எதிரானதாகவும் எமது மக்களைச் சிந்திக்கத் தூண்டுவதாகவும் எழுச்சிகொள்ள வைப்பதாகவும் அமையவேண்டும் என எதிர்பார்க்கின்றோம். ஆரோக்கியமான விமர்சனங்களினூடாக தமிழ்த் தேசியம் வளர்வதற்கும் ஒன்றுபடுவதற்குமான ஆயுதமாக ஊடகம் அமைய வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
அன்பார்ந்த தமிழக உறவுகளே!
நீங்கள் எமது விடுதலைக்காக ஆற்றும் பணி அளப்பரியது. தொடர்ந்தும் நீங்கள் எமது விடுதலைப் பயணத்துக்குப் பேராதரவு வழங்க வேண்டும் எனவும் வேண்டிக் கொள்கின்றோம். நாம் என்றும் இந்திய மக்களுக்கோ அல்லது இந்தியப் பேரரசுக்கோ எதிரானவர்கள் அல்லர். இந்தியப்பேரரசு எமது மக்களின் அபிலாசைகளை உதாசீனம் செய்வதை நாம் வேதனையோடு பார்க்கின்றோம். இந்த நிலை மாறவேண்டும். நடந்து முடிந்த வடுக்களைக் கவனத்திலெடுத்தாவது சர்வதேச சமூகத்துடன் இணைந்து இந்தியப் பேரரசு எமது மக்களின் உரிமைகளுக்கு மதிப்பளித்து அவர்களின் பூர்வீகத் தாயகமான தமீழீழ மண்ணில் உரிமையோடு வாழ்வதற்கு ஆவன செய்யவேண்டும். இந்த முயற்சிக்கு அகில இந்திய உறவுகளும், தலைவர்களும், இந்திய ஊடகங்களும் ஒத்துழைப்பை நல்க வேண்டும் என எதிர்பார்கின்றோம்.
சர்வதேசத்திற்கு!
தாயக விடுதலையைக் குறிக்கோளாகக் கொண்டு போராட்டத்தைத் தலைமை தாங்கிய எமது விடுதலை இயக்கம் ஆயுதங்களை மெளனித்து ஓராண்டு நிறைவடைகிறது. எமது மக்களின் மேல் கொடிய யுத்தத்தைத் திணித்து பல்லாயிரம் உயிர்களைப் பலியெடுத்து வென்ற மமதையில் சிங்கள தேசம் மே 20 ஆம் நாளை வெற்றிவிழாவாகக் கொண்டாடுகிறது. தமிழர்களை அடிமைகொண்ட நாளாகவே தமிழர்கள் இதை நோக்குகின்றனர். இந்நேரத்தில், நாம் சர்வதேசத்திற்கு ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறோம். அரச பயங்கரவாதத்துக்கும், தமிழின அழிப்புக்கும் துணைபோன உங்களின் மனசாட்சியைத் தொட்டு இறுதிநேர யுத்தத்தில் நிகழ்த்தப்பட்ட பாரிய இனஅழிப்பை முன்னிறுத்தி இலங்கை அரசை யுத்தக் குற்றவாளியாக வெளிப்படுத்துவதுடன், நீதியான விசாரணைகளை நடத்துவதற்கும் தற்போதைய தமிழ்மக்களின் ஜனநாயக அரசியல் கட்டமைப்புக்களை அங்கீகரித்து தமிழர்களின் உரிமைகளை ஜனநாயகரீதியில் வென்றெடுக்க துணைநிற்க வேண்டுமென கேட்டுக்கொள்கின்றோம்.
கடந்த ஆண்டு நடைபெற்ற யுத்தத்தில் கொத்துக் கொத்தாகவும், குடும்பம் குடும்பமாகவும் மக்கள் கொன்றொழிக்கப்பட்டபோது தமது உறவுகளை இழந்த குடும்பத்தினரின் வேதனையிலும் போரின் வடுக்களைச் சுமந்து நிற்பவர்களின் துயரிலும் நாம் பங்கெடுத்துக் கொள்கிறோம். இதுவரை காலமும் எமது விடுதலைப் போரில் தம்முயிர்களை ஈகம் செய்த மாவீரர்களையும் போராட்ட காலத்தில் கொல்லப்பட்ட மக்களையும் நினைவுகூரும் இவ்வேளையில், நாம் அனைவரும் எமது தாயகத்தின் விடிவுக்காக ஒன்றிணைந்து ஒற்றுமையுடன் போராட இந்நாளில் உறுதியெடுத்துக் கொள்வோமாக.
நன்றி.
புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்
தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம்.
கருத்துக்களை அனுப்ப: comments@viduthalaipulikal.net

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக