08 மே 2010

கலங்க வைக்கும் கருப்பு "மே"நினைவுகள்-புகழேந்தி தங்கராஜ்.








மும்பையில் சுமார் 170 பேர் கண்மூடித்தனமாகக் கொன்றுகுவிக்கப்பட்ட வழக்கில், அஜ்மல் கசாப்புக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்- என்பதுதான் வட இந்தியத் தொலைக்காட்சிகளின் இந்தவார ஹாட் டாபிக். கல்லால் அடித்துக் கொல்லலாம், சித்திரவதை செய்து கொல்லலாம், அப்படியே தூக்கில் போடலாம் - என்றெல்லாம் சகட்டு மேனிக்கு ஆலோசனைகள். ஆஹா... இதுவல்லவோ நாட்டுப்பற்று என்று மெய்யாலுமே மெய்சிலிர்க்கிறது! வட இந்தியத் தொலைக்காட்சிகள் என்று குறிப்பிடுவதற்கு நியாயமான காரணம் இருக்கிறது. சென்ற ஆண்டு ஜனவரி முதல் மே வரை, தமிழ்நாட்டிலிருந்து இருபத்தாறே மைலில் ஒருலட்சம் தமிழர்கள் விரட்டி விரட்டிக் கொல்லப்பட்டபோது, கள்ளத்தனத்துடன் கண்மூடிக் கொண்டிருந்தவை இந்தத் தொலைக்காட்சிகள். மே 18-ம் தேதி மட்டும் அவசர அவசரமாகக் கண்-விழித்துக்கொண்ட இந்த உண்மை மறைப்பு சாதனங்கள், சிங்கள வெறியர்கள் ராஜபக்ஷேவும் பொன்சேகாவும் கொடுத்த ஒரு வீடியோ காட்சியை மீண்டும் மீண்டும் காட்டி, பிரபாகரன் கொல்லப்பட்டதாக அறிவித்தன. ஒருலட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டபோது என்ன கிழித்துக் கொண்டிருந்தீர்கள்- என்று நம்மால் கேட்க முடியவில்லை. நாம் ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுத்த ஒரு முதலமைச்சரிடமே கேட்கமுடியாத ஒரு கேள்வியை இந்த செய்தி வியாபாரிகளிடம் நாம் எப்படிக் கேட்டிருக்கமுடியும்? கண்ணெதிரிலேயே விரட்டி விரட்டிக் கொல்லப்பட்டார்கள் ஒரு லட்சம் பேர். உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஊர் ஊராக ஓடினார்கள். ஒரே நாளில் ஓடிவிடவில்லை. வாரக் கணக்கில் மாதக் கணக்கில் ஓடிக்கொண்டே இருந்தார்கள். அவ்வளவு நாளும் மத்திய மாநில அரசுகள் மயக்கத்தில்தான் இருந்தன, தொலைக்காட்சிகள் தூக்கத்தில் தான் இருந்தன. இந்தக் கொதிப்பை ஊசி-முனையளவு கூட உணராமல், 170 பேருக்காகப் பதறித் துடிப்பதுதான் இந்தியா என்றால், நான் யார் என்கிற கேள்வி எழுமா எழாதா? கலைஞரே கொதித்து எழுந்து, ‘ஒருமைப்பாடு என்பது ஒருவழிப் பாதை இல்லை’ என்று சொல்வாரா மாட்டாரா? விடுதலைப்புலிகள் பற்றிப் பேசினாலோ, பிரபாகரன் பெயரைக் குறிப்பிட்டாலோ, தேசிய ஒருமைப்பாட்டுக்கு ஆபத்து என்று பீதி கிளப்பிக் கொண்டிருந்தவர்களே, தேசிய ஒருமைப்பாடு குறித்து வேதனையுடன் பேசும் நிலை தானாகவே தலையெடுத்திருக்கிறது. அந்த அளவுக்குப் படாதபாடு படுகிறது தேசிய ஒருமைப்பாடு. ‘உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு’ என்ற முழக்கத்திலேயே கழிந்தது தலைவர்களின் காலம். வெற்று முழக்கங்களால் வளருமா தமிழ்? செத்துச் சுண்ணாம்பாகிக் கொண்டிருந்தது, இந்த வாய்ச்சொல் வீரர்களால். அந்த நேரத்தில், கடலின் மறுபுறம், இனவெறிக்கு இரையாகிக்கொண்டிருந்த நம் சொந்தங்களை, தங்களது தீரத்தாலும் தியாகத்தாலும் வாழவைத்தார்கள் பிரபாகரனின் தோழர்கள். இதைத் தவிர வேறு எது பிரபாகரனின் பால் தமிழகத்தை ஈர்த்திருக்குமென்று நினைக்கிறீர்கள்! இந்த ஈடுபாட்டைத் தடுக்க சோனியாவாலோ சிதம்பரத்தாலோ முடியுமா? இத்தாலியின் தலைநகர் ரோம் டெல்லியிலிருந்து 6000 மைல். சோனியாவுக்கு ராஜீவ் மீதிருந்த ஈடுபாட்டுக்கு... காதலுக்கு... இந்த 6000 மைல் தடையாயிருந்ததா என்ன! தமிழ்நாட்டுக்கும் ஈழத்துக்கும் வெறும் 26 மைல்தான். இங்கே ஊழல் அரசியலையும், குடும்ப அரசியலையும் பார்த்துப் பார்த்து வெறுத்துப்போன நமக்கு, பிரபாகரன் என்கிற ஒரு நேர்மையான வீரன் மீது இன்றுவரை ஈடுபாடு இருக்கிறதே... இந்த ஈடுபாட்டுக்கு, குறுக்கே கிடக்கிற 26 மைல் கடல் தடையாயிருந்து விடுமா என்ன!விமர்சனங்களையெல்லாம் மீறி, இந்திராகாந்தி ஒரு மாபெரும் தேசியத் தலைவர். அவரது மருமகள் என்ற தகுதி சோனியா என்கிற இத்தாலிப் பெண்மணியை இந்தியாவின் அதிகார மையமாகவே மாற்றி விட்டிருக்கலாம். காங்கிரஸின் கொத்தடிமைக் கலாசாரத்தில் இதெல்லாம் சகஜம். காங்கிரஸ்காரர்களும் சகஜத்திலேயே ஆனந்தமடைகிற சகஜானந்தாக்கள். காதலித்த ஆடவனையே மணந்துகொள்வதென்பது ஐரோப்பியக் கலாசாரத்தில் வியப்பான ஒன்றுதான். அந்த வியப்பும் மதிப்பும் நமக்கும்தான் இருக்கிறது சோனியா மீது. அதற்காக, எங்கள் சொந்தங்களைக் கொல்ல ஆயுதம் வழங்கிவிட்டு, 26வது மைலில் அவர்கள் கொன்று குவிக்கப்பட்டபோது ‘‘அதுவேறு நாடு, இது வேறு நாடு’’ என்று எங்களுக்கு அறிவுரை வழங்க 6000 மைலுக்கு அப்பாலிருந்து வந்திருக்கும் சோனியாவின் தயவில் நடமாடும் காங்கிரஸுக்கு என்ன தகுதி இருக்கிறது? சகோதரி சோனியாவே! நீங்கள் காங்கிரஸின் தலைவரானது ஒரு விபத்து. அது நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கும் சக்தியாக உங்களை மாற்றிவிட்டது என்பதை யாரும் மறுக்கமுடியாது. பெரும்பான்மை பலத்தின் அடிப்படையில், இந்த நாட்டிலுள்ள 110 கோடி பேரின் வாழ்வை நீங்கள் தீர்மானிக்கலாம். அது வரமா, சாபமா என்பதை வரலாறு தீர்மானிக்கட்டும். ஆனால், கடலுக்கு மறுபுறம், இந்திய எல்லைக்கு வெளியே, தங்களுடைய தாய்மண்ணில் உரிமைக்காகப் போராடினார்களே எங்கள் சொந்தங்கள்.... அவர்களைக் கொன்று குவிக்க உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? எங்கள் இனத்தின் மீது தொடுக்கப்பட்ட அராஜக யுத்தத்தாலும், ஒருலட்சம் தமிழரின் ரத்தத்தாலும் நனைந்த கருப்பு மே இது. ஒரு லட்சம் தமிழர் கொல்லப்பட்டதற்கும் சோனியாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை, இனப் படுகொலையைத் தடுத்து நிறுத்த படாத பாடுபட்டேன்- என்கிற பொய் பித்தலாட்டத்தையெல்லாம் கலைஞர் இந்தக் கருப்பு மாதத்திலாவது மூட்டை கட்டி வைக்கவேண்டும். தமிழர் பிரச்னைக்குத் தீர்வுகாண இலங்கையில் விரைவில் அதிகாரப் பகிர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்- என்ற ராஜபக்ஷேவின் அறிவிப்பெல்லாம் நீர்மேல் எழுத்து என்பதை அறியாதவரா கலைஞர்? குடும்பத்துக்குள் யார் யாருக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பது என்கிற குழப்பத்துக்கிடையே இதைப்பற்றியெல்லாம் கவலைப்பட அவருக்கு நேரம் இல்லை என்பதுதான் உண்மை. இலங்கையில் அதிகாரப் பகிர்வு முயற்சியே காணோமே- என்று அவரிடம் கேட்டால், கடிதம் எழுதப் போவதாகச் சொல்லாமல் வேறென்னதான் அவரால் சொல்லமுடியும்? கொஞ்சம் அசந்தால் ‘பிரபாகரன் தான் பிரச்னை’ என்று முதல் ரீலிலிருந்து ஆரம்பித்துவிடுகிறார்கள். இவர்கள் புரிந்துகொள்வதற்காகவாவது, இவர்களது திரைக்கதைகளையெல்லாம் தூக்கி-யெறிந்துவிட்டு, மூலக் கதையிலிருந்து ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது. பிரபாகரன் என்பவன், அந்த மக்களின் தேசியத் தலைவன். ஈவிரக்கமின்றி அவர்களை நசுக்கிக் கொண்டிருந்த ஓர் இனவெறி அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தியவன். அந்த மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவன். அந்த மக்கள் அவனை உயிருக்குயிராக நேசித்தனர். அவனது அப்பழுக்கற்ற தலைமையை முழுமையாக நம்பினர். ஒருமுறையல்ல, இரண்டு முறை ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் அவனோடு சேர்ந்து, தங்களது வாழ்விடங்களிலிருந்து வெளியேறியிருக்கிறது. ராமன் இருக்கும் இடம் அயோத்தி- என்று கதைகள் பேசலாம். வீரஞ் செறிந்த எங்கள் ஈழச் சொந்தங்கள் அதை நிரூபித்துக் காட்டினர். பிரபாகரன் இருக்குமிடம்தான் ஈழம்- என்று மீண்டும் மீண்டும் அவர்கள் நிரூபித்தார்கள். புலிகள் வேறு, மக்கள் வேறு என்கிற பொய்ப் பிரசாரத்தை ஒவ்வொரு முறையும் முறியடித்தார்கள். எத்தனை தலைவர்கள் மீது இப்படியொரு நம்பிக்கையும் உண்மையான மதிப்பும் இருந்திருக்கிறது வரலாற்றில்? விரல்விட்டு எண்ணிவிடலாம்! சோனியா தான் தங்கள் உயிர் என்கிறார்களே இங்கிருக்கும் காங்கிரஸ்காரர்கள்... சோனியா தன்னுடைய தாய்நாடான இத்தாலிக்கே திரும்பிப் போய்விடுவதென்று முடிவெடுத்தால், ஜி.கே.வாசன், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தங்கபாலு, சிதம்பரம், குமரி அனந்தன், பீட்டர் அல்போன்ஸெல்லாம் அவருடன் போய்விடுவார்கள் என்றா நினைக்கிறீர்கள்? வாய்ப்பேயில்லை. வெவ்வேறு காலகட்டங்களில் யாழ்ப்பாணத்-திலிருந்தும் கிளிநொச்சியிலிருந்தும் தங்களது வீடு வாசல்களையெல்லாம் விட்டுவிட்டு லட்சக் கணக்கான மக்கள் பிரபாகரனைப் பின்தொடர்ந்து போனார்களே, ஏன்? ஆண்களை விடுங்கள்... இடம்பெயர்வதில் பெண்களுக்குத்தான் பிரச்னை அதிகம். ஒரு மறைப்போ தடுப்போ இல்லாத காடுகளுக்குள் தாங்கள் நம்பிய ஒரு தலைமையுடன் ஆயிரமாயிரமாய்ப் பெண்களும் இடம்பெயர்ந்தது, தமிழினத்தின் தன்மானத்துக்குப் பொன்மகுடம் சூட்டிய நிகழ்வு. புலிகள் இயக்கத்தின் மகளிர் அரசியல் பிரிவு பொறுப்பாளராக இருந்த சகோதரி தமிழினி ஒருநிகழ்வில் பேசியதுதான் நினைவுக்கு வருகிறது. ‘‘எம் இயக்கம் ஒரு மக்கள் இயக்கம். மக்கள் வேறு, இயக்கம் வேறல்ல. மக்கள்தான் இயக்கம். மக்கள் ஆதரவு இல்லாமல் 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு விடுதலை இயக்கம் வெற்றிகரமாகச் செயல்பட முடியாது’’ என்றார் தமிழினி. அதுதான் உண்மை. சென்ற ஆண்டுத் தொடக்கத்தில், இலங்கை ராணுவத்தை முறியடிக்க மிகவும் உறுதியான வியூகம் ஒன்றை வகுத்தனர் விடுதலைப் புலிகள். அந்த வியூகத்தை உடைக்கமுடியாத இலங்கை ராணுவம், உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட ரசாயன குண்டுகளை வீசி, நூற்றுக்கணக்கான போராளிகளைக் கொன்று குவித்தது. ரசாயனக் குண்டு என்பதால் போராளிகளில் பலர் உடல் கருகி இறந்திருந்தனர். சுற்றியிருந்த மரங்களெல்லாம் கருகியிருந்தன. உலகம் முழுக்க இலங்கையின் போர்க்குற்றம் அம்பலமானது. பல நாடுகள் கண்டித்தன. இலங்கையின் அந்தக் கொடூரச் செயலைக் கண்டிக்காத ஒரே நாடு, இந்தியாதான். இந்தியாவின் இந்த கள்ள மௌனம்தான் ஒவ்வொரு முறையும் இந்திய-இலங்கை கள்ளக்கூட்டைத் தோலுரித்தது. அந்தச் சம்பவத்தில் சகோதரி தமிழினியும் உயிரிழந்ததாக அப்போது ஒரு தகவல் கிடைத்தது. கருகிய உடல்களை வைத்து சரிவர அடையாளம் காண முடியவில்லையென்றும், தமிழினி நலமென்றும் பின்னர் வந்த இன்னொரு தகவல் ஆறுதலாக இருந்தது. பிரபாகரன் பற்றியும் நல்ல செய்தி வருமென்ற நம்பிக்கையை ஊட்டிய தகவல் இது. மரணத்தைக் கண்டு அஞ்சவில்லை அந்த மாவீரர்கள். தங்களது லட்சியம் நியாயமானது என்பதைத் தெளிவாக அறிந்திருந்ததால், அதற்காக எந்த விலையும் கொடுக்க அவர்கள் தயாராக இருந்தனர். உண்மையான விடுதலை வேட்கை கொண்ட ஒவ்வொருவரும் அப்படித்தான் இருக்கமுடியும். ஈழத்தில் தமிழர்கள் கேட்ட விடுதலை எது? அந்த மண் அவர்களது பூர்வீக பூமி. அந்தத் தீவு முழுக்க அவர்கள் ஆண்டு அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். மதத்தின் பெயரிலும் மற்ற போர்வைகளிலும் உள்ளே நுழைந்து ஆக்கிரமிக்கத் தொடங்கிய சிங்களர்கள், பூர்வகுடியினரான தமிழர்களைத் தீவின் வடகிழக்குப் பகுதி வரை விரட்டினர். அடிப்படை உரிமைகளையெல்லாம் சிங்களர்கள் பறிக்கத் தொடங்கியபிறகுதான், தங்கள் தாயகத்தை சிங்களரின் பிடியிலிருந்து மீட்டெடுப்பது முக்கியமானது என்பதை உணர்ந்தனர் தமிழர்கள். பிரபாகரன் என்கிற வலுவான தலைமையின் கீழ் அதில் பெருமளவு வெற்றியும் பெற்றனர். இந்த விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்ன தவறு இருக்கிறது! ‘‘நாங்கள் இந்த மண்ணின் மைந்தர்கள். எங்கிருந்தோ வந்து ஆக்கிரமித்து நாடு பிடித்த நீங்கள் எங்கள் உரிமைகளை எப்படிப் பறிக்கலாம்’’ என்று அவர்கள் கேட்டது தவறா? அடித்து உதைத்துத் துன்புறுத்தப்பட்ட பிறகு, பிரிந்துபோவது என்கிற முடிவுக்கு வந்தது தவறா? எது தவறு? ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒளிவுமறைவெல்லாம் இல்லை. எல்லாமே வெளிப்-படையான போராட்டங்கள். இதில் மர்மமான பக்கம் ஒன்று உண்டென்றால், அது ராஜீவும் ஜெய-வர்தனேயும் செய்துகொண்ட ஒப்பந்தம் தான். உன்னிப்பாகக் கவனிப்பவர்களுக்கு ஒன்று புரியும். 1987 ஜூலை 29-ம் தேதி எந்த நோக்கத்-துக்காக ராஜீவும் ஜெயவர்தனேவும் கையெழுத்து போட்டார்களோ, அந்த நோக்கம்தான் 2009 மே 18&ம் தேதி நிறைவேறியது. லட்சம் தமிழரின் கொலைக்குப் பின்னணியாக இருந்தவர்கள், கசாப்பை என்ன செய்வதென்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்களை என்ன செய்வதென்று நாம் முதலில் முடிவெடுத்தாக வேண்டும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக