17 மே 2010

யாழ்ப்பாணத்தில் சுவரொட்டிகள்,மக்கள் பரபரப்பு,படையினர் மத்தியில் அச்சம்!



யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் இரவு பல்கலைக்கழக வழாகத்தைச் சுற்றியும், மற்றும் சில தெருக்களிலும், மே 18 ஜ துக்கதினமாக அனுஷ்டிக்கச் சொல்லி துண்டுப் பிரசுரம் , மற்றும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இன்று காலை முதல் இராணுவத்தினரும், அவர்களுடன் சேர்ந்து இயங்கும் ஒட்டுக் குழுக்களும் இந்தச் சுவரொட்டிகளை அகற்றிவருகின்றனர். அத்தோடு துண்டுப் பிரசுரங்களும் இனம் தெரியாத நபர்களால் யாழ்ப்பாணப் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக அதிர்வின் யாழ் நிருபர் தெரிவித்துள்ளார்.அத்தோடு நாளை மே 18 என்பதால் பல ஆயிரக்கணக்கான இராணுவத்தினர் யாழ் வீதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர் எனவும், இன்று பல்கலைக்கழக மாணவர்கள் அடையாள பகிஷ்கரிப்பு ஒன்றையும் நடாத்தியுள்ளனர் என்றும் அறியப்படுகிறது. பல்லாயிரம் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ள நிலையில், யாழ்ப்பாணத்தில் இப் பிரசுரம் வினியோகிக்கப்பட்டதும், சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதும், மிகவும் துணிச்சலான விடையமாகும். சிவகுமார் எவ்வாறு ஒரு விடுதலை உணர்வை தூண்டினாரோ அதற்கு ஒப்பான நிகழ்வே தற்ப்போது மிகவும் துணிச்சலான முறையில் நடந்தேறியுள்ளது.யாழ் பல்கலைக்கழக வழாகத்தில் ஒட்டப்பட்டுள்ள துண்டுப் பிரசுரங்களின் படங்கள் இணைக்கப்பட்டுள்ளது. துண்டுப் பிரசுரங்களில் உள்ள வாசகங்கள் பின் வருமாறு:வலி சுமந்த நெஞ்சோடு விடுதலை நோக்கி பயணிப்போம் ………. போராட்டமே வாழ்வாகிப்போன எம்மக்கள் ,காந்திய தேசத்தின் சூழ்ச்சியாலும், சிங்களத்தின் அடக்குமுறையினாலும் , முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்டனர். 50,000 இற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள், அவலக்குரல் எழுப்பியும் ,அவர்களது சாவினை சர்வதேசத்தால் தடுத்து நிறுத்த முடியவில்லை…மரணித்தது மக்கள் மட்டுமல்ல..உலகின் ஜனநாயக பண்புகளும் விழுமியங்களும்தான்…பட்டினி போட்டு, குண்டுகள் வீசி, பாதுகாப்பு வலயத்திற்கு வாவென்று அழைத்து, அம்மக்களை கொன்ற கொடூரம் மன்னிக்கப்பட முடியாத போர்க்குற்றம்.களமாடி விழுப்புண் அடைந்த வேங்கைகளும், எறிகணை வீச்சுக்களால் அங்கங்களை இழந்த பொது மக்களும், சுற்றி வளைத்து நின்ற சிங்கள-பிராந்திய அரக்கர்களால் மே 18 இல் வேட்டையாடப்பட்டனர்.இந்த இன அழிப்பினை தடுத்து நிறுத்தப் போவது போல், சர்வதேச இராஜதந்திரக் கூத்தாடிகள் போக்குக்காட்டினர். இந்தியாவை மீறி, எந்த இராஜதந்திர அணுவும் அசைய மறுத்துவிட்டது.கொதித்தெழுந்த புலம்பெயர் மக்களின் வேண்டுதலை எவருமே செவிமடுக்கவில்லை.தமிழின அழிவை உலகிற்கு உணர்த்த , ஐ .நா.முன்றலில் தனது உடலை தீயில் சங்கமமாக்கினான் வேங்கை முருகதாஸ்.சாஸ்திரி பவனில், தோழன் முத்துக்குமார் மூட்டிய பெரு நெருப்பு ,தமிழகத்தில் தமிழின உணர்வினை தட்டி எழுப்பியது.அனைத்துலக ஆதிக்க மனிதர்களின் நலன்களுக்குள் , ஈழத்தமிழினத்தின் அவலக்குரல் கரைந்து போயிற்று. இன்னமும் அவல வாழ்வு தொடர்கின்றது. ஒரு இலட்சம் மக்களின், வதை முகாம் அவலம் குறித்து பேரினவாத அரசு கவலை கொள்ளவில்லை.மறுபடியும் வெள்ளை வான் கும்பலின் அடக்குமுறைகள் விரிவடைகின்றன. கொதிநிலைப் பூமியாக மாறுகிறது யாழ் குடா.முள்ளிவாய்க்கால் பேரவலத்தின், வலிமிகுந்த நினைவு சுமந்து , எழுச்சி கொள்ளும் இந்நாளில், அந்த மாவீரர்களின்-பொது மக்களின் உறுதி தளரா இலட்சிய வேட்கையை, நாம் மனதில் இருத்திக்கொள்வோம்.விழ விழ எழுவோம்.. இலட்சியம் நோக்கிய பயணத்தில், இறுதிவரை இணைந்திருப்போம்..

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக