29 மே 2010

இந்திய திரைப்பட விழாவிற்கு தென்னிந்திய திரைப்பட துறையினர் கடும் எதிர்ப்பு!

இலங்கையில் நடைபெறும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவிற்கு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை மற்றும் தென்னிந்திய திரைப்படத்துறையினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
வரும் யூன் மாதம் 4, 5, 6 ஆகிய மூன்று நாட்கள் இலங்கையில் உள்ள கொழும்பு நகரில் சர்வதேச திரைப்பட விருதுகள் விழா நடைபெறவுள்ளது.
இலங்கையில் தமிழ் இனத்தைப் படுகொலை செய்த சிங்கள வெறிபிடித்த அரசு, தமிழர்களின் மயானபூமியில் விழா மேடை அமைத்து இந்த திரைப்பட விழாவை நடத்துகிறது.
இதில் வட இந்திய நடிகர் - நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்கள், தொழிலாளர்கள் யாரும் கலந்து கொள்ள வேண்டாமென்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இன்று தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை சார்பில் அனைத்து தென்னிந்திய திரைப்படத்துறை அமைப்புக்களையும் அழைத்து கூட்டுக்கூட்டம் நடத்தப்பட்டது.
கூட்டத்தில், "இரத்தக்கறை படிந்த இலங்கையில் நடக்கும் இந்த திரைப்பட விழாவில் கலந்து கொள்ள வேண்டாம்" என எங்களது வட இந்திய நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தொழிலாளர் தோழர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இதன் அடிப்படையில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் 1. இனி தென்னிந்திய மொழி திரைப்படங்களின் படப்பிடிப்பு மற்றும் கலை விழாக்கள் இலங்கையில் நடத்தப்பட மாட்டாது. 2. இந்த விழாவில் கலந்து கொள்ளும் அனைத்து இந்திய நடிகர்கள், தொழில்நுட்பக்கலைஞர்கள் அனைவருக்கும் தென்னிந்திய திரைப்படத் துறையினர் தொழில் ஒத்துழைப்புத் தரமாட்டார்கள். 3. இந்த விழாவில் கலந்து கொள்ளும் நடிகர் - நடிகையர் திரைப்படங்களை தென்னிந்தியாவில் திரையிடப்படமாட்டாது. 4. இந்த திரைப்பட விழாவை நடத்தும் குழுவினருக்கு எங்களது வேண்டுகோள் என்னவென்றால், "இந்த விழாவை அன்பு கூர்ந்து ரத்தக்கறை படிந்த இலங்கையில் நடத்த வேண்டாம். வேறு எந்த நாட்டிலாவது நடத்துங்கள். அதை நாங்கள் வரவேற்கிறோம் என்று தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. 5. இதற்காக தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை சார்பில் 15-பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு நாளை மும்பை சென்று IIFA - குழுவினரைச் சந்தித்து இலங்கையில் சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழாவை நடத்த வேண்டாம் என நேரில் சென்று வலியுறுத்தவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட அமைப்புக்கள்
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம், தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்பட வினியோகஸ்தர்கள் கூட்டமைப்பு, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் சங்கம். இந்த அமைப்புக்களின் சார்பில் கலந்து கொண்டோர்
கல்யாணம், இராம.நாராயணன், ராதாரவி, வி.சி.குகநாதன், ஆனந்தா எல்.சுரேஷ், சிவசக்தி எஸ்.டி.பாண்டியன், பன்னீர்செல்வம், கலைப்புலி ஜி.சேகரன், மெட்ரோ ஜெயக்குமார், அன்பாலயா பிரபாகரன், ரவிக்கோட்டரக்கரா, கே.எஸ்.சீனிவாசன், டி.சிவா, கலைப்புலி எஸ்.தாணு, பி.எல்.தேனப்பன், காட்ரக்கட்டபிரசாத், வேணுகோபால், ஏடிதநாகேஸ்வரராவ், வி.ஞானவேலு, என்.விஜயமுரளி, ஜி.சிவா, செளந்திரபாண்டியன், மங்கை அரிராஜன், ஆனந்தி நடராஜன், எம்.பாஸ்கர், ஏ.எஸ்.பிரகாசம், டி.ஜானி, ஸ்ரீதர், பெருதுளசி.பழனிவேல், டைமன்ட்பாபு, சிங்காரவேலு, ரியாஸ், பி.என்.சுவாமிநாதன், ஞானம், ஆபுகாபிரியேல், முரளி, மூர்த்தி, கண்ணன், எஸ்.ஆர்.சந்திரன், சண்முகசுந்தரம், துரை, சிபிசந்தர் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக