30 மே 2010

சல்மான் கானின் உருவபொம்மையை எரித்து நாம் தமிழர் இயக்கம் போராட்டம்!



இலங்கையில் அடுத்த மாதம் நடக்க உள்ள சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழாவில் பங்கேற்பதற்கு இந்தியாவை சேர்ந்த திரைப்பட கலைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விழாவின் விளம்பர தூதராக நடிகர் அமிதாப் பச்சன் நியமிக்கப்பட்டிருந்தார். இதற்கு தமிழர்களிடம் இருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, நடிகர் அமிதாப்பச்சன், இலங்கை விழாவில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று அறிவித்தார். தனது தூதர் பதவியையும் ராஜினாமா செய்தார்.
அமிதாப்பின் இந்த முடிவையடுத்து, படவிழாவில் பங்கேற்க இருந்த அவரது மருமகள் ஐஸ்வர்யாராய் மற்றும் மகன் அமிஷேக் பச்சன் இருவரும் இலங்கை படவிழாவில் பங்கேற்கப்போவதில்லை என்று தெரிவித்தனர்.
அமிதாப்பச்சன் தூதர் பதவியில் இருந்து விலகியதால் அவருக்கு பதிலாக நடிகர் சல்மான்கான் சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழா தூதுவராக நியமிக்கப்பட்டார். இலங்கையில் தமிழர்கள் சிங்கள ராணுவத்தால் இன்னலுக்கு ஆளாகிவரும் நிலையில் இப்பதவியை ஏற்கக் கூடாது, ராஜினாமா செய்ய வேண்டும், இலங்கை படவிழாவிலும் பங்கேற்க கூடாது என்று பல்வேறு தமிழ் அமைப்புகளின் சார்பில் நடிகர் சல்மான்கானுக்கும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவரது வீட்டு முன்பாக ஏற்கனவே ஆர்ப்பாட்டமும் நடத்தினார்கள்.
இருப்பினும், சல்மான்கான் தனது முடிவு குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இந்நிலையில் சல்மான் கானுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று மும்பை தாராவியில் உள்ள காவல் நிலையம் முன்பு நாம் தமிழர் இயக்கத்தினர் சல்மான் கானின் உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போலீசார் உருவ பொம்மையை கைப்பற்றி தீயை அணைத்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்த சுமார் 10 பேரை கைது செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக