15 மே 2010

சர்வதேச முள்ளிவாய்க்காலின் தளபதியாக ஜி.எல்.பீரிஸ்.-கிருபாகரன்.




வன்னியில் இலங்கை அரச படைகளினால் மேற்கொள்ளப்பட்ட முள்ளிவாய்க்கால் நடவடிக்கையின் முதலாம் ஆண்டு, எதிர்வரும் 18ம், 19 ம் திகதிகளில் பூர்த்தி ஆகிறது. தமிழீழ மக்களின் வரலாற்றை, கலை கலாச்சாரத்தை சிதைப்பதுடன் எமது தாயக பூமியான வடக்கு கிழக்கு நிலப்பரப்புக்களை சிங்களவர்கள் தொடர்ந்து அபகரிப்பதற்கு வித்திட்ட தினம்.
அவலக்குரல், குழந்தைகளின் கீச்சிட்டல், முதியோரின் பெருமூச்சு, பெண்களின் அபாயக்குரலின் மத்தியில் இரத்தக் கறை கொண்ட சிங்கள பௌத்த இனவாதிகளினால் ஆனந்தக் கண்ணீர் கொட்டிய கொட்டும் தினம்.
ஆயிரக் கணக்கான உடல்களின் மத்தியில், காயப்பட்டோர், உயிருக்கு போராடுவோருடைய நெரிசலுக்கிடையில் உடுத்த துணிகளுடன் சிங்களப் படைகளிடம் உயிர்ப் பிச்சை கேட்டு சரணாகதி அடைந்த தினம். இவை பற்றி புள்ளி விபரங்களை இங்கு கொடுப்பது, அரைத்த மாவை மீண்டும் அரைப்பதற்குச் சமமாகும்.
தமிழீழ உதயத்தின் இறுதிக் கட்டத்தைக் கண்டு பெருமை கொண்டு சுதந்திர வாழ்க்கையை அனுபவிக்க ஆரம்பித்த ஈழத் தமிழர் தன்மானம் இழந்து, உயிர் இழந்து, காயப்பட்டு, கொடுமைப்பட்டு அகதி முகாங்களில் உணவு, நீர், தங்குமிடம், மருத்துவம் போன்ற வசதிகள் அற்று அனுபவித்த, அனுபவிக்கின்ற கொடுமைகளை இங்கு பட்டியலிட வேண்டிய அவசியமில்லை.
ஆனால் இதை நன்றாக அறிந்து, தெரிந்து, ஊடகங்களில் பார்த்த புலம்பெயர் வாழ் தமிழர் என்ன செய்கிறார்கள்? என்பதே கவலையிலும் கவலை. ‘‘நெய்குடம் உடைந்தது நாய்க்கு வேட்டை போல’’; புதிய புதிய சங்கங்கள், புதிய புதிய தலைவர்கள், புதிய புதிய வியாக்கியானங்கள், புதிய புதிய பட்டங்கள் இப்படியாக பல வன்னியின் இறுதிக்கட்ட அனர்த்தங்களின் பின்னர் புலம்பெயர் வாழ்வில் உருவாகியுள்ளன.
இவற்றில் யாதேனும் முள்ளிவாய்க்கால் நடவடிக்கையின் பாதிப்புககுள்ளான உடன்பிறவாச் சகோதரர்களுக்கு பலன்களை ஏற்படுத்தக் கூடிய வகையில் அமையுமானால், யாவரும் மிக அன்புடனும் பெருமையுடன் வரவேற்பார்கள்.
ஆனால் மழைக்கு உருவாகும் காளான்கள் போல் உருவாகி, பொய்யான விடயங்களை தமது சாதனைகளாக கூறி, தம்மைத் தாமே புகழ் பாடுவது, தமிழீழ மக்களின் சரித்திரத்தை சிங்களவர்களில் பெரும்பான்மையானோரினால் மறைப்பதற்கும் சமனனாது. இவை யாவும் பிறரின் ஏவலினால் செய்யப்படுவது மட்டுமல்லாது, தமது இருப்பை காவாந்து பண்ணுவதற்காக இழைக்கப்படுவது, வெளிப்படையான சுயநலம் மட்டுமல்லாது, நன்றாக திட்டமிட்டு புலம் பெயர் வாழ் தமிழ் மக்களின் ஐக்கியத்தை சிதைக்கும் செயலாகும்.
இன்று ஒரு வருடமாகியும் நாம் உருப்படியான என்ன நடவடிக்கையை எமது இனத்தை முற்று முழுதாக அழிக்க முற்பட்ட, முற்படுகின்ற சிங்கள பௌத்தவாதிகளுக்கு எதிராக எடுத்துள்ளோம் என்றும் ஒவ்வொருவரும் எண்ணுவார்களேயானால், அவர்கள் பதில் பூச்சியமே! நாட்கள், கிழமைகள், மாதங்கள், ஆண்டுகள் உருண்டோட, தமிழீழ மக்களின் வரலாற்றில் ‘‘ஐக்கியம்’’ என்ற சொற்பதம் விலக்கப்பட்டு வருவதை நாம் வெளிப்படையாக காணக்கூடியதாக உள்ளது. ‘‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதே உண்மை.’’
சிங்கள பௌத்த வாதிகளின் புத்திஜீவிகள், கல்வி மான்களிலிருந்து தொழிலாளிகள், சாதாரண மக்கள் வரை ஒன்றுபட்டு, தமிழீழ விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதம் எனப் பெயர் சூட்டி, சர்வதேச ஆதரவையும் பெற்று, இன்று வெற்றி விழாக்கள் கொண்டாடும் வேளையில், உண்மையான ஒவ்வொரு மானம் உள்ள தமிழனும் இவற்றைக் கண்டு வெட்கப்பட வேண்டும்.
வெட்கப்படுபவர்கள் தலை நிமிர்ந்து ஒற்றுமையாக வாழ முயற்சிப்பார்கள் என்பது நடைமுறை உண்மை. உலகில் அரசியல் காரணங்களுக்காக வெளிநாடுகளில், மேற்கு நாடுகளில் அரசியல் தஞ்சம் கோரி வாழும் அதி கூடிய இனம் என்றால், அது நிச்சயமாக தமிழீழ மக்களாகவே இருக்க முடியும். இந்த புள்ளி விபரங்கள் சரியாக தெரியாவிடினும் குறைந்தது (600.000) ஆறு லட்சம் என்பது பொதுவான கணிப்பீடு. இப்படியாக இருந்தும், நாம் தொடர்ச்சியாக தோல்விக்கு மேல் தோல்வி காண்பதற்கு பல காரணங்கள் இருந்த போதும், சில காரணங்கள் மிக வெளிப்படையானவை. முதலாவது ஐக்கியமின்மை. இரண்டாவது நாம் இலங்கை தவிர்ந்த வேறு சில நாடுகளின் பகைமையை தேடிக் கொண்டுள்ளோம். மூன்றாவது ஒருங்கிணைந்த செயற்பாட்டின்மை.
உண்மையில் நாம் உரிமைகளைப் பெறுவதில் விசுவாசமான நம்பிக்கை, வெட்கம், மானம் இருந்தால் - நாம் யாவரும் ஒன்றுபட்டு செயற்;பட முடியும். இல்லையேல் இலங்கை எதை எதிர்காலத்தில் புலம் பெயர்வாழ் தமிழ் மக்களுக்கு செய்யவுள்ளதாக வெளிப்படையாக கூறுகிறார்களோ, அதையே நாம் சந்திக்க நேரும்!
இலங்கையின் புதிய அமைச்சரவையில், தமிழீழ விடுதலை புலிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தை என்று சர்வதேசத்திற்கும், தமிழ் மக்களுக்கும் கண்கட்டி வித்தை காட்டிய பேராசிரியர் ஜி எல் பீரிஸ் வெளிநாட்டு அமைச்சராக பதவி ஏற்றுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போர்நிறுத்தம் கைச்சாத்தாகிய 2002ம் ஆண்டு, தமிழ் மக்களுக்கு அரசியல் பிரச்சினைகள் உண்டு, அதை நாம் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என்று கூறி தாய்லாந்து, ஜப்பான், நோர்வே போன்று சில நாடுகளில் பேச்சுவார்த்தை நாடகத்தை வெற்றிகரமாக மேடை ஏற்றிய பீரிஸ் சில மாதங்களின் பின்னா், அதே சர்வதேச நாடுகளிடம், ‘‘தமிழ் மக்களின் பிரச்சினை ஓர் பயங்கரவாதப் பிரச்சினை எனக் கூறினார்.’’
இன்று புலம் பெயர் வாழ் மக்கள் மீதான சர்வதேச முள்ளிவாய்க்கால் நடவடிக்கைக்கு பொறுப்பாளாராக ஜீ. எல். பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மீண்டும் தனது நசுக்கான வார்த்தைகள் மூலம் புலம் பெயர் வாழ் தமிழ் மக்களின் சாத்வீத ஜனநாயக செயற்பாடுகளை ஒழித்துக் கட்ட கங்கணம் கட்டியுள்ளார். இதே வேளை பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயவின் அறிக்கைகளும் இதற்கு உரம் கொடுக்கின்றன. ஆகையால் புலம் பெயர்வாழ் மக்களும் செயற்பாட்டாளர்களும், ஜீ. எல். பீரிஸ்ன் அறிக்கைகளை உற்று கவனிப்பது மட்டுமல்லாது, இவரது சர்வதேச செயற்பாடுகளையும் மிக அவதானமாக கவனிக்க வேண்டிய காலம். நாம் ஒற்றுமையாகாது இவற்றை அலட்சியம் செய்யும் கட்டத்தில், ஜி. எல். பீரிஸின் சர்வதேச முள்ளிவாய்க்கால் நடவடிக்கை மிக வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு, மீண்டும் தமிழீழ மக்கள் வெட்கி தலை குனிந்து நிற்க வேண்டி ஏற்படும். சுயநலத்துடன் மற்றவர்களின் ஏவலினால், நன்றாக திட்டமிட்டு புலம் பெயர் வாழ் தமிழ் மக்களின் ஐக்கியத்தை சிதைக்கும் காளான்களின் திட்டமும் இது தானே!
ச. வி.கிருபாகரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக