24 மே 2010

சிங்கள அரசின் கொடூரங்களை மூடி மறைத்து,புலிகளை குற்றவாளிகளாக சித்தரிக்க முயலும் பான் கீ மூன்!


புலம்பெயர் தமிழர்களின் தொடர்ச்சியான அழுத்தம் காரணமாக பல வெளிநாடுகள் இலங்கை இராணுவம் இழைத்த யுத்தக்குற்றம் தொடர்பாக கவனம் செலுத்திவரும் நிலையில், இலங்கை அரசால் ஒரு இரகசிய அறிக்கை தயாரிக்கப்பட்டு, நம்பியாரூடாக அது செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு அனுப்பட்டுள்ளது. அவ் அறிக்கையின் பிரகாரம் பான் கீ மூன் நேற்றைய தினம் புலிகளைச் சாடி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் இறுதி யுத்தம் நடைபெற்ற வேளை புலிகள் பெண்களின் தலை முடிகளை வெட்டியதாகவும், அதனால் அவர்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் செல்வது தடைப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது. இலங்கை இராணுவம், இரசாயனக் குண்டுகளைப் பாவித்தது, கன ரக ஆயுதங்களை மக்கள் வாழும் பகுதியில் பாவித்தது, உயிரோடு மக்களை பதுங்கு குழியில் போட்டுப் புதைத்தது, இவை அனைத்தையும் விடுத்து, புலிகள் பெண்களின் முடியை வெட்டிவிட்டார்கள், என்று புலம்புகிறது சர்வதேச சமூகம். ஆயிரக்கணக்கில் மக்கள் இறந்திருக்கும் நேரம், ஒரு இனமே அங்கே அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நேரம் சர்வதேச சமூகத்தின் பார்வையை திசை திருப்ப இலங்கை அரசால் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட நடவடிக்கையே இவை. இதனை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தியுள்ள கெகலிய ரம்புக்வல, இதனால் தான் தனது இராணுவம் பல பெண்களைக் கைதுசெய்ததாகக் கூறியிருக்கிறார். இல்லாவிட்டால் இவர் இராணுவம் சும்மா இருந்திருக்குமா என்ன ?இலங்கை அரசு யுத்தக்குற்றம் இழைத்தமையை மறந்து, சில அமைப்புகள் தற்போது பல்டி அடித்து புலிகள் யுத்தக்குற்றத்தில் ஈடுபட்டனர் எனக் கூறி அதை, ஊதிப் பெரிதாக்க முயல்கின்றனர். குறிப்பாக இலங்கை அரசை யுத்தக் குற்றவாளியாக சர்வதேச நீதிமன்றில் நிறுத்துவதற்காக பலர் முனைப்புக்காட்டி வருகின்றனர். ஆனால் இலங்கை அரசானது சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் தன்னை இணைத்துக் கொள்ளவில்லை, அதனால் இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேச நீதிமன்று நடவடிக்கை எடுக்க முடியாது, அப்படி எடுப்பதற்கு ஐ.நாவின் பாதுகாப்புச் சபையின் ஒப்புதல் தேவை.அவ்வாறு பாதுகாப்புச் சபை கூடினால், அதனை சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் தமது வீட்டோ அதிகாரங்களை பயன்படுத்தி இலங்கைக்கு எதிரான தீர்மானங்களை செயலிழக்கச் செய்யும். இதுவே கடந்த வருடமும் நிகழ்ந்தது.இந்த நிலையில் இலங்கை அரசை எவ்வாறு யுத்தக் கூண்டில் நிறுத்த முடியும் என்பது மிகவும் கேள்விக்குறியான விடயமாக தற்போது உள்ளது.இலங்கை அரசுக்கு எதிராக குறிப்பாக 2 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. 1) யுத்தக்குற்றம், 2) இன அழிப்பு,இதில் இன அழிப்பை நாம் முன் நகர்த்துவதன் மூலம் இலங்கை அரசை நாம் பாரிய நெருக்கடிக்குள் தள்ளமுடியும். எனவே குறிப்பாக புலம்பெயர் சமூகம், எந்த நடவடிக்கையை நாம் முன்னெடுப்பதன் மூலம் இலங்கை அரசை தண்டிக்க முடியும் என்பதில் தெளிவுபெறுதல் நல்லது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக