24 மே 2010

இலங்கை மீது போர்குற்ற விசாரணை,ஐ.நாவை வலியுறுத்துமாறு கிலாரிக்கு காங்கிரஸ் உறுப்பினர் கடிதம்!



இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்துமாறு அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனை வற்புறுத்த வேண்டும். இவ்வாறு அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரும், நிதிச் சேவைகள் குழுவின் மூத்த உறுப்பினருமான ஸ்டிவ் டிரை கோஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஹிலாரி கிளிண்டனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தமது வேண்டுகோளை விடுத்துள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:
இலங்கையில் யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்கள் அந்த நாட்டு அரசினால் நடத்தப்படும் விதம் குறித்த எமது கவலையை வெளிப்படுத்தி நானும் எனது சகாக்கள் 25 பேரும் ஒருவருட காலத்துக்கு முன்னர் கடிதமொன்றை உங்களுக்கு அனுப்பி இருந்தோம். இந்த மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்வதை இலங்கை அரசு தாமதப்படுத்தி உள்ளது.
இலங்கையில் இடம்பெற்றவை எனத் தெரிவிக்கப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணைகளை நடத்துமாறும் நீதி வழங்குமாறும் ஐக்கிய நாடுகள் சபைச் செயலாளர் நாயகத்தைத் தூண்டுவதற்கு உங்களுடைய செல்வாக்கைப் பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்.
கடந்த 23 வருடங்களில் இலங்கை மக்கள் மிக மோசமான யுத்தமொன்றைச் சந்தித்துள்ளனர் என்பது உங்களுக்குத் தெரியும். இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்றவை எனத் தெரிவிக்கப்படும் யுத்தக் குற்றங்கள் மனித குலத்துக்கு எதிரான மோசமான குற்றங்களாகும். இதன் காரணமாக மோதலினால் உருவான துயரங்கள் மேலும் அதிகரித்துள்ளன.
இறுதி நான்கு மாதங்களில் 7ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர் எனவும் 13 ஆயிரம் பேர் கயமடைந்தனர் எனவும் ஐ. நா. சபை மதிப்பிடுகின்றது. ஏனைய மதிப்பீடுகள் 30ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர் எனத் தெரிவிக்கப்படுகின்றன.
இலங்கை மக்களின் நல்வாழ்வுக்கு தேசிய நல்லிணக்கமும் நிரந்தர சமாதானமும் அவசியமாகும். எனினும், மோதலின்போது இழைக்கப்பட்ட குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறாமல் இது சாத்தியமாகாது.
தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது குறித்த தனது விருப்பத்தை இலங்கை ஜனாதிபதி 2009இல் தெரிவித்திருந்தமை எனக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது. "கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம்' குறித்த ஆணைக்குழுவை நியமித்ததன் மூலம் ஒருவருட காலத்துக்குப் பின்னர் அவர் தனது வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார்.
கடந்த கால ஆணைக்குழுக்களின் பயனற்ற தன்மை மற்றும் முன்னைய விசாரணைகளை ஜனாதிபதி கைவிட்டமை போன்றவற்றால் தற்போதைய ஆணைக்குழுவை அமைக்கும் நோக்கம் மற்றும் பலாபலன்கள் குறித்து சந்தேகம் எழுகின்றது.
மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா.சபை விசாரணை செய்யவேண்டும் என்ற கோரிக்கைகள் புதியவை அல்ல. பல கௌரவம் மிக்க தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் இந்த வேண்டுகோளைப் பகிரங்கமாகவே விடுத்துள்ளன.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், அவரது அரசும் நீதியை நிலைநிறுத்தவும், மனித உரிமை மீறல்களுக்குக் காரணமான தனிநபர்களைப் பொறுப்புக்கூறச் செய்யவும் விரும்பினால் ஐ.நா.சபை மூலமாக முன்னெடுக்கப்படும் விசாரணைகளால் மாத்திரமே அது சத்தியமாகும் என அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக