23 மே 2010

நடிகர் கமல் வீட்டின் முன் தமிழின உணர்வாளர்கள் போராட்டம்!


இலங்கைத் தலைநகர் கொழும்புவில் நடைபெறவுள்ள சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவிற்கு வணிக ஆதரவு அளித்துள்ள இந்தியத் தொழில் மற்றும் வர்த்தக் கூட்டமைப்பு (FICCI) பொறுப்பிலிருந்து நடிகர் கமல் ஹாசன் விலக வேண்டும் என்று மே 17 இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கை அரசிற்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்திவரும் தமிழன உண‌ர்வாள‌ர்க‌ள், கொழும்புவில் நடைபெறவுள்ள சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவை ரத்து செய்ய வேண்டும் என்றும், அதன் தூதர் பொறுப்பில் இருந்து அமிதாப் பச்சன் விலக வேண்டும் என்றும், வணிக ஆதரவு தரும் ஃபிக்கி விலகிக் கொள்ள வேண்டும் என்றும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டத்தின் விளைவாக அமிதாப்பச்சன் தூதர் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டார். ஆனால், ஃபிக்கி வணிக நோக்குடன் அங்கு திரைப்பட விழாவை நடத்துவதில் முனைப்பாக உள்ளது.
இந்நிலையில் எல்டாம்ஸ் சாலையில் உள்ள கமல் ஹாசன் வீட்டின் முன் மே 17 இயக்கத்தின் சார்பாக தமிழன உணர்வாளர்கள் திரண்டனர். இதில் எழுத்தாளர் புகழேந்தி தங்கராஜ், ஊடகவியலாளர் டி.எஸ்.எஸ். மணி, பத்திரிக்கையாளர் கா.அய்யநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இவர்கள், ஃபிக்கியின் ஊடக பொழுது போக்கு மற்றும் வணிக பொறுப்பின் தலைவர் பொறுப்பில் இருந்து கமல்ஹாசன் விலக வேண்டும் என்று கோரிக்கைகள் அடங்கிய போர்டுகளை பிடித்தனர்.
சிறிது நேரத்தில் கமல் அங்கு வந்தார். பிறகு அவருடைய அலுவலக மேலாளர், மே 17 இயக்கம் விடுத்த வேண்டுகோள் தொடர்பான மனுவை பெற்றுக்கொண்டார்.
அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மே 17 இயக்கத்தின் அமைப்பாளர் திருமுருகன், ’’கொழும்புவில் நடைபெறவுள்ள சர்வதேச இந்தியத் திரைப்பட விருது வழங்கும் விழாவை புறக்கணிக்க வேண்டும் என்று தமிழர் அமைப்புகள் கோரிக்கை விடுத்ததற்குப் பிறகும் அந்த விழாவை அங்கு நடத்துவதில் ஃபிக்கி உறுதியுடன் உள்ளது.
தமிழின படுகொலை குற்றச்சாற்றிற்கு ஆளாகியுள்ள சிறிலங்காவை காப்பாற்றும் நோக்குடன் ஃபிக்கி விழாவை நடத்துவதை எதிர்த்து அந்த அமைப்பில் ஊடக பொழுதுபோக்கு மற்றும் வணிக அமைப்பின் தலைவராக உள்ள கமல்ஹாசன் விலக வேண்டும் என்று மனிதாபிமானத்துடன் எங்களது கோரிக்கையை முன்வைக்கிறோம். இதனை கமல் ஏற்பார் என்று நம்புகிறோம்’’ என்று கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக