27 மே 2010

போராளிகளை விசாரிக்க வவுனியாவில் சிங்கள நீதிபதி நியமனம்!

தடுப்புக்காவலில் உள்ள போராளிகள் தொடர்பான வழக்குகளை, அரசுக்கு சார்பாக விசாரித்து தீர்ப்பு வழங்குவதற்கென - அரசியல் அமைப்புச் சட்டத்தினை மீறி - வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக சிங்களவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி விஸ்வநாதன் இன்று ஓய்வு பெற்றுள்ள நிலையில் புதிய நீதிபதியாக சிங்களவரான சமரக்கோன் நியமிக்கப்பட்டு இன்று சத்தியப்பிரமாணம் மேற்கொண்டதாக வவுனியாவில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி தமிழ் பிரதேசங்களில் தமிழர் தான் நீதிபதியாகச் செயற்பட வேண்டும். ஆனால் அந்த நடைமுறையினை மீறி சிங்களவர் நியமிக்கப்பட்டுள்ளதாக வவுனியா நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தடுப்பில் உள்ள போராளிகளை விடுவிப்பது தொடர்பிலான முடிவுகளை எடுக்கக்கூடிய நீதிமன்றமாக வவுனியா உயர் நீதிமன்றம் விளங்கிவருகின்றது. இன் நிலையில் சிங்களவர் ஒருவர் நீதிபதியாக நியமிக்கப்பட்டால் போராளிகளின் விடுவிப்புத் தொடர்பில் அவர் ஈவிரக்கமற்ற முறையில் நடந்துகொள்வதற்கான சந்தர்ப்பங்களே அதிகமாக உள்ளதாக மக்கள் தரப்பில் இருந்து கவலை வெளியிடப்பட்டுள்ளது.இதேவேளை இதுவரை காலமும் தமிழிலும், ஆங்கிலத்திலும் வாதங்களை முன்வைத்த தாம் இனிவருங் காலங்களில் சிங்களத்தில் வாதிடவேண்டிய இக்கட்டுக்குள் தள்ளப்பட்டுள்ளதாக சட்டத்தரணிகள் கவலை வெளியிட்டுள்ளனர். தமிழ் மக்களைக் கொண்ட வவுனியா மாவட்டத்தின் உயர் நீதிமன்ற நீதிபதி தமிழ் மக்களின் பிரச்சினைகளை எவ்வாறு கேட்டறிந்து தீர்ப்புச் சொல்லப்போகின்றார் என்றும் தமிழர் தரப்பில் கேள்வி முன்வைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக