வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை மர்ம நபர் ஒருவர், நேற்று துப்பாக்கியால் சுட முயன்றார். மயிரிழையில் அவர் உயிர் தப்பினார். இச்சம்பவத்தை அடுத்து அவரது ஆசிரமத்துக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பெங்களூர் புறநகர்ப் பகுதியில் தலகட்டபுரா என்ற இடத்தில் வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீரவிசங்கரின் ஆசிரமம் உள்ளது. இந்த ஆசிரமத்தில் 'சத்சங்கம்' பிரார்த்தனை கூட்டம் நேற்று நடைபெற்றது. பிரார்த்தனை கூட்டம் முடிந்ததும், மாலை ரவிசங்கர் அங்கிருந்து, தான் தங்கி இருக்கும் இடத்திற்குக் காரில் புறப்பட்டார். அப்போது, பக்தர்கள் கூட்டத்தின் மத்தியில் இருந்த மர்ம மனிதர் ஒருவர், திடீரென்று ரவிசங்கரை நோக்கித் துப்பாக்கியால் சுட்டார். காருக்குள் இருந்ததால் ரவிசங்கர் மயிரிழையில் உயிர் தப்பினார். மர்ம மனிதர் துப்பாக்கியில் இருந்து பாய்ந்த குண்டு, கூட்டத்தில் நின்று கொண்டிருந்த வினய் என்ற பக்தர் மீது பாய்ந்தது. தொடையில் குண்டு பாய்ந்ததால் அவர் படுகாயம் அடைந்தார். மருத்துவமனையில் அவருக்குத் தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவத்தை அடுத்து ரவிசங்கருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகப் பொலிசார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்குப் பிறகு தாம் பாதுகாப்பாக இருப்பதாக ரவிசங்கர் தெரிவித்துள்ளார். மேலும் ஆசிரமம் வழக்கம் போல் செயல்படுகிறது. துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆசிரமத்தில் சோதனை நடத்தப்பட்டது. பக்தரின் காலில் பாய்ந்த தோட்டாவை அவர்கள் கண்டெடுத்தனர். இச்சம்பவம் தொடர்பாக கர்நாடக உள்துறை அமைச்சர் வி.எஸ்.ஆச்சார்யா இது விடயத்தைத் தாம் உன்னிப்பாக கவனித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். ஆசிரம நிர்வாகிகள் கேட்டுக் கொண்டால், மேலும் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். ஆசிரமத்தில் கண்காணிப்பு கெமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் பக்தர்களைச் சோதனையிடவும் ஆசிரமம் முடிவு செய்துள்ளது. எனக்கு எதிரி இல்லை : ரவிசங்கர் பேட்டி இது குறித்து ரவிசங்கர் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில், "எனக்கு எதிரிகள் எவருமே இலர். இந்நிலையில் என் மீது தாக்குதல் நடத்த முயன்றவரை கண்டு அச்சமோ பயமோ எனக்கில்லை. எனினும் என்னைச் சுட முயன்றவரை நான் மன்னிக்கின்றேன். மேலும் தாக்குதல் நடத்த முயன்றவரை எனது ஆசிரமத்தில் இணைய, மனமாற அழைக்கின்றேன். வன்முறையைத் தூண்ட நினைத்தவர்களே இந்தத் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை நடத்தியிருக்க வேண்டும். இந்நிலையில் எனது உயிருக்கு ஆபத்து இருப்பதை உணர்கிறேன். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருக்க வாய்ப்பில்லை. எனவே இதுகுறித்து பக்தர்கள் யாரும் பீதியடைய வேண்டாம். எதிரிகளைக் கண்டு அஞ்சாமல் அவர்களைத் தைரியமாகவும், துணிச்சலாகவும் எதிர் கொள்ள வேண்டும். இந்தத் தாக்குதலுக்காக எனது பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்பதில் தனக்கு சிறிதளவு கூட உடன்பாடு இல்லை" என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக