07 மே 2010

இன்னிசை மழை இப்போது தேவையா?வன்னி மக்கள் பேரவை கேள்வி!





வவுனியா நகரசபைத் தலைவர் (நகரபிதா) முன்னின்று நாளை வவுனியாவில் நடத்தவுள்ள இன்னிசை மழை நிகழ்ச்சி தொடர்பில் வன்னி மக்கள் பேரவை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையின் முழு விபரம் வருமாறு;
வன்னியின் இறுதிப் பேரழிவு நடந்தேறி ஆண்டு ஒன்றை அண்மித்த தற்போதைய சூழலில் தாயகத்தில் ஒவ்வொரு வீடுகளிலும் நினைவுத் திதிகள் நடைபெறுகின்றன. உறவுகளைப் பிரிந்த உறவுகள் தேடித் தேடிச் சோர்ந்து போயுள்ளன. அங்கங்களை இழந்தோர் மாற்றுவலுவுக்காக பாடுபடுகின்றனர். சொத்துக்களையும், தொழில்களையும் இழந்த மக்கள் அடுத்த வேளை உணவிற்காக திண்டாடுகின்றனர்.
இந்தச் சூழலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு விரைந்தாற்ற வேண்டிய ஒரு கடப்படாடு பற்றி வன்னிமக்கள் பேரவை சுட்டிக்காட்ட முற்படுகின்றது.
இலங்கை அரசாங்க வானொலியான தென்றல் வானொலியின் அனுசரணையுடன் வவுனியாவில் 'இன்னிசை மழை' என்ற பிரமாண்ட இசை நிகழ்ச்சிக்கான ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டு அதற்கான விளம்பரங்களும் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன.
இலங்கை அரசு அவ்வாறான நிகழ்வினை முன்னெடுப்பது ஒன்றும் அதிசயமானது அல்ல என்பது உண்மைதான். ஆனாலும் அந்த நிகழ்விற்கு தலைமை தாங்குவது யார் என்ற செய்திதான் வன்னி மக்கள் பேரவையினராகிய எம்மைக் கடுமையாக நோகடிக்கிறது.
வவுனியா நகர பிதாவாகச் செயற்படுகின்ற நபரே நிகழ்விற்கு தலைமை தாங்குவதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எமக்குக் கிடைத்துள்ளன. இந்த நிகழ்வு நாளை (08-05-2010) வவுனியா நகரசபை மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இன்று (07-05-2010) வவுனியா நகரசபை மைதானத்தில் தமிழக சின்னத்திரைக் கலைஞர்கள் பங்குகொள்விருந்த பிரமாண்ட நிகழ்ச்சி தமிழ்மக்களின் உணர்வுகளை மதித்து குறித்த கலைஞர்களாலேயே கைவிடப்பட்டுள்ளது.
ஆனால் தமிழ் தேசியத்தினை வலியுறுத்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட குறித்த நபரினை தமிழ் தேசியத்திற்காக வவுனியா மக்கள் தேர்வு செய்திருந்தனர். சிங்கள கொரூர அரசு தமிழின அழிப்பினை பெருவிழாவாக நிகழ்த்துவதில் குறித்த நபர் முன்னின்று செயற்படுவது அனைத்து மக்கள் மனதிலும் பாதிப்பையே எற்படுத்தியுள்ளது.
பொறுப்பாக தமிழ் மக்களுக்கு முன்னுதாரணமாகச் செயற்படவேண்டிய குறித்த நபர் இந்த விடயம் தொடர்பில் கதைக்கச் செல்லும் உணர்வாளர்களிடம் சிங்கள அரசு வெற்றிவிழா கொண்டாடுவதில் தவறில்லை என்றும், தான் ஒரு ரசிகன் என்பதால் நிகழ்வினை ரசிக்கப் போவதாகவும் பொறுப்பற்றவிதத்தில் பதிலளித்துள்ளார்.
நிகழ்ச்சிக்கான அனுசரணையினை மேற்கொண்டுள்ள குறித்த வானொலி தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு எதிராகவும், தமிழ் தேசியச் செயற்பாட்டாளர்களுக்கு எதிராகவும் இரவு வேளையில் இரண்டு மணி நேரத்தினை ஒதுக்கி நாள்தோறும் எதிர்ப்பரப்புரையினை மேற்கொண்டே வருகின்றது. இந்த வானொலியினை வன்னி மக்கள் எந்த நாட்களிலும் திரும்பிப் பார்ப்பதே இல்லை. அந்தளவிற்கு எமது உணர்வுகளை இழிவு படுத்தும் குறித்த வானொலியுடன் இணைந்து எமது இனம் அழிக்கப்பட்ட வெற்றிவிழாவில் பங்கெடுப்பது எந்தவிதத்தில் சரியானது என்ற கேள்வியை வன்னி மக்கள் பேரவை முன்வைக்கின்றது.
இதேவேளை குறித்தநபர் நகரபிதா என்ற பதவியை மிகக் கேவலமாக பயன்படுத்துவது தொடர்பிலும் எமக்கு உறுதிசெய்யப்பட்ட தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. நகரசபை ஊழியர்களைத் தாக்குவது, வீதியோரங்களில் வியாபாரம் செய்தால் குறித்த வியாபாரிகளை வாகனங்களில் ஏற்றிச் சென்று தாக்குவது, முட்டுத்தாளிட்டுத் தண்டிப்பது போன்ற இழி செயல்களையும் குறித்த நபர் முன்னெடுத்து வருகின்றார்.
தமிழ் தேசியத்தை வலியுறுத்தி வெற்றி பெற்றவர்கள் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு மக்களை அன்பாக அணுகவேண்டுமே தவிர வன்முறையைக் கைக்கொள்ள எந்த அதிகாரமும் குறித்தவர்களுக்கு இருப்பதாக எமக்குத் தெரியவில்லை. இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்தால் கூட்டமைப்பு எந்தவிதத்தில் ஏனைய கட்சிகளில் இருந்து தன்னைப் பிரித்துக் காட்டப் போகின்றது? என்ற கேள்வி எழுக்கின்றது.
இந் நிலையில் இவ்வாறானவர்களை தொடர்ந்தும் கூட்டமைப்பு தன்னுடன் இணைத்து வைத்துக் கொள்ளுமாக இருந்தால் கூட்டமைப்பு தொடர்பில் முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்களை இது உறுதி செய்வதாகவே அமைந்துவிடும் என்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்பு புரிந்து கொள்ளும் என நம்புகின்றோம்.
இழப்புக்களுக்கு மேலான இழப்புக்களை எதிர்கொண்டு அந்த நினைவுகளைக் கூட மீட்ட முடியாத சூழலில் சிக்குண்டுள்ள நாம் எமது உணர்வுகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு புரிந்து கொள்ளும் என்ற நம்பிக்கையிலேயே இந்த அறிக்கையினை விடுக்கின்றோம்.
கூட்டமைப்பு விரைந்து செயற்பட்டு குறித்த நிகழ்ச்சியினை இடைநிறுத்த அல்லது குறித்த நபர் அதில் பங்கெடுக்காது தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்வதுடன், குறித்த நபர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும் முற்படவேண்டும் எனவும் வன்னிமக்கள் பேரவை உரிமையுடன் கேட்டுக் கொள்கின்றது.
நன்றி.
வன்னிமக்கள் பேரவை. 07.05.2010

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக