23 மே 2010

உங்கள் உறவுகளுக்கான போர்க் களத்தை திறக்க வாருங்கள்!


புலம்பெயர் தமிழர்களின் மனச்சாட்சிக்குச் சவாலாக அண்மையில் சிங்கள தேசம் ஈழத் தமிழர்கள் மீது நடாத்திய கோரப் படுகொலைகளின் காட்சிப் படங்கள் வெளியாகி வருகின்றன.
இறுதி யுத்த காலத்திலும், விடுதலைப் போராளிகளும், பொது மக்களும் சிங்களப் படைகளிடம் வேறு வழியற்ற நிலையில் சரணடைந்த காலத்திலும், அதற்குப் பின்னரான இன்று வரையான இந்த ஒரு வருட காலத்திலும் இந்த மிலேச்சத் தனமான இனப் படுகொலைகள் நடாத்தப்பட்டுள்ளது. இன்னமும் நடாத்தப்பட்டு வருகின்றது.
சிங்களர்களின் வரலாறுகளில், அவர்களது கொடூர குணங்கள் ஆங்காங்கே பதிவுகளாக உள்ள போதும், இருபத்தோராம் நூற்றாண்டில் வரலாறே வெட்கித் தலை குனியும் அளவிற்கு தற்போதைய சிங்கள தேசத்தின் இன வன்முறை வெளிப்படுத்தப்பட்டு வருகின்றது.
உலகின் மனச்சாட்சியை உலுக்கும் வகையில், நிர்வாணப்படுத்தப்பட்டு, கைகளும் கால்களும் கட்டப்பட்ட தமிழர்கள் சுட்டுக் கொல்லப்படும் காணொளிக் காட்சியை 'சனல் 4' எனப்படும் பிரித்தானிய தொலைக் காட்சி ஒளிபரப்பி, சிங்கள தேசம் நடாத்திய இனப் படுகொலையை அம்பலப்படுத்தியது.
அதே 'சனல் 4' தொலைக் காட்சி நிறுவனம் பெருந்தொகையான தமிழ் இளைஞர்களும், சிறுவர்களும் பெரும்பாலும் நிர்வாணப்படுத்தப்பட்டு, பின்புறம் கைகள் கட்டப்பட்ட நிலையில், சுட்டுக் கொல்வதற்குத் தயாராக, வாய்க்கால் போன்ற பதுங்கு குழிகளுக்குள் இருத்தப்பட்டிருப்பதையும், பலர் சுட்டுக் கொல்லப்பட்டும் பிணங்களாகக் கிடப்பதையும், சிங்களப் படைகளால் சிதைக்கப்பட்ட இரு பெண் யுவதிகளின் கொலை செய்யப்பட்ட உடலங்களையும் காண்பித்து, இந்தப் படுகொலைகள் எவ்வாறு அரங்கேற்றப்பட்டன என்பதை, அந்த படுகொலைகளை மேற்கொண்ட இலங்கை இராணுவ சிப்பாய் ஒருவரினதும் போர் முனையில் கடமையிலிருந்த இராணுவ தளபதிகளில் ஒருவரினதும் வாக்குமூலத்தையும் பெற்று ஒளிபரப்பியுள்ளது.
இந்தப் புகைப்படங்கள் வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின்போது சிறிலங்கா இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டவர்களின் புகைப்படங்கள் இலங்கை படைச்சிப்பாய் ஒருவரினால் எடுக்கப்பட்டவை என்றும் தெரிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 'சனல் 4' தொலைக்காட்சியால் அம்பலப்படுத்தப்பட்ட காணொளிக் காட்சியக் போலியாகத் தயாரிக்கப்பட்டது என்று சிறிலங்கா அரசால் நிராகரிக்கப்பட்டது.
இந்தக் காணொளிக் காட்சியை ஆராய்ந்த பல்வேறு மனித உரிமைகள் அமைப்புகளைச் சேர்ந்த நிபுணர்கள் இந்தக் காணொளிக் காட்சி உண்மையானது என்று ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளனர். இந்த நிலையில், தற்போது 'சனல் 4' தொலைக் காட்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்ட புகைப்படங்கள் மிகத் தெளிவாக, அந்த முகங்களை அடையாளம் கண்டு கொள்ளக் கூடியதாக உள்ளது.
இந்தப் புகைப்படங்களையும் சிங்கள அரசு நிராகரித்துள்ளது. ஆனாலும், மனித உரிமைகள் அமைப்புகளும், ஐ.நா. அமைப்புக்களும் அந்தத் தமிழர்களைப் பார்வையிடக் கோரினால், சிங்கள தேசம் என்ன பதில் சொல்லப் போகின்றது என்பது தெரியவில்லை. இந்தப் படுகொலைகளை மேற்கொண்ட சிப்பாய்களில் ஒருவர், 'எமது தளபதி எல்லோரையும் படுகொலை செய்யுமாறு உத்தரவிட்டார். ஆகவே, நாங்கள் எல்லோரையும் கொலை செய்தோம்' - என்று சனல் - 4 தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளார்.
'விடுதலைப்புலிகளின் முக்கியமானவர்கள் எவரையும் வைத்துப் பாதுகாக்கும் திட்டம் எதுவும் இல்லாததால், அவர்கள் அனைவரும் படுகொலை செய்யப்பட்டார்கள். இதற்கான உத்தரவு நிச்சயமாக உயர்மட்டத்திலிருந்தே கிடைத்திருக்கவேண்டும்' - என்று இலங்கை இராணுவத்தின் மூத்த தளபதிகளில் ஒருவர் சனல் - 4 தொலைக்காட்சிக்கு தெரிவித்தார் என்றும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
வெள்ளைக்கொடியுடன் சரணடைவதற்கு வந்த விடுதலைப்புலிகள் அமைப்பு உறுப்பினர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் என்ன நடந்தது என்று கேட்டபோது, குறிப்பிட்ட இலங்கை இராணுவ சிப்பாய் பதிலளிக்கையில் - முதலில் நாங்கள் அவர்களை கைது செய்தோம். பின்னர் சித்திரவதை செய்தோம். பின்னர் கொலை செய்தோம். போரின் இறுதி நாட்களில் நாங்கள் எல்லோரையும் கொலை செய்தோம். பெருந்தொகையான சடலங்கள் அங்கு காணப்பட்டன. அவ்வாறு கொலை செய்யுமாறு எமது தளபதி எங்களுக்கு உத்தரவிட்டார்' - என்று கூறினார்.
சனல் - 4 தொலைக்காட்சியினால் தொடர்பு கொள்ளப்பட்ட குறிப்பிட்ட இலங்கை இராணுவத்தின் மூத்த தளபதி மேலதிக தகவல் ஒன்றினை தெரிவிக்கையில் - விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் 13 வயது மகன் இலங்கை இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு அவரது தந்தையார் - தலைவர் பிரபாகரன் - எங்கு உள்ளார் என்று விசாரணை செய்யப்பட்டு பின்னர் சுடப்பட்டார் என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில், நேற்று மே 20 அன்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் மேலும் ஒரு படுகொலைக் காட்சியைச் சித்தரிக்கும் நான்கு புகைப்படங்களை வெளியிட்டு அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஒரு விடுதலைப் போராளியை தென்னை மரத்தோடு சேர்த்துக் கட்டி வைத்து, அவரை சிறிய கத்தி ஒன்றால், சிறுகச் சிறுக வெட்டிக் கொல்லும் கோரக் காட்சி தொடர்ந்து நான்கு புகைப்படங்களாக எடுக்கப்பட்டுள்ளது.
அவரைக் கொலை செய்தவர்கள் தமிழீழத் தேசியக் கொடியினால் அவரது உடலைப் போர்த்து ஏளனம் செய்துள்ளார்கள். முள்ளிவாய்க்காலுடன் சிங்களக் கொடூரங்கள் முடிவுக்கு வந்துவிடப் போவதில்லை என்பதை வெளிவந்து கொண்டுள்ள தகவல்களும் காட்சிகளும் மீண்டும் உணர்த்துகின்றன.
இந்தக் கொடூரங்களைப் பார்த்த பின்னரும், ஈழத் தமிழினம் மீது கூட்டுப் படுகொலையை நடாத்திய இந்திய தேசம் சிங்களத்தின் மீதான போர்க் குற்ற விசாரணைகளுக்கு இன்றுவரை தடைக்கல்லாக இருப்பதுதான் உலகின் மிகக் கேவலமான தமிழினத் துரோகமாக நோக்கப்படுகின்றது.
சிங்கள தேசத்தின் இனப் படுகொலைக் காட்சிகளால் காந்தி தேசம் தற்போது முற்றிலும் அம்மணமாகக் காட்சி தருகின்றது.
உலகத் தமிழ் உறவுகளே...!
எங்கள் ஈழத்தில் சிங்களம் நடாத்திய, நடாத்திவரும் படு கொலைகளையும், தமிழின அழிப்பையும் இனியும் அனுமதிக்கப் போகிறீர்களா?
இருபத்தோராம் நூற்றாண்டின் நாகரிகம் மிக்க மனிதர்களே...!
இன்னுமா எங்கள் மக்களின் அவலங்களை வேடிக்கை பார்க்கப் போகின்றாய்?
புலம்பெயர் தமிழர்களே...!
உங்கள் உறவுகளுக்கான போர்க் களத்தை நிறைக்க வாருங்கள்...!
பொங்கி எழுங்கள்...!
எங்கள் தேசம் விடுதலை பெறும் வரை போராடுவோம் வாருங்கள்!
சிங்கள தேசத்தின் போர்க் குற்றங்களுக்கு எதிரான ஐ.நா.வை நோக்கி நீதி கோரும் போராட்டம் குறித்த அறிவித்தல் வெகு விரைவில் அறியத் தரப்படும்.
- பாரிஸ் ஈழநாடு-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக