10 அக்டோபர் 2010

ஆயிரத்துக்கு மேற்பட்ட பெண்கள் திரண்டும் 19 பேர் மட்டுமே சாட்சியம்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு முன்பாக சாட்சியமளிக்க நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் 1500 க்கும் அதிகமானோர் குழுமியிருந்த போதும் 19 பேரே சாட்சியமளித்தனர். மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் ஆணைக்குழு சாட்சியங்களை நேற்றுப் பதிவு செய்தது. கணவன்மார், மகன்மார், உறவினர்களை இழந்த 1500 க்கும் மேற்பட்ட பெண்கள் கண்ணீர் மல்கியவாறு மகஜர்களுடனும் புகைப்படங்களுடனும் வருகை தந்திருந்தனர். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் அரச ஆசன இருக்கைகள் போதாத நிலையில் குழந்தைகளைச் சுமந்த வண்ணம் இவர்கள் நின்றிருந்தனர்.
அனைவரதும் சாட்சியங்களை ஆணைக் குழுவினால் பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் தங்களின் கடத்தப்பட்ட, காணாமல் போனவர்களது தகவல் தெரித்தவர்கள் மகஜரையும் அதனுடன் தொடர்பான ஆவணங்களையும் சமர்ப்பித்துவிட்டு செல்லுமாறும் தாங்கள் விசாரித்து நல்ல பதிலைத் தருவோம் எனவும் ஆணைக்குழு தெரிவித்தது. இதனால் சுமார் ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட மகஜர்களை வழங்கிவிட்ட தங்களின் கவலைகளை நேரடியாக தெரிவிக்க முடியாமல் அவர்கள் சென்றனர்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரின்ஸ் காசிநாதர், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவர் க.குருநாதன், மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மத்திய சபை உறுப்பினர் அ.செல்வேந்திரன், மட்டக்களப்பு அனர்த்த முகாமைத்துவ பெண்கள் கூட்டமைப்பு பிரதிநிதி கேதீஸ்வரி யோகதாஸ், விடுதலைப் புலிகளின் முன்னாள் படைத்தரப்புப் பேச்சாளர் இராசையா இளந்திரையனின் மனைவி வனிதா, விடுதலைப் புலிகளின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட இராணுவப் புலனாய்வுத் தளபதி பிரபாவின் மனைவி பிரபாகரன் றொபிற்றா உட்பட 19 பேரே சாட்சியம் அளித்தனர். இதேவேளை, அருட்தந்தை மில்லர் அறிக்கை சமர்ப்பித்தார்.
ஆணைக்குழுவின் தலைவர் சி.ஆர். டி.சில்வா மற்றும் உறுப்பினர் எம்.ரீ.எம்.வாவிக் சமுகமளிக்காத நிலையில் நேற்றைய விசாரணையில் ஏ.றொஹான் பெரேரா, மனோகரி இராமநாதன், எஸ்.எம்.ஜீ.எஸ்.பளிக்கக்கார, கரு ஹங்கவத்த, எம்.பீ.பரணகம, சி.சண்முகம் ஆகியோர் பிரசன்னமாகி சாட்சியங்களைப் பதிவு செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக