இலங்கையிலிருந்து செல்லும் அகதிகள் விடயத்தில் அவுஸ்திரேலியா கடுமையான போக்கைக் காட்டவேண்டும் என்று இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கேட்டுள்ளார். கடந்த ஒரு வருடத்துக்குள் ஏராளமான அகதிகள் நாட்டுக்குத் திரும்பிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். கனடாவிலும் அவுஸ்திரேலியாவிலும் அகதிகளாக தஞ்சமடைந்துள்ள இலங்கையர்களில் 70 வீதமானவர்கள் இலங்கைக்கு வந்து செல்வதாக அண்மையில் ரொஹான் குணரட்ண தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும், இலங்கையிலிருந்து சட்டவிரோதமாகச் செல்லும் படகுகளைத் தடுத்து நிறுத்துவதில் இலங்கை கடற்படையினரும் போலீசாரும் தீவிரமாக உள்ளதாகத் தெரிவித்த கோத்தபாய, அண்மையில் இவ்வாறாக இலங்கையில் இருந்து ஒரு படகுகூடச் செல்லவில்லை என்றும் கூறியுள்ளார். ஆனால், விமானம் மூலமாக மக்கள் மூன்றாம் நாடுகளுக்குச் செல்வதையும் கோத்தபாய சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையிலிருந்த புலிகளைத் தாம் தோற்கடித்த பின்னர் இலங்கையில் மக்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள் என்கிறார் கோத்தபாய. எனவே மக்கள் அகதிகளாக வெளியேற வேண்டிய தேவை எதுவுமே இல்லையாம் என்பது அவரது வாதமாகும். எனவே இலங்கை அகதிகள் யாருக்கேனும் அகதியுரிமை வழங்குவதில் அவுஸ்திரேலியா கடுமையான நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கோத்தபாய கேட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக