04 அக்டோபர் 2010

கே.பியின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக நாடு கடந்த தமிழீழ அரசு செயற்படுகின்றதா?

இலங்கை அரசுக்கு முண்டு கொடுத்துக் கொண்டு இருக்கும் குமரன் பத்மநாதன் (கே.பி) இன் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக நாடு கடந்த தமிழீழ அரசு செயற்படுகின்றதா? என்று நாடு கடந்த தமிழீழ அரசின் பிரித்தானிய பிரதிநிதிகளில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டவரும்,தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.ஜெயானந்தமூர்த்தி சந்தேகம் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் தமிழர்களால் நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்குள் மிகவும் அதிகப்படியான வாக்குகளைப் பெற்றவர் இவர். ஆனால் நாடு கடந்த தமிழீழ அரசின் நகர்வுகள் திருப்தி தராமையால் இப்பிரதிநிதி பதவியில் இருந்து விலகும் தீர்மானத்தை எடுக்கின்றமைக்கு தள்ளப்பட்டுள்ளார் என்றுஅறி வித்து ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையிலேயே இப்படிக் குறிப்பிட்டுள்ளார்.
இவரது அறிக்கை வருமாறு:-
நாடு கடந்த தமிழீழ அரசில் ஒரு சிலர் சர்வாதிகாரப் போக்குடன் நடக்கின்றார்கள். இதனால் தமிழ் தேசியத்தின் சார்பாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் நாடு கடந்த அரசை விட்டு வெளியேற வேண்டிய நிலை தோன்றி உள்ளது.
எனவே நாடு கடந்த அரசின் பிரதிநிதியாக நான் தொடர்ந்து செயற்படலாமா? இல்லையா? என்று சுய தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன். எமது மக்களின் உரிமைகளை வென்றெடுக்கின்றமைக்கு நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்.
இதனால்தான் நாடு கடந்த தமிழீழ அரசு என்கிற விடயத்தை நாம் கவனத்தில் கொண்டு தேர்தலில் போட்டியிட்டோம். இத்தேர்தல் மூலம் தமிழ் தேசியத்தின் சார்பாக அதிகமானோர் தெரிவு செய்யப்பட்டோம். நான் புலம்பெயர் தமிழர்களால் நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டவர்கள் அனைவருக்குள்ளும் மிகவும் அதிகப்படியான வாக்குகளைப் பெற்றவன்.
ஆனால் நாடு கடந்த அரசை உருவாக்கியவர்களும், அதன் இடைக்கால நிறைவேற்றுனரும் ஆரம்பம் முதலே வேறு திட்டங்களுடன் செயற்பட்டு வந்திருக்கின்றனர். தேசியத்தின் சார்பாக தெரிவு செய்யப்பட்டவர்களை வேண்டும் என்றே ஓரம் கட்டிச் செயற்படத் தொடங்கியிருந்தனர்.
ஆனால் ஒற்றுமையாகவும் வெளிப்படையாகவும் இயங்குகின்றனர் என்று மக்களுக்குத் தெரிவித்து வந்திருக்கின்றனர். லண்டனில் கடந்த மே மாதம் 17,18,19 திகதிகளில் நாடு கடந்த தமிழீழ அரசின் முதலாவது அமர்வு இடம்பெற்றது.
அதில் நான் உரையாற்றி இருந்தேன். சர்வதேச வலைக்குள்ளேயோ அல்லது இலங்கை அரசின் நிகழ்சி நிரலுக்குள்ளேயோ சென்று விடாது ’தமிழர்களின் ஒரே தலைமை-எமது தேசியத் தலைமை’ என்கிற தாரக மந்திரத்தின் அடிப்படையில் நாடு கடந்த அரசு செயற்பட வேண்டும் என்று அவ்வுரையில் கோரி இருந்தேன் ஆனால் நாடு கடந்த தமிழீழ அரசின் இடைக்கால நிறைவேற்றுனராக தெரிவு செய்யப்பட்டிருந்த வி.உருத்திரகுமாரன் சக பிரதிநிதிகளை அரவணைத்து நடக்கத் தவறி விட்டார்.
ஒருதலைப் பட்சமாக நடந்து கொண்டார். அது மாத்திரமின்றி இலங்கை அரசுக்கு முண்டு கொடுத்துக் கொண்டிருக்கும் குமரன் பத்மநாதனின் செயல் திட்டங்களுடன் நாடு கடந்த தமிழீழ அரசு செயற்படுகின்றதா? என்கிற அச்சமும் ஏற்பட்டுள்ளது.
இவற்றையெல்லாம் நியாயப்படுத்தும் வகையில் நாடுகடந்த தமிழீழ அரசின் இரண்டாவது அமர்வு இடம்பெற்றுள்ளது. ஒரு நாட்டின் அரசமைப்பு என்பது பல விடயங்களை உள்ளடக்கியதாகவும், ஒரு நாட்டுக்கான வலுவைக் கொண்டதாகவும் இருக்க வேண்டும்.
ஆனால் நாடு கடந்த தமிழீழ அரசினால் உருவாக்கப்பட்டுள்ள யாப்பு ஒரு கிராம அபிவிருத்திச் சங்கத்தின் யாப்பைப் போன்றுகூட இல்லை என்பது எனது கருத்தாக உள்ளது. மாறாக தனிப்பட்ட நபர் ஒருவரின் அல்லது ஒரு குழுவின் கரத்தைப் பலப்படுத்துவதாகவே அமைந்து விட்டது.
எனவே ஒரு நாட்டின் அல்லது தேசியத்தின் விடுதலைக்கான யாப்பாக இதைப் பார்க்க முடியாது. நாடு கடந்த தமிழீழ அரசின் இரண்டாவது அமர்வில் ஏராளமான முறைகேடுகளும், பக்கச்சார்பான-தான்தோன்றித்தனமான செயற்பாடுகளும் இடம்பெற்றிருக்கின்றன. என்னைப் போன்று தேசியத்தின் சார்பாக தெரிவு செய்யப்பட்டவர்களில் பலர் பதவிகளுக்கு ஆசைப்பட்டவர்களோ அல்லது விலை போனவர்களோ அல்லர்.புலம் பெயர் தேசத்தில் ஒற்றுமையைக் கட்டியெழுப்புகின்றமை மூலம் தமிழ் இனத்தின் விடுதலையை அடைகின்றமையே எமது நோக்கம். எனினும் நாடு கடந்த தமிழீழ அரசின் ஆரம்பிக்கப்பட்டது முதல் அங்கு ஐனநாயகம் என்பது கடைப்பிடிக்கப்படவே இல்லை. பக்க சார்பான நடவடிக்கைகளே மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கின்றன.
இரண்டாவது அமர்வு இடம்பெற்றபோது நாடு கடந்த தமிழீழ அரசின் முக்கியமான பதவிகளுக்கு வாக்கெடுப்பு நடத்தப்படவே இல்லை. ஜனநாயக வாக்கெடுப்பைத் தடுத்து நிறுத்தினர். தான்தோன்றித்தனமான முறையில் தெரிவுகள் இடம் பெற்றன. இது ஐனநாயகத்திதுக்கு பெரும் அபகீர்த்தியை ஏற்படுத்தி விட்டது.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் புறக்கணிக்கப்பட்டு விட்டனர். மக்களின் விருப்பு, வெறுப்புகள் கருத்தில் கொள்ளப்படவே இல்லை. தமிழ் தேசியத்தின் சார்பில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் பலர் நியூயோர்க், லண்டன், பிரான்ஸ் ஆகிய இடங்களில் இருந்து இரண்டாவது அமர்வில் கலந்து கொள்ள சென்றிருந்தனர்.
ஆனல் அமர்வில் கலந்து கொள்ள முடியாதபடி நடத்தப்பட்டனர். இதனால் இவர்கள் அமர்வில் இருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. இதைப் பயன்படுத்தி குறைந்தளவான உறுப்பினர்களின் பங்குபற்றலுடன் தெரிவுகள் இடம்பெற்றன. நான் இரண்டாவது அமர்வில் கலந்து கொள்ளவில்லை.
எனினும் அங்கு இடம்பெற்றுக் கொண்டிருந்த சம்பவங்களை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தேன். கடந்த மே மாதம் இடம்பெற்றிருந்த முதலாவது அமர்விலேயே எனக்கு சில சந்தேகங்கள் ஏற்பட்டிருந்தன. அதனால் நாடு கடந்த அரசின் மீது நம்பிக்கையீனம் ஏற்பட்டது என்பதும் உண்மையே.
ஆகவேதான் உறுப்பினர்கள் சிலரால் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த மக்கள் சந்திப்புகளில் நான் அதன் பின் கலந்து கொள்ளவில்லை. உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை மக்கள் முன் கொண்டு சென்று அவர்களை பிழையாக வழி நடத்த நான் விரும்பி இருக்கவில்லை. எனக்கும், தேசியத்துக்கும் வாக்களித்த மக்களுக்கு உண்மையான விடயங்களையே முன் வைக்க வேண்டும் என்பதே எனது எண்ணம்.
அந்த உண்மையான விடயங்கள் இன்று வெளிச்சத்துக்கு வந்து விட்டன. நாடு கடந்த தமிழீழ அரசின் நோக்கத்தையும், போக்கையும் மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். எனவே நாடு கடந்த அரசில் தொடர்ந்து செயற்படலாமா? இல்லையா? என்பதை நான் தீர்மானிக்க வேண்டிய நிலைக்கு வந்துள்ளேன். இக்கருத்தையே தேசியத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பலரும் கொண்டுள்ளனர்.
எனவே நாம் எந்த முடிவை எடுத்தாலும் அதற்கு நாடு கடந்த தமிழீழ அரசும், அதன் சர்வாதிகாரப் போக்குடைய ஒரு சிலரும்தான் பொறுப்புக் கூற வேண்டும். மக்களின் விருப்பு, வெறுப்புகளையோ- அரசியல் அபிலாஷைகளையோ கைவிட்டு விட்டு, தனிநபர்களின் அல்லது சர்வாதிகாரப் போக்குடைய ஒரு குழுவின் திட்டங்களுடன் இணைந்து செயற்பட என்னால் முடியாது என்பதைக் கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.
எனினும் தாயகம், தேசியம், கொள்கை என்பவற்றை இறுகப்பற்றிக் கொண்டு தேசியத் தலைமையின் வழியில் எமது மக்களின் விடுதலையை நோக்கிய எனது செயற்பாடு தொடரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக