27 அக்டோபர் 2010

மணியம் தோட்டத்திலிருந்து தமிழர்களை விரட்டியது சிங்களப்படை!

யாழ்ப்பாண மாநகர சபைக்கு உட்பட்ட பகுதியான மணியம் தோட்டத்திலுள்ள வசந்தபுரம் என்ற கிராமத்தில் மீள்குடியேறிய மக்களை சிங்களப்படையினர் துரத்தியுள்ளதாகச் செய்திகள் கிடைத்துள்ளன. 1995 ஆம் ஆண்டில் இடம்பெயர்ந்து 15 ஆண்டுகளின் பின்னர் தமது சொந்தக் கிராமத்தில் குடியேறிய 50 க்கும் மேற்பட்ட தமிழ்க் குடும்பத்தினரை திங்கட்கிழமை இரவு படைகள் துரத்தியுள்ளது. இந்த 50 குடும்பத்திலும் 200 தொடக்கம் 250 பேர் வரையானவர்கள் அடங்குகின்றனர். இவர்கள் மீண்டும் தமக்குரிய வீடுகளை இழந்து பரிதவிப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன.
யாழ்ப்பாணத்தில் இருந்து 1990 ஆம் ஆண்டில் இடம்பெயர்ந்து சென்ற சிங்களக் குடும்பங்கள் சில மீண்டும் இங்குவந்து யாழ். புகையிரத நிலையத்தில் முகாமிட்டுள்ளமை தெரிந்ததே. மணியம் தோட்டம் என்பது தமது சொந்த இடமென இவர்கள் கோரியுள்ளதோடு, தம்மை அங்கு மீளக்குடியேற்ற வேண்டும் எனவும் கோரியுள்ள நிலையிலேயே தமிழ்க் குடும்பங்களை சிங்களப்படைகள் இவ்வாறு துரத்தியுள்ளது.
மணியம் தோட்டத்தில் 1995 ஆம் ஆண்டில் தமது முகாமை அமைத்திருந்த படையினர் தற்போது அங்கு மீளக்குடியமர வந்துள்ள சிங்களவர்களுக்கு ஊக்கம் கொடுத்து, முகாமைச் சூழவுள்ள நிலத்தில் மீள்குடியமர உதவுவதாகவும்கூட செய்திகள் கூறுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக