22 அக்டோபர் 2010

போர்க்குற்ற புகைப்பட விவகாரத்தை அரசு எதிர்கொள்ளத் தயார் - கெஹெலிய.

குறிப்பிட்ட சில நிறுவனங்களும் அரசு சாரா நிறுவனங்களும் உலகளவில் இலங்கைக்கு உள்ள நற்பெயரைக் களங்கப்படுத்தவெனப் பாடுபட்டு வருகின்றன. இவற்றை அரசாங்கமும் தனது வல்லுநர்களைக் கொண்டு முறியடித்து வருகின்றபோதிலும், அது தொடர்ந்துகொண்டே வருகின்றது என்று கூறியுள்ளார் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வல. இதன் ஒரு கட்டமாக தற்போது வெளியாகியுள்ள புகைப்பட விவகாரத்தையும் அரசாங்கம் துணிவாக எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும், அரசு அமைத்துள்ள நல்லிணக்க ஆணைக்குழுவானது தனது சாட்சியங்களைப் பதிவு செய்ததும் அந்த அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபையிடம் கையளிக்க உள்ளதாக அவர் குறிப்பிட்டார். இவ்வறிக்கை அரசாங்கம் கொடுக்கும் உத்தியோகபூர்வ அறிக்கையாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.
அடுத்த ஆண்டுக்கான வரவு செலவறிக்கையில் நாட்டின் பாதுகாப்புக்கென அதிகூடிய தொகை ஒதுக்கப்பட்டுள்ளமை குறித்தும் பலர் அரசுக்கு எதிராக பரப்புரை மேற்கொண்டு வருகிறார்கள். போர் முடிந்த பின்னரும் பாதுகாப்புச் செலவீனம் அதிகரிக்கிறது என அவர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். கடந்த ஆண்டு நடந்த இறுதிக்கட்டப் போரில் பாவனைக்கு வேண்டிய சில ஆயுதங்களை அரசின் நட்பு நாடுகள் கொடுத்துதவின.
தொலைபேசி மூலம் அறிவிக்கவும் அவர்கள் அந்த ஆயுதங்களை எங்களுக்கு அனுப்பி வைத்தார்கள். ஆனால் அவற்றுக்கு அப்போது கட்டணம் செலுத்தப்படவில்லை என்பதால், இனித்தான் அக்கட்டணங்களைச் செலுத்த வேண்டி உள்ளது. எனவேதான் பாதுகாப்புச் செலவீனம் அதிகரிக்கிறது என்று கெஹெலிய பத்திரிகையாளர்களிடம் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக