25 அக்டோபர் 2010

தமிழர்களுக்குரிய லாண்ட்மாஸ்டர்கள் சிங்களவர்களுக்கு அளிப்பு!

போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வழங்கவிருந்த லாண்ட்மாஸ்டர்களைப் பிடுங்கிய அரசு அவற்றைச் சிங்களவர்களுக்குக் கையளித்துள்ளது. மொத்தமாக 470 பேருக்கு லாண்ட்மாஸ்டர்களை வழங்கவிருந்த செஞ்சிலுவைச் சங்கம், வவுனியா மாவட்டத்துக்கென 102 லாண்டமாஸ்டர்களை ஒதுக்கி இருந்தது. இதற்கான பயனாளிகள் பெயரும் செஞ்சிலுவைச் சங்கத்தாலேயே தயாரிக்கப்பட்டிருந்தது. ஆனால் அரசாங்க அதிகாரிகளோ தாம் கூறுபவர்களுக்கு அவற்றை வழங்க வேண்டும் என நிர்ப்பந்தித்ததோடு, அதற்கு மறுப்புத் தெரிவித்தால் ஒருவருக்குமே லாண்ட்மாஸ்டர்களைக் கொடுக்க முடியாதென்றும் நிர்ப்பந்தித்துள்ளனர்.
இந்த நிர்ப்பந்தந்தை அடுத்து, அரச தரப்பினர் தெரிவு செய்த பயனாளிகளுக்கே அவை வழங்கப்பட்டன. இவ்வாறு வழங்கப்பட்ட உழவு இயந்திரங்கள் அனைத்தும் வவுனியா வடக்கு விவசாயிகளுக்கு வழங்குவதற்கே முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது. அரசின் தலையீட்டை அடுத்து வெலிஓயா மற்றும் வவுனியா தெற்கில் குடியேற்றப்பட்ட சிங்கள மக்களுக்கு அவை வழங்கப்பட்டுள்ளன. இரு இடங்களுக்கும் தலா 25 லாண்ட்மாஸ்டர்கள் வீதம் 50 லாண்ட்மாஸ்டர்கள் சிங்களவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. கெலபகஸ்வௌ, ரங் கெத்கம, ஒசுடப்பிட்டிய, அவரந்தலாவ பகுதிகளில் குடியேற்றப்பட்ட சிங்கள மக்களுக்கே இவை பகிர்ந்தளிக்கப்பட்டன.
எஞ்சிய 52 லாண்ட்மாஸ்டர்கள் மட்டுமே போரால் பாதிக்கப்பட்ட வவுனியா வடக்கைச் சேர்ந்த தமிழ் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. இந்த ஏமாற்றத்தைத் தாங்கிக் கொள்ள முடியாத செஞ்சிலுவைச் சர்வதேசக் குழுவின் வவுனியா கிளை அதிகாரி மேரிஸ் லிமோனார் தேம்பித் தேம்பி அழுததைக் காணக்கூடியதாக இருந்தது.
சிங்களவர்களுக்கு கையளிக்கும் நிகழ்வில் வர்த்தக, கைத்தொழில் அமைச்சர் ரிசாத் பதியுதீனும் வடக்கு மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியும் மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோரும் கலந்து கொண்டனர்.

1 கருத்து:

  1. அன்று சிங்கள இனவாதிகள் வடகிழக்கிற்கு அனுப்பி வைக்கப்ட்ட சுனாமி நிவாரணங்களை கடலையே காணாத சிங்களக் கிராமங்களுக்கு வழங்கி மகிழ்ந்தார்கள். இனவழிப்பின் போது தம் உறவுகளுக்கு புலம் பெயர் தமிழீழ மக்கள் அனுப்பிய நிவாரணங்ளை கொடுக்க விடாது கப்பலிலே அநியாயமாக பழுது பட வி்ட்டு வேடிக்கை பார்த்தார்கள். உலக நாடுகள் பாதிக்கப்ட்ட தழிழருக்கு அனுப்பி வைத்த நிதி கொண்டு சிங்கள குடியிருப்புகளை ஆக்கிரமிப்பாளன் ஏற்படுத்திக் கொடுததான். (இந்தியா தமிழருக்கென்று கண்கட்டி வித்தை காட்டி அனுப்பிய நிதி கொலைவெறி இராணுவத்திற்குப் பயன்பட அனுப்பியவை. அந்த நிதிபற்றி எமக்கு கவலையில்லை) இப்போது ஏதுமற்ற அந்த ஈனத்தமிழனுக்கு ஏதோ ஒரு நிறுவனம் உயிர் பிழைக்கக் கொடுதத கருவிகளும் பறித்துக் கொண்டு ரூத்திரதாண்டவம் ஆடுகிறது இனவெறி கொலைவெறி சிங்களம். அதற்குத் துணையாக தமிழ் பேசும் ஒரு ஈன முஸ்லிம அரசியல் வாதி. யார் இனி எம்மை காப்பாற்றுவார்?

    பதிலளிநீக்கு