16 அக்டோபர் 2010

சரணடைந்து காணாமல் போனவர்களின் பட்டியல் ஒப்படைப்பு!

இறுதி யுத்தத்தின்போது சரணடைந்த விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் பலர் காணாமல் போயுள்ளனர். இவ்வாறு காணாமல் போயுள்ளவர்களின் பெயர்ப்பட்டியலை அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் இன அழிப்புக்கு எதிரான தமிழர்கள் அமைப்பு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் போர்க் குற்றப் பிரிவிடம் கையளித்துள்ளது. பிரிட்டனிலுள்ள தமிழ் புலம்பெயர்வாளர்களிடமிருந்து பெறப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டு ஒக்ரோபர் 2010 வரை காணாமல் போயுள்ளவர்களின் விவரங்களே பட்டியலிடப்பட்டுள்ளன.
விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல், நிர்வாகம், மருத்துவம் மற்றும் நிதிப்பிரிவுகளைச் சேர்ந்த போராளிகளே சரணடைந்திருந்தனர். இவ்வாறு சரணடைந்தவர்களில் 70 வீதமானவர்கள் பற்றிய விவரம் எதுவுமே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
சரணடைந்த பலரையும் இலங்கை இராணுவத்தினர் சித்திரவதை செய்து, சுட்டுக் கொல்வது போன்ற பல ஆதாரங்களை மனித உரிமைகள் கண்காணிப்பகம் பெற்றுள்ளது. இவ்வாறான போர்க்குற்றங்களுக்கு எதிராக ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றில் வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது.
தற்போது அரசாங்கம் நடத்திவரும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கின்ற போரால் பாதிக்கப்பட்ட பலரும் தமது பிள்ளைகள் காணாமல் போனதையே தெரிவித்துள்ளனர். அதோடு விடுதலைப் புலிகளின் முன்னாள் பேச்சாளர் இளந்திரையனின் மனைவி தனது கணவரை இராணுவத்தினர் கைது செய்து சென்ற பின்னர் காணாமல் போயுள்ளதாக முறையிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக