13 அக்டோபர் 2010

நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாடு கண்துடைப்பாக அமைந்துவிடக் கூடாது!

கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயற்பாடுகள் வெறுமனே கண்துடைப்பாக அமைந்துவிடக் கூடாது. எதிர்பார்ப்புகளுடன் சாட்சியமளிக்கின்ற மக்களின் மனங்களை வெல்லும் வகையில் அரசாங்கம் நடந்து கொள்வது அவசியமானது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழுவினால் வடக்கிலும் கிழக்கிலும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது பெரும்பாலான தமிழ் மக்கள் சாட்சியமளித்த அதேவேளை மனுக்களையும் சமர்ப்பித்துள்ளனர். இது குறித்து கருத்து வெளியிடுகையிலேயே கூட்டமைப்பின் பிரதிச் செயலாளரும் வன்னி மாவட்ட எம்.பியுமான செல்வம் அடைக்கலநாதன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,”இலங்கையைப் பொறுத்தவரையில் இங்கு இதற்கு முன்னரும் பல ஆணைக்குழுக்கள் நிறுவப்பட்டு விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனாலும் அந்த ஆணைக்குழுக்களும் அதன் செயற்பாடுகளும் இறுதியில் புஸ்வாணமானதை நாம் கண்டிருக்கின்றோம். அவ்வாறான ஆணைக்குழுக்களினூடாக மக்களுக்கு தீர்வு கிட்டவில்லை.
இந்நிலையில் கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கானது என்ற தொனியில் ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டு விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. யுத்தமும் நிறைவடைந்து மக்களும் இழப்புக்களைச் சந்தித்து நொந்து போயுள்ள நிலையில் தற்போது அமைக்கப்பட்டுள்ள நல்லிணக்க ஆணைக்குழுவில் எமது மக்கள் பெரும் நம்பிக்கையைக் கொண்டுள்ளனர்.
நிவாரணம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் மிகவும் ஆர்வமாக சாட்சியமளித்து வருகின்றனர். எனவே மக்களின் நம்பிக்கைக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் குந்தகம் ஏற்படாத வகையில் இந்த ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் அமைய வேண்டும். இதற்கு அரசாங்கத்தின் ஒத்துழைப்பும் அவசியமானது.
நமது உறவுகளைத் தொலைத்து நிற்கின்றவர்களின் நிலைமைகளை இவ்வாணைக்குழுவும் அரசாங்கமும் புரிந்து கொண்டு செயற்பட வேண்டியது இன்றியமையாததாகும்.
எனவே முன்னர் அமைக்கப்பட்ட ஆணைக்குழுக்களைப் போல் அல்லாது தற்போதைய கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் வகையில் அமைய வேண்டும். மாறாக இதுவும் ஒரு கண் துடைப்பாக இருந்து விடக்கூடாது என்பதே தமிழ் தேசியக்கூட்டமைப்பின் எதிர்பார்ப்பாகும்” என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக