அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அமைச்சர் ரிசாத் பதியுதீன், நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்கா ஆகியோருக்கே அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றது.
பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோரைக் கூட பெரிதாக பொருட்படுத்துவது இல்லை.
தமிழ் தேசிய கூட்டமைப்பை அலட்சியப்படுத்தியே நடக்கின்றது.” இவ்வாறு குற்றஞ்சாட்டி உள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், யாழ்.மாவட்ட எம்.பியுமான சுரேஸ் பிரேமச்சந்திரன்.
அவர் இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டி ஒன்றிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெறுகின்ற அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் பங்குபற்ற கூட்டமைப்பு அழைப்பு விடுக்கப்படுவதே இல்லை. கிழக்கு மாகாண அபிவிருத்தி சம்பந்தமாக திருகோணமலையில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற கூட்டத்துக்கு அழைப்பு விடுவிக்கப்படவில்லை.
வட மாகாண அபிவிருத்தி சம்பந்தமான வவுனியா கூட்டத்துக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. இது ஜனநாயக ரீதியான செயலா? வடக்கு, கிழக்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரிதிநிதிகளைப் புறக்கணித்துக்கொண்டு அம்மக்களின் தலைவிதியை தீர்மானிக்கின்றார்கள்.
ஜனாதிபதியின் சகோதரரான பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ, ஜனாதிபதியின் புதல்வர் நாமல் ராஜபக்ஸ எம்.பி ஆகியோர் ஏராளமான தடவைகள் வட மாகாணத்துக்கு விஜயம் செய்திருக்கின்றார்கள்.
ஆனால் அங்கு கூட்டமைப்பினரைச் சந்திக்கவே இல்லை. அரசு சில அரசியல்வாதிகளுடனேயே தொடர்புகளை வைத்திருக்க விரும்புகின்றது. டக்ளஸ் தேவானந்தா, ரிசாத் பதியுதீன், ஜே.ஸ்ரீரங்கா போன்றவர்களையே மடியில் தூக்கி வைத்திருக்கின்றது.
பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோரைக் கூடப் பெரிதாகக் கணக்கில் எடுப்பதில்லை என தெரிவித்தார் சுரேஷ் பிரேமச்சந்திரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக