31 அக்டோபர் 2010

நல்ல யோசனைகளை முன்வைத்தால் சிறிலங்கா ஏற்றுக்கொள்ளும் என்கிறார் பீரிஸ்.

ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ளத் தயார் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். பரிந்துரைகளை வரவேற்பதாகத் தெரிவித்ததன் மூலம் சகல பரிந்துரைகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் கிடையாது என அவர் கூறினார். எந்தத் தரப்பினராலும் நல்ல யோசனைத் திட்டங்கள் முன்வைக்கப்பட்டால் அதனை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள தயக்கம் காட்டாது.
ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவினால் நல்ல யோசனைகள் முன் வைக்கப்பட்டால் அதனை ஏற்றுக் கொள்வதில் எவ்வித சிக்கல்களும் கிடையாது என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித் துள்ளார்.அவர் மேலும் கூறியதாவது,
வெளிநாட்டுச் சக்திகளால் மேற்கொள்ளப்படும் எந்தவிதமான விசா ரணைகளையும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என அரசு ஏற்கெனவே திட்டவட்டமாக அறிவித்துள்ளது. எவ்வாறெனினும் ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழு விசாரணை நடத்தவில்லை. தமக்கு ஆலோசனை வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்டது என பான் கீ மூன் பல சந்தர்ப்பங்களில் எனக்கு அறிவித்துள்ளார்.
உலகின் அனைத்து நாடுகளிலும் ராஜதந்திர சேவையில் அரசியல் தலையீடு காணப்படுகின்றது.இலங்கையிலும் அவ்வாறான நிலைமைகள் காணப்படுவதனை மறுப்பதற்கில்லை.பத்து பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சமஷ்டி ஆட்சி முறைமை குறித்து தாம் வலியுறுத்திய போதிலும் தற்போது நிலைமைகள் மாறியுள்ளதாகவும் தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
இதனால் பல ஆண்டுகளுக்கு முன்னர் அதே நிலைப்பாட்டை தற்போது ஒப்புநோக்குவது பொருத்தமாகாது என அவர் குறிப்பிட்டுள்ளார். நோர்வே அரசாங்கத்துடனான உறவுகளை துண்டிக்க வேண்டிய அவசியம் கிடையாது. சமாதான முனைப்புக்களுக்கு முன்னதாகவே இலங்கைக்கும் நோர்வேக்கும் இடையில் தொடர்புகள் காணப்பட்டன.
பொருளாதார ரீதியில் இரு நாடு களுக்குமிடையில் நெருங்கிய பிணைப்புக் காணப்பட்டது இலங்கையின் தென்பகுதி அபிவிருத்திப் பணிகளில் நோர்வே அரசாங்கம் காத்திரமான பங்களிப்பை வழங்கியுள்ளது. இதனை எவரும் மறந்துவிடக் கூடாது.பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் ஜனாதிபதி பிரதம அதிதியாக அழைக்கப்பட்டமையினால் சீனாவுடனான உறவுகளில் விரிசல் ஏற்படாது.
இலங்கையின் நிலைமைகள் குறித்து வெளிநாடுகளில் போதிய அளவு தெளிவுப்படுத்தப்படவில்லை எனவும் எதிர்காலத்தில் தூதுவராலயங்களின் ஊடாக அதிகளவு தெளிவு படுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக