19 அக்டோபர் 2010

சரத் சிறையிலும் நாம் வெளியிலும் அரசியல் கைதிகளாக இருக்கிறோம்!-ரணில்.

எவருடைய வேண்டுகோளுமின்றி ஜனாதிபதி தனது விருப்பத்தின் பேரில் மட்டும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை சிறைத் தண்டனையில் இருந்து விடுதலை செய்ய முடியுமென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கல்கிஸை, ஸ்ரீ ரம்ய விகாரையில் சரத் பொன்சேகாவின் விடுதலையின் நிமித்தம் சனிக்கிழமை நடைபெற்ற மத வழிபாடுகளின் இறுதியில் உரையாற்றும் போதே ரணில் விக்கிரமசிங்க இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
அவர் இங்கு மேலும் பேசுகையில், “சரத் பொன்சேகா எந்தவொரு சட்டத்தையும் மீறவில்லை என்றபோதும் அவர் ஆலோசனைகளை மீறியிருப்பதாகக் கூறுகின்றனர். ஆலோசனைகளை மீறுவதென்பது சட்டத்தை மீறுவதாகாது.
அது மட்டுமல்லாது சரத் பொன்சேகாவின் மருமகனான தனுன திலகரட்ணவுக்கும் ஹைகோப் நிறுவனத்துக்கும் இடையில் எந்தத் தொடர்பும் இல்லையென நிறுவனங்கள் பதிவாளர் இரண்டாவது இராணுவ நீதிமன்றம் முன்னிலையில் சாட்சியமளித்திருக்கிறார்.
சர்வதேச போர்க் குற்ற நீதிமன்றத்துக்கான உடன்படிக்கையில் கையெழுத்திடுவதை நிராகரித்து படையினர் அனைவரையும் காப்பாற்ற என்னால் முடிந்திருந்தது என்றால், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவைப் பாதுகாத்துக் கொள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ செயற்படாதது ஏன் என்பது எமது கேள்வியாக இருக்கிறது.
சரத் பொன்சேகாவின் ஜெனரல் பதவி நிலை, அவரது ஓய்வூதியம் போன்றவற்றைப் பறித்து, அவரை சிறை வைத்ததன் மூலம் அரசாங்கம் படையினரைக் கணக்கில் எடுக்காமல் மதிக்குகாமலுமே செயற்படுகிறது என்பது தெளிவாகிறது.
முன்னாள் இராணுவத் தளபதியை விடுதலை செய்ய சட்டத்தில் எந்தத் தடையுமில்லை. அதற்கமைய எவரது வேண்டுகோளுமின்றி ஜனாதிபதி தனது விருப்பத்தின் பேரில் மட்டும் அவரை விடுதலை செய்ய முடியும்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை சரத் பொன்சேகா அன்று வெற்றிகொள்ளவில்லை எனில் மகிந்த ராஜபக்ஷவின் வீழ்ச்சி கண்டிருக்கும். அப்படியென்றால் அரசாங்கத்தைப் பாதுகாத்த நபரை விடுதலை செய்ய ஜனாதிபதி முடியாமல் போனது ஏன்?
இராணுவ நீதிமன்றத்தினால் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்ட தண்டனையை இராணுவ சட்டத்தின் கீழ் இரத்து செய்து அவரை விடுதலை செய்யுமாறு எனது கையெடுத்திட்டு ஜனாதிபதியிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்தேன். அதேபோல், சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி ராஜபக்ஷவை வலியுறுத்தி கையெழுத்திடும் மக்கள் மனுவுக்கு நான் உட்பட பலரும் கையெழுத்திட்டோம். அப்படி என்றால் சரத் பொன்சேகாவை, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விடுதலை செய்ய இந்த நடவடிக்கைகள் போதுமானவையே.
உண்மையில் சரத் பொன்சேகா மட்டுமன்றி இந்த நாட்டின் சகல மக்களுமே அரசியல் கைதிகள் தான். சரத் பொன்சேகா வெலிக்கடையில் அரசியல் கைதியாக இருப்பதுடன், நாம் அனைவரும் இலங்கை எனும் தீவினுள் அரசியல் கைதிகளாக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக