10 அக்டோபர் 2010

சரத்துக்காக இலங்கை அரசைக் கண்டித்துள்ளது கனடா தமிழர் அமைப்பு!

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக குரல்கொடுத்திருக்கும் கனடாவிலுள்ள தமிழ்ச் சமூகம் அவரை நடத்தும் விதம் குறித்து இலங்கை அரசாங்கத்திற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறது. இராணுவ ஜெனரல் என்ற முறையில் பொன்சேகாவுடன் எமக்கு பிரச்சினைகள் இருந்தன. ஆனால், அரசியல்வாதி என்ற ரீதியில் அவருடன் எமக்கு வேறுபாடுகள் எதுவும் கிடையாது. அவர் அநீதியான முறையில் நடத்தப்பட்டு சிறைவைக்கப்பட்டுள்ளார் என்று கனடிய தமிழ்க் காங்கிரஸின் தேசிய பேச்சாளர் டேவிட் பூபாலபிள்ளை ஐ.ஏ.என்.எஸ்.செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார். முன்னாள் இராணுவத் தளபதி நடத்தப்படும் விதமானது தமிழர்கள் உட்பட தமது எதிராளிகளை இந்த அரசாங்கம் எவ்வளவு கொடூரமாக நடத்துகின்றது என்பதைக் காட்டுகின்றது. புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகமாகிய நாங்கள் ஆயிரக்கணக்கான தமிழர்களின் விடுதலைக்காக மட்டுமன்றி பொன்சேகாவின் விடுதலைக்காகவும் போராடுவோம் என்று அவர் கூறியுள்ளார்.
ராஜபக்ஷ குடும்பத்தினரின் கீழ் மத்திய கால முடியாட்சியின் கீழ் இலங்கை சென்றுள்ளது. இந்த ஆட்சிக்கு அதிகாரமளித்த தென்பகுதி மக்கள் விழித்தெழும் வரை இலங்கை இந்த நிலைமைக்கு சென்றுகொண்டிருக்கும். ஜனவரியில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் பொன்சேகாவுக்காக வாக்களித்த 40 இலட்சம் மக்களை இலங்கை அரசு அவமதித்துள்ளது. மனித உரிமைகளையோ, ஜனநாயகத்தையோ இந்த ஆட்சி பொருட்படுத்தவில்லை என்பதை இது காட்டுகிறது. இலங்கை சர்வாதிகார ஆட்சியின் முனையில் உள்ளது என்று டேவிட் பூபால பிள்ளை தெரிவித்திருக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக