15 அக்டோபர் 2010

கனடாவில் புகலிடம் கோரும் தமிழர் பொருளாதார குடியேற்றவாசிகளாம்!

கனடாவின் மேற்குக்கரையைச் சென்றடைந்த சுமார் 500 இற்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்களை திருப்பியனுப்புமாறு இலங்கை அமைச்சர் ஜி.எல். பீரிஸ் கூறியுள்ளார். இலங்கையில் தங்களின் தனிப்பட்ட பாதுகாப்புக் குறித்து தாம் அச்சமடைவதாக கனடிய அதிகாரிகளுக்கு இந்தப் புகலிடம் கோருவோர் கூறுவது நேர்மையற்றதென வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்து ஒரு வருடத்தில் அமைதி திரும்பியிருக்கிறது. ஆயினும், தமிழர்கள் இலங்கையை விட்டு தொடர்ந்து வெளியேறி வருகின்றனர். கடந்த ஆகஸ்டில் 490 பயணிகள் வன்கூவருக்கு சரக்குக் கப்பலில் வந்து சேர்ந்தனர். அதற்கு முன்னர் 76 இலங்கையர்கள் மற்றொரு கப்பலில் வைத்து கனடிய கடற்பரப்பில் இடைமறிக்கப்பட்டிருந்தனர். வேறு கப்பல்களும் தமிழர்களுடன் தாய்லாந்துக்குச் சென்று அங்கிருந்து கனடாவுக்கு பசிபிக் சமுத்திரத்தைக் கடந்து வருகைதர இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தப் புகலிடம்கோருவோர் பொருளாதார குடியேற்றவாசிகளெனவும் அச்சத்தினால் அகதிகளாக வருவோரல்ல எனவும் பீரிஸ் கூறுகிறார். அகதி அந்தஸ்த்துக்கு விண்ணப்பிப்பதற்கான நியாயபூர்வமான அடிப்படை அம்சம் எதுவுமில்லையென அவர் தனது கொழும்பிலுள்ள அலுவலகத்தில் வைத்து "த ஸ்ரார்"க்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
அண்மைய மாதங்களில் இந்த நாட்டில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன என்று கூறியுள்ள அவர், இப்போது அகதி அந்தஸ்து கோரும் மக்கள் பொருளாதாரக் காரணங்களுக்காக அதனைச் செய்கின்றனர் என்றுள்ளார். வளமான வாழ்க்கையைப் பார்ப்பதற்கு அவர்கள் விரும்புகின்றனர். இந்த நாட்டில் அட்டூழியங்கள் இடம்பெறுவதாக குற்றஞ்சாட்டுவது அல்லது தவறாக செயற்பட்டவற்றை மறுத்து வைக்க விரும்புவது நேர்மையற்றதாகும் என்றும் நாட்டிற்கு அது பாதிப்பை ஏற்படுத்தும் விடயம் என்றும் பீரிஸ் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக