06 அக்டோபர் 2010

இலங்கை ஊடாக சீனா ஆயுதக் கடத்தல்: அதிர்ச்சித் தகவல்.

இலங்கையை தளமாகக் கொண்டு ஆசிய நாடுகளில் உள்ள சில முஸ்லீம் தீவிரவாத அமைப்புகளுக்கு சீனா ஆயுதங்களை வழங்கிவருவதாக 150 பக்கங்கள் அடங்கிய அறிக்கை ஒன்றை றோ அமைப்பு தயாரித்துள்ளதாக அதிர்வு இணையத்திற்கு செய்திகள் கசிந்துள்ளது. பாகிஸ்தானுடன் இணைந்து சீனா இந்தியாவுக்கு எதிராகச் செயல் படும் முஸ்லீம் தீவிரவாதிகளுக்கு கைக்குண்டுகள் உட்பட, வெடிபொருட்களையும் வினியோகித்துள்ளது. 2007ம் ஆண்டு பனாமா நாட்டுக்கு சொந்தமான கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டு இருந்தவேளை அதனை புலிகளின் கப்பலாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் சோதனை இட்டதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானில் இருந்து இக் கப்பல் புறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டபோதும், இது பங்களாதேஷ் நோக்கிச் செல்வதாக சொல்லப்பட்டது. ஆனால் அதற்கான சான்றிதழ்கள் சமர்பிக்கப்படவில்லை. இதனால் இக் கப்பலை இலங்கை கடற்படையினர் தொடர்ந்தும் தடுத்துவைத்தனர். கப்பலில் ARGES 84 என்று அழைக்கப்படும் கைக்குண்டுகளும், வெடிபொருட்களும் இருந்தாகக் கூறப்படுகிறது. பின்னர் பாகிஸ்தான் இராணுவம் கடும் அழுத்தத்தைப் பிரயோகித்து அக்கப்பலை விடுவித்ததாகவும், பின்னர் அக்கப்பலில் உள்ள தளபாடங்களை சீனக் கப்பல் ஒன்று ஏற்றிக்கொண்டு பங்களாதேஷ் சென்றதாகவும் அறியப்படுகிறது.
பென்டா ஏற்றியல் டெட்ரா நைட்ரேட் (Penta Erythrital Tetra Nitrate (PETN) என்று அழைக்கப்படும் இந்த வெடிபொருட்கள் சுமார் 10 கண்டேனர்களில் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இதே போலவே சமீபத்தில் சீனாவின் 3 கண்டேனர் கரடியனாறில் வெடித்துச் சிதறியதும் யாவரும் அறிந்த விடயம். இவை அனைத்தும் சீனாவின் கண்டேனர் என சீன அரசே ஒத்துக்கொண்டுள்ள நிலையில், இவை யாருக்காக களஞ்சியப்படுத்தப்பட இருந்தது? அது ஏன் வெடித்தது என்று பலராலும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த சில மாதங்களாக கொழும்பு வந்துசெல்லும் சீனாவின், மற்றும் பாகிஸ்தானின் கப்பல்கள் குறித்து கொழும்பில் றோ அமைப்பு தனது புலனாய்வுகளை முடுக்கிவிட்டுள்ளனர். இது குறித்த அறிக்கை ஒன்றை அவர்கள் இந்திய மத்திய புலனாய்வுத்துறைக்கு அனுப்பியுள்ளதாகவும், இதனை அடுத்து இந்தியா பல நடவடிக்கைகளை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் நம்பப்படுகிறது. ஆசிய நாடுகளில் இயங்கிவரும் பல முஸ்லீம் அமைப்புகளுக்கு சீனா தற்போது ஆயுதங்களை வழங்கிவருவது நிரூபணமாகியுள்ளது. மொத்தத்தில் இந்தியா கொஞ்சம் அசந்தால் சீனா தனது ஆதிக்கத்தை மிக விரைவில் பெருக்கிவிடும் அபாயம் நிலவுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக