12 அக்டோபர் 2010

கொலைகாரனுக்குக் கிரீடம்: இந்திய அரசின் ஈனத்தனம்!

தமிழ் இனத்துக்கு எதிராக இந்திய அரசு இழைத்து வரும் துரோகத்துக்கும், அக்கிரமத்துக்கும் எல்லையே இல்லாமல் போய்விட்டது. இலங்கைத் தீவில், இலட்சக்கணக்கான தமிழர்களைப் படுகொலை செய்த மாபாதகன் மகிந்த ராஜபக்சேயை, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் நிறைவு விழாவின் சிறப்பு விருந்தினராக, இந்திய அரசு அழைத்து இருக்கிறது.
பிரித்தானியப் பேரரசின் ஆதிக்கத்துக்கு உட்பட்டு இருந்த பல நாடுகள் காமன்வெல்த் நாடுகள் ஆயின. 71 நாடுகள் கலந்து கொள்ளும் விளையாட்டுப் போட்டிகள், இந்திய நாட்டின் தலைநகர் டெல்லியில், 70,000 கோடி செலவில் நடத்தப்படுகின்றன.
விழாவைக் கோலாகலமாகத் தொடங்கி வைக்க, இங்கிலாந்து அரச குடும்பத்தின் பிரதிநிதியாக, இளவரசர் சார்லஸ் இந்திய அரசால் அழைக்கப்பட்டு, அவரும் பங்கு ஏற்றுத் தொடங்கி வைத்தார். நாளை மறுநாள் (14.10.2010) அன்று, இந்தப் போட்டிகளின் நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கு ஏற்று முடித்து வைக்க, தமிழ் இனத்தை இரத்த வேட்டையாடிய ராஜபக்சேக்கு இந்திய அரசு கிரீடம் சூட்டப் போகிறது.
இந்தச் செய்தியையும், ஏடுகளுக்கும், ஊடகங்களுக்குத் தெரியாமல் படு ரகசியமாக,மூடு மந்திரமாக வைத்து இருந்தது. கொழும்பில் இருந்து வெளியாகின்ற இலங்கை அரசின் ஆதரவுப் பத்திரிகையான ‘சண்டே அப்சர்வர்’, இந்திய அரசின் அழைப்பை வெளியிட்டு இருக்கிறது.
இது இந்திய அரசாங்கத்தினுடைய திட்டமிட்ட சதிவேலை ஆகும். முக்கியமான ஒரு நோக்கத்துக்காகத்தான் இந்த அநீதியை இந்திய அரசு செய்கிறது. ஈழத்தமிழர்களை இனப்படுகொலைக்கு ஆளாக்கிய ராஜபக்சே அரசின் குற்றங்களை ஆய்வு செய்ய, ஐ.நா.மன்றத்தின் பொதுச்செயலாளர் மூவர் குழுவை அமைத்து உள்ளதாலும், அயர்லாந்தில் டப்ளினில், இந்த ஆண்டு ஜனவரியில் கூடிய, பன்னாட்டு நீதிமான்களின் தீர்ப்பு ஆயம், சிங்கள அரசின் போர்க்குற்றங்களை விசாரிக்க வேண்டும் என்று தீர்ப்பு அளித்து உள்ளதாலும், ஐரோப்பிய ஒன்றியம், இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களுக்காக, வரிச்சலுகைகளை இரத்து செய்ததாலும், அனைத்து உலக நாடுகளில் சிங்கள அரசு செய்த இனக்கொலை பற்றிய, விழிப்பு உணர்வு வேகமாக ஏற்பட்டு வருவதாலும், மகிந்த ராஜபக்சேயைப் பாதுகாப்பதற்காகவே, இந்த ஈனத்தமான துரோகத்தில் இந்திய அரசு ஈடுபட்டு உள்ளது.
ஏனெனில், இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை இயக்கியது இந்திய அரசுதான். அளவற்ற ஆயுதங்களை, இலங்கையின் முப்படைகளுக்கும் வாரிக்கொடுத்து, இந்தியாவின் முப்படைத் தளபதிகளையும் இலங்கைக்கு அனுப்பி வைத்து, போர்த்திட்டங்களை வகுத்துக் கொடுத்து, உலகின் பல நாடுகள் போர் நிறுத்தம் கேட்டபோதும், ஒப்புக்குக் கூட இந்திய அரசு போர்நிறுத்தம் வேண்டும் என்று இலங்கை அரசுக்குச் சொல்லாமல், போரைத் தீவிரப்படுத்துவதற்கே, அனைத்து வேலைகளிலும் ஈடுபட்டது.
எனவே, ஈழத்தில் நடைபெற்ற தமிழ் இனப்படுகொலைக்கு, இலங்கை அரசோடு, இந்திய அரசும் கூட்டுக் குற்றவாளி ஆகும். தாங்கள் விரும்பியவாறு போரை நடத்திய, இலங்கை அரசுக்கு, உதவ வேண்டியே, இந்திய அரசு இராஜபக்சேயை, இந்தியாவுக்கு அழைத்து வந்து, நான்கு நாள்கள் அரசு விருந்தாளியாக ஏற்கனவே உபசரித்தது. இந்தியாவில் உள்ள மாநிலமாகிய தமிழ்நாட்டில் ஏழுகோடித் தமிழர்கள் வாழும் நிலையில், அந்த இந்திய அரசே இராஜபக்சேயை, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை முடித்து வைக்கின்ற கௌரவத்தைக் கொடுத்ததால், ஈழத்தமிழர்களுக்கு சிங்கள அரசு, கொடுமை செய்யவில்லை என்ற எண்ணத்தை, உலக நாடுகளிடம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே, இந்த அநியாயத்தை இந்திய அரசு செய்கிறது.
இந்திய அரசு, ஈழத்தமிழர்களுக்குத் துரோகத்துக்கு மேல் துரோகமாக இழைத்து வருவது, தொடர்கதையாகிக் கொண்டு இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் பத்து இந்தியர்கள் தாக்கப்பட்டதற்கு இந்திய அரசு கொதித்து எழுந்து, ஆஸ்திரேலிய அரசுக்குக் கண்டனம் தெரிவித்ததையும், அதற்கு ஆஸ்திரேலிய அரசும், துக்தரகமும் மன்னிப்புத் தெரிவித்ததாகவும் கர்வத்தோடு தெரிவித்துக் கொள்கிறது.
நியூசிலாந்து நாட்டின் தொலைக்காட்சி நிருபர் ஒருவர் தில்லி மாநில முதல்வரை அவமதித்து விட்டதாகக் கூறி, இந்திய அரசு கண்டனம் தெரிவித்ததற்கு, நியூசிலாந்து அரசு வருத்தம் தெரிவிக்க நேரிட்டது. மும்பையில், பாகிஸ்தான் தீவிரவாதிகளால் இந்தியர்கள் கொல்லப்பட்டதற்கு, பாகிஸ்தானோடு போர் தொடுப்போம் என்று, அன்றைய வெளி விவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி மிரட்டல் விடுத்தார். ஆனால், தாய்த்தமிழத்து மீனவர்கள், நமது கடலிலேயே இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவதும், சுட்டுக் கொல்லப்படுவதும் அன்றாடச் சம்பவங்கள் ஆகிவிட்டன.
அப்படியானால், தமிழர்கள் இந்தியக் குடிமக்களே இல்லையா? இந்திய நாடு என்ற அமைப்பின் எல்லைக்கு வெளியில் தமிழர்களை அந்நியப்படுத்த, இந்திய அரசே திட்டமிட்டு விட்டதா?
வேல் பாய்ந்த இருதயத்துக்கு உள்ளே சூட்டுக்கோலைத் திணிப்பது போல, தற்போது, ராஜபக்சேக்கு, காமன்வெல்த் போட்டிகளை முடித்து வைக்கின்ற மரியாதையை வழங்கி உள்ளது.
பிரதமர் மன்மோகன்சிங் அரசும், அதனை இயக்குகின்ற தலைமையும், அந்த அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகளும், இந்த இழிவான துரோகத்துக்குப் பொறுப்பாளிகள் ஆவார்கள். வினையை விதைத்துக் கொண்டே இருக்கிறார்கள்.
இந்தியாவின் முக்கிய இதிகாசமான மகாபாரதத்தில், சபா மண்டபத்தில், சகுனியை யோசனை கேட்டு, துரியோதனன் பஞ்ச பாண்டவர்களுக்கு, இழைத்த கொடுமைகளுக்கு எல்லாம், 13 ஆண்டுகள் கழித்து, குருசேத்திரக் களத்தில் விடை காணப்பட்டது. தமிழ் இனத்துக்கு, காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசு இழைக்கும் கொடுமைக்கு எல்லாம், உரிய பதிலைக் காலத்தின் தீர்ப்பு வழங்கும்.
‘தாயகம்’ வைகோ

சென்னை - 8 பொதுச் செயலாளர்,
12.10.2010 மறுமலர்ச்சி தி.மு.க.,

1 கருத்து:

  1. இந்தியாவின் இந்தச் செயல் முழு உலகத்தமிழினத்தையும் அவமதிக்கும் செயல். உணர்வுள்ள தமிழகத் தமிழர்கள் இதற்கு பதிலடி கொடுப்பார்களா? அட காநதியம் பேசிவந்த நாடு இன்று ஒரு கொலைகாரனின் பாதத்தில் சரணாகதியடைந்து விட்டதை ஜீரணிக்க முடியாதுள்ளது. தமிழனே இனியாவது இந்தியாவின் உண்மை முகத்தை காணுங்கள். வல்லரசு ஆசையில் கோவணமும் அவிழ்த்து விட்டு நடுச் சந்தியில் நிற்கின்றது கேடு கெட்ட இநதிய அரசு. - யாழ்

    பதிலளிநீக்கு