03 அக்டோபர் 2010

விடுதலைப் புலிகள் உறுப்பினர்களை மட்டும் எவ்வாறு அரச திட்டங்களில் சேர்ப்பது.

தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரியின் கிளிநொச்சியிலுள்ள வீட்டில் வைத்து நேற்றுக் காலையில் பல தமிழ் அரசியல் கட்சிகளும் கூடிக் கலந்துரையாடல் நடத்தியுள்ளன. இக்கலந்துரையாடலில் ஈ.பி.டி.பி இன் தலைவர் டக்ளஸ் தேவானந்தா, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் வரதராஜப்பெருமாள், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் பிரசாந்தன், தமிழ்த் தேசிய விடுதலை முன்னணியின் சிவாஜிலிங்கம் மற்றும் புளொட் அமைப்பின் உதயன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் வடக்குக் கிழக்கு மக்கள் படும் அவலங்கள் குறித்தே முதன்மையாகக் கலந்துரையாடப்பட்டுள்ளதாம். இறந்தவர்களின் இறப்புச் சான்றிதழ் மற்றும் போர்க் காலத்தில் பிறந்த குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ் ஆகியவற்றைப் பெறுவதிலுள்ள சிக்கல்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும் அரசாங்கத்தினதும் அரச சார்பற்ற நிறுவனங்களினதும் திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் மட்டுமே உள்ளடக்கப்படுகிறார்கள் என்ற விடயத்தையும் இக்கட்சிகள் கலந்துரையாடியுள்ளன. இந்த விடயத்தை எவ்வாறு அரசாங்கத்திடம் கொண்டுசென்று பேசுவது என்பது பற்றியும் இக்கட்சிகள் பேசியுள்ளன.
பத்துக் கட்சிகள் கூட்டணியானது தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கான ஒரு தீர்வை வரைந்து அதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆலோசனைக்கும் முன்வைக்கவுள்ளதாக சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். எனினும், இக்கட்சிகளுடன் சேர்ந்து செயற்படுவதற்கு இதுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணங்கவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக