தாய்லாந்தில், தாய்லாந்து இராணுவத்தினரும்,கனேடியன் இன்ரர்போல் பொலிஸாரும் இணைந்து நடத்திய சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கையின்போது 130 ற்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யபட்டவர்களிள் 60 ஆண்கள், 50 பெண்கள், 7 கர்ப்பிணித் தாய்மார்கள்,13 குழந்தைகளும் உள்ளனர்.
இவர்களுள் விசா இன்றி அங்கு தங்கியிருந்த தம்மை அகதிகளாக ஐக்கிய நாடுகள் அமைப்பில் பதிவு செய்திருந்த இலங்கை அகதிகளும், கப்பலில் கனடாவிற்கு செல்வற்காக வந்திருந்த அகதிகளும் கைதுசெய்யப்பட்டு தாய்லாந்து குடிவரவு திணைக்கள சிறப்பு முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இன்று காலை 06.30அளவில் தாய்லாந்தின் ஒன்சபோன், சபான்மை, பொம்சிங் மற்றும் சபான்மை பிக்சி சுற்றுவட்டாரப் பிரதேசங்களை திடீரென சுற்றிவளைத்த தாய்லாந்து குடிவரவு திணைக்கள அதிகாரிகள், தாய்லாந்து இராணுவத்தினர் மற்றும் கனேடிய இன்ரர்போல் பொலிஸார் இவர்களைக் கைதுசெய்து கொண்டு சென்றுள்ளனர்.
அத்துடன் சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கையினை கனேடியன் இன்ரர்போலும், தாய்லாந்து இராணுவத்தினரும் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் தாய்லாந்திலிருந்து கப்பலில் கனடாவுக்கு இலங்கையர்களை அனுப்பிவரும் நடவடிக்கையினை கட்டுப்படுத்தவே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இவர்களை அனுப்பிவைக்கும் பிரதான முகவர்கள், உதவி முகவர்கள், சந்தேகநபர்கள் தப்பியோடி விட்டதாகவும் தாய்லாந்து குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் தரப்பில் பேசப்படுகின்றது.
அத்துடன் இன்றுகாலை இடம்பெற்ற சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கையின்போது கைதுசெய்யப்பட்டு சிறப்பு முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டவேளை தாய்லாந்து குடிவரவு திணைக்கள அதிகாரிகளைத் தாக்கிவிட்டு 15 இலங்கையர்கள் தப்பியோடி விட்டதாகவும், இதனைத் தொடர்ந்து தாய்லாந்து இராணுவமும், கனேடியன் இன்ரர்போலும் தொடர்ந்து தேடுதல்களை நடத்தி வருவதாகவும் கூறப்படுகின்றது.
இந்த சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை மற்றும் கைது என்பவற்றின் பின்னணியின் இலங்கை தூதரகமும், கனேடியன் இன்டர்போலும் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் தாய்லாந்தில் தங்கியுள்ள தம்மை ஐக்கிய நாடுகள் அமைப்பில் அகதிகளாக பதிவு செய்துகொண்டுள்ள இலங்கை அகதிகள் பெரும் பதற்றத்துடன் உள்ளனர்.
அத்துடன் இவ்வாறான சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுமென்றும் அத்துடன் பிரதான முகவர்கள், உதவி முகவர்கள், சந்தேகநபர்கள் ஆகியோரின் பெயர் விபரம் மற்றும் புகைப்படங்கள் என்பன வெளியிடப்படுமென்றும் குடிவரவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக