வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து தடுப்பு முகாமிலிருந்து, பின்னர் யாழ்ப்பாணம் வந்து மீளக்குடியேறிய 26 வயதான சிவலிங்கம் சபேசன் என்பவரை இனந்தெரியாத நபர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 அளவில் சுட்டுக்கொன்றுள்ளனர். கொலைதாரிகள் மோட்டார் சைக்கிளில் வந்ததாகவும், இவர் நெல்லியடியில் யாழ்ப்பாணம்- பருத்தித்துறை வீதியில் வைத்துச் சுடப்பட்டதாகவும் எமது நிருபர் கூறுகிறார். இலங்கை ராணுவத்தினர் பாதுகாப்புக் கொடுக்கும் சிலிங்கோ காப்புறுதி நிறுவனம் மற்றும் வடமராட்சி தொலைத்தொடர்பு கட்டடம் ஆகியவற்றுக்கு அண்மையாகவே இந்த நபர் சுடப்பட்டுள்ளார். ஈழப் போர் 4 முடிவடைந்து ஒரு வருடம் ஆகும் நிலையில், துப்பாக்கிதாரிகளால் சுடப்பட்டு நடந்த முதலாவது கொலை இதுவாகும். இலங்கை பாதுகாப்புச் செயலாளர் யாழ் குடாநாட்டுக்கு விஜயம் செய்துள்ள 2, 3 நாட்களில் இவ்வாறான ஆயுததாரிகள் பிரசன்னமாகியிருப்பது அப்பகுதியில் பதற்றத்தை உண்டுபண்ணியுள்ளது. மேற்படி சபேசன், 2004 இன் யாழ்ப்பாணத்தில் இருந்தபோது அப்போதைய பொதுத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்காக பிரச்சாரங்கள் செய்திருந்தார். அதையடுத்து ராணுவத்தினர் தொந்தரவு கொடுத்ததால் அவர் வன்னிக்குச் சென்று, அங்கு போர் நடந்ததால் திரும்பி வந்து தும்பளையில் குடியேறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி:அதிர்வு இணையம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக