கெளரவ சபாநாயகர் அவர்களே மதிப்பிற்குரிய சக உறுப்பினர்களே என்னை தங்கள் பிரதிநிதியாக உங்கள் முன் அனுப்பி இருக்கும் எமது மக்களின் சார்பிலும் எனது சார்பிலும் எனது வணக்கத்தையும் வாழ்த்துக்களையும் முதலில் உங்களுக்குத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
இறந்துபோன உறவுகளின் எலும்புத்துண்டங்கள் என் பாதங்களை முத்தமிட அழிந்துபோன எம் தேசத்தின் சாம்பல் மேட்டிலிருந்து எனது மக்களின் நிரந்தர பூர்வீக வாழ்வியல் உரிமைக்கான அங்கீகாரம் மக்களின் அங்கீகாரத்தோடு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு தமது கெளரவமிக்க உயிரினும் மேலான உரிமைக்காக காலமெல்லாம் போராடி தவமிருக்கும் தமிழ்பேசும் மக்களிடமிருந்து வருகின்றேன்.
இரண்டாவது உலக யுத்தம் முடிவடையும் தறுவாயில் முற்றுமுழுதாக தோற்கடிக்கப்பட்டு சரணடையும் நிலையிலிருந்த போதிலும் அணுகுண்டு வீச்சுக்குட்படுத்தப்பட்டு இரு பெரும் நகரங்களையும் இரண்டு லட்சம் மக்களையும் இழந்து இன்றுவரை கதிர்வீச்சு தாக்கத்தில் இருந்து முழுமையாக விடுபடாத போதிலும் மீண்டுமொரு பொருளாதார வல்லரசாக இடிச்சு பெருப்பித்திருக்கும் இரசாயண தேசத்தின் அன்பளிப்பான இக்கட்டிடத்தொகுதியில் இருந்து என் கன்னி உரையை எதிர்காலம் பற்றிய உயர்வான நம்பிகையுடன் ஆரம்பிப்பதில் பெருமையடைகின்றேன்.
தோற்கடிக்கப்பட்டவர்கள் எல்லோரும் தோற்றுப்போனவர்கள் அல்லர், அழிக்கப்பட்டவர்கள் எல்லோரும் அழிந்துபோனவர்களும் அல்லர் என்பதற்கு உலக வரலாற்றில் ஏராளமான உதாரணங்கள் உண்டு.
துருக்கிய பேரரசாலும் ஏனைய ஐரோப்பிய நாடுகளாலும் காலத்திற்கு காலம் அழிக்கப்பட்டு வெறும் கற்குவியலாக்கப்பட்ட உரோமானிய தேசம். அந்தக் கற்களையே தம் மூலதனமாக்கி சீமெந்து உற்பத்தியில் பெரும் சாதனையீட்டி இன்று தலை நிமிர்ந்து நிற்கின்றது. அந்தக் கற்களில் எழுதப்பட்ட சோக காவியங்கள் இன்று வசந்த கீதங்களாக மாற்றப்பட்டுவிட்டன.
ஒரு தேசமோ ஒரு இனமோ இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டு பேரழிவுகளுக்கு முகங்கொடுக்கும்போது மீளெழுவதற்கு இன்னுமொரு பாதை உண்டு என்பதை ஜப்பானியர்களும் உரோமானியர்கள் இன்று முழு உலகத்திற்கும் நிரூபித்துவிட்டனர். நாம் பயங்கரவாதிகளாக பட்டம் சூட்டப்பட்டோம்.
உலக வல்லரசுகளும் பிராந்திய வல்லரசும் எமது இராணுவ பலத்தையும் எமது சந்ததியையும் அழிப்பதற்கு உரிய நியாயப்பாட்டை எம்மை பயங்கரவாத பட்டியலில் சேர்த்துக்கொண்டதன் மூலம் ஏற்படுத்திக்கொண்டன. விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் என்ற பெயரில் தமிழ்மக்களுக்கெதிராக ஒரு பெரும் யுத்தம் கட்டவிழ்த்து விடப்பட்டது.
பல்லாயிரம் தமிழ்மக்கள் கொல்லப்பட்டனர். இன்னும் பலர் ஆயிரமவர் ஊனமாக்கப்பட்டனர், காணாமல் போனோரின் தொகை இன்னமும் கணக்கிடப்படவில்லை, பலகோடி பெறுமதியான சொத்துக்கள் அழிக்கப்பட்டன. சூறையாடப்பட்டுள்ளன. எல்லாவற்றையும் இழந்து அகதிகளாக வெறுங்கைகளுடன் முட்கம்பி வேலிகளுக்குள் முடக்கப்பட்டோர் தொகை லட்சங்களாக உயர்ந்தது.
இப்பேரழிவின் பின்னால், இலங்கை அரசுக்கு உலக வல்லரசுகளும் பிராந்திய வல்லரசும் மறைமுகமாகவும் நேரடியாகவும் பெரும்பங்களிப்பை வழங்கின. இன்று இப்போரின் எம்மீது போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டதாகவும், மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாகவும் குற்றம் சுமத்தி சிங்கள தேசத்தின் கழுத்தை நெரிக்க, வல்லரசுகள் தங்கள் கரங்களை நீட்டுகின்றன. அதாவது எங்களை அழிக்க உங்களுக்கு தோள்கொடுத்தவர்கள் இன்று உங்களை அடிமைப்படுத்த எங்களைப் பாவிக்கின்றனர்.
மதிப்பிற்குரிய எங்கள் சகோதர்களே எங்களுக்கெதிராக உங்களையும் உங்களுக்கெதிராக எங்களையும் பாவித்து எங்கள் எல்லோரையும் அடிமைகொள்ள முயலும் இவர்களின் வழியில் நாம் தொடர்ந்து விழத்தான் வேண்டுமா?
நாம் ஒரு தேசத்தின் இரு தேசிய இனங்களாக அங்கீகரிக்கப்பட்டதுண்டு. நாங்கள் எங்களையும், எங்கள் தேசத்தையும் தற்காத்துக்கொள்ள வேண்டாமா? இரு இனங்களுக்குமிடையேயான புரிந்துணர்வும் நல்லடக்கமும் வேறு இப்போது அவசியம் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். நமது இராணுவ வலிமை அழிக்கப்பட்ட பின்பு, எமது உரிமைகளுக்கான போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பின்பு, எங்கள் பலவீனமான நிலைமையை மீறி மேலாதிக்கம் செலுத்துவதன் மூலம் ஒரு ஐக்கியத்தை உருவாக்கிவிட முடியும் என்ற ஒரு தவறான பார்வை உங்கள் மீது திணிக்கப்பட்டிருக்கலாம்.
இத்தகையதோர் பார்வையும் அதன் வேர்களில் இருந்து எழுந்த சிந்தனைப்போக்குமே நமது அறுபது வருட போராட்டத்திற்கும் முப்பது வருட ஆயுதப்போராட்டத்திற்கும் அடிப்படை என்ற உண்மையை நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டிய காலமிது. மீண்டும் குருதி சிந்தும் நாட்களை உருவாக்கும் காரணிகளை தயவுசெய்து உங்கள் எண்ணங்களிலிருந்து தூக்கி தூர வீசிவிடுங்கள். அடக்குபவர்களுக்கும் அடக்கப்படுபவர்களுக்கும் இடையே ஐக்கியம் நிலவியதாக வரலாறு இல்லை. நிம்மதி கிடைத்ததாக உதாரணங்கள் இல்லை. நாங்கள் நாங்களாகவும் நீங்கள் நீங்களாகவும் கரங்கோத்து நின்று எங்கள் தேசத்தைக் கட்டியெழுப்புவோம்.
எங்கள் கழுத்தை உங்கள் கரங்கள் நெரிக்கவேண்டாம். உங்கள் கரங்களை எங்கள் பற்கள் காயப்படுத்த வேண்டாம். உங்களுக்கென ஒரு பாரம்பரிய வாழ் நிலம், மொழி, பொருளாதாரம், தனித்துவமான கலாச்சாரம் உண்டு. எமக்கும் இவை அனைத்தும் உண்டு என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்.
அன்புக்குரியவர்களே இலங்கை மக்களாகிய நாங்களும் நீங்களும் பேரழிவுகளைச் சந்தித்த அதேவேளையில் அந்நிய ஆயுத வியாபாரிகளும் தரகர்களும் கோடிகோடியாக இலாபம் வைத்து எம்மைக் கொள்ளையடித்தார்கள். இதுமட்டுமா போரின்போதும் அதன்பின்பும் எமக்குப் பலவித நெருக்கடிகளைக் கொடுத்து எமது மூலவளங்களையும் மனித உழைப்பையும் கொள்ளையிடுகின்றார்கள்.
புல்மோட்டையில் இல்மனைட் வளமும் கொள்ளையடிக்கப்படுகின்றது. வடக்கின் சுண்ணக்கல் வளமும் எண்ணெய் வளமும் இந்தியாவால் அபகரிக்கப்பட திட்டம் தீட்டப்பட்டுவிட்டன. இன்னொருபுறம் எண்ணெய் வளத்தைக் கொள்ளையிட ரஷ்யா ஒப்பந்தம் எழுதிவிட்டது. சேது சமுத்திர திட்ட மூலம் எமது கடல்வாழ் உயிரினங்களின் வளம் அழிக்கப்படுகின்றது. அமெரிக்காவின் கரங்களுக்கு போய்விட்டது. சுதந்திர வர்த்தக வலயம் அந்நிய முதலீடுகளைக் கவர்தல் என்ற பெயரில் எமது மக்களின் மனித உழைப்பு மலிவான விலையில் கொள்ளையிடப்படுகின்றது.
இலங்கை "பெண்களின் சொர்க்கம்" என்ற விளம்பரம் செய்யப்படும் அளவிற்கு உல்லாசப் பயணத்துறை என்ற பெயரில் கலாச்சார பாரம்பரியமூட்டல்களால் பெண்கள் கேவலப்படுத்தப்படுகின்றனர். பதினான்காயிரத்திற்கு மேற்பட்ட சிறுவர் சிறுமியர் வெளிநாட்டவரின் பாலிய வக்கிரத்திற்கு பலியாகி எதிர்காலத்தை இழக்கின்றார்கள்.
ஆம், எங்கள் மூலவளங்களும் மனித உழைப்பும் கொள்ளையிடப்பட்டு எமது தேசம் ஒட்டாண்டி நிலைக்கு தள்ளப்படுகின்றது. இப்பேராபத்தில் இருந்து எம்மை நாம் மீட்க நாம் உரிமை கொண்டு ஐக்கியப்பட்டு எழுச்சிபெற வேண்டும். இந்நாட்டில் பெரும்பான்மை சிறுபான்மை என எதுவுமில்லை என்பது வெறும் வெற்றுக்கோசமாக இருந்துவிடக்கூடாது. இனியும் அடக்குபவர்களோ அடக்கபடுபவர்களோ இல்லை என மிளிருபடவேண்டும் என்பதே நமது அவாவாகும்.
நிற்க, இப்படியான ஒரு புறச்சூழலில் இப்போரின் கொடுமைகளையும் அதன் பின்னரான காலத்தில் கொடுமைகளையும் அனுபவித்துக்கொண்டிருக்கும் கிளிநொச்சி முல்லத்தீவு மாவட்ட மக்களின் இடர்களை கவனித்து களைவதில் முக்கிய பணி எனக்கு அதிகமாக உள்ளதாகவே நான் உணர்கின்றேன். நாம் போருக்கு நேரடியாகவே முகங்கொடுத்தவர்கள். இந்த போர் எங்கள் மீது விமானங்கள் குண்டுகளை வீசியது, எறிகணைகள் எங்கள் உடல்களை துளைத்தன. துப்பாக்கி வேட்டுக்கள் எங்களை துளை போட்டன. மரணம் எங்களை விரட்ட விரட்ட இடம்பெயர்ந்து இடம்பெயர்ந்து ஓடினோம், போகுமிடம் தெரியாமலேயே வெட்டவெளிகளில் வீதியோரங்களிலும் கூடார வாழ்க்கையை ஏற்றோம். மீண்டும் மீண்டும் போர் எங்களை துரத்திய போதும் ஓடினோம். இருப்பினும் மரணங்களைத் தவிர்க்க முடியவில்லை. உடலுறுப்புக்கள் இழப்பதை தவிர்க்க முடியவில்லை. இறந்த உடல்களை எடுத்து புதைக்கவும் வழியின்றி ஓடினோம். உணவில்லை குடிக்க நீரில்லை இயற்கை கடன்களை கழிக்க இடமில்லை, அடுத்த நிமிட உயிர்வாழ்வு பற்றிய நம்பிக்கைக்கு இடமில்லை, முள்ளிவாய்க்காலுக்குள் மூன்றரை லட்சத்திற்கு மேற்பட்டோர் முடக்கப்பட்டோம்.
உலகின் நற்பண்புகளுக்கும் மனிதாபிமானமாக காட்டப்பட்ட நடவடிக்கைகள் எங்களை மரணக்குழிகளுக்குள் தள்ளின. இறந்தவர் போக எஞ்சியோர் நந்திக்கடல் தாண்டினோம். வவுனியாவில் அகதிமுகாமுக்குள் எங்கள் வாழ்வு முடக்கப்பட்டது. உணவுக்களஞ்சியமான வன்னிமண்ணில் உற்பத்தியைப் பெருக்கி மற்றவருக்கு உண்டி கொடுத்த நாம் ஒருபிடி சோற்றுக்கு கையேந்தி வரிசையில் நின்றோம். இன்று எம்மில் ஒரு பகுதியினர், ஆறு தகரங்களுடனும் ஆறுமாத நிவாரண பொருட்களுடனும் மீள்குடியேற்றம் செய்யப்பட்டோம். ஏனையோர் இன்னும் முகாம்களில். போர் முடிந்து ஓர் வருடம் ஓடிப்போய்விட்டது. எம் துயரங்கள் முடிய இன்னும் எத்தனை வருடங்கள் போகும் என்பது எமக்குள்ள கேள்வி. போராளிகள் என்ற பெயரில் இன்னமும் பல ஆயிரமவர் தடுப்புமுகாம் அவலங்களுக்குள் தவிக்கின்றனர். பெற்றோர்கள் தம் பிள்ளைகளைப் பார்த்துவிட மணிக்கணக்காக மழையிலும் வெயிலிலும் காத்துநிற்கின்றனர். இன்னும் எத்தனையோ பெண்களும் பிள்ளைகளும் எங்கையென்று அறியமுடியாது உறவினர் அலைந்து திரிகின்றனர் . ஒவ்வொரு நாளும் காயப்பட்டு சிகிச்சைக்காக உலங்குவானூர்தியில் ஏற்றப்பட்ட எத்தனையோ பேரை தேடி விளம்பரங்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.
இச்சபையில் பெருமைக்குரிய உறுப்பினர்களே ஒரு ஜனநாயக தேசத்தில் இதுதான் எங்கள் வாழ்வு. இதிலிருந்து நாம் மீளெழ வேண்டும். அந்நிய தேசங்கள் நமது நாட்டின் மூலவளங்களையும் மனித வளங்களையும் கொள்ளையடிப்பதுடன் எமது இறைமையை நிறைவேற்றுவதுடன் பாதுகாக்கவும் நாம் உங்களுடன் ஒன்றிணைய காத்திருக்கின்றோம். ஆனால் நாம் மனிதர்களாக வாழும்போது மட்டும்தான் அது சாத்தியப்படும் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். நாம் எல்லோரும் இந்நாட்டு மக்களென மாண்புமிகு ஜனாதிபதி அவர்களின் வார்த்தைகளை நேசிக்க முயலுங்கள். உரிமை பறிக்கப்பட்டவர்களும் உரிமை பறிப்பவர்களும் ஒரே சகோதரர்களாக எப்படி வாழமுடியும்? எங்கள் சகோதர்களே மக்கள் சார்பில் மீண்டும் நான் உங்களைக் கேட்பது, மீண்டும் எங்கள் வாழ்வை ஆரம்பிக்க எமக்கு வழிவிடுங்கள். உருளும் உலகப்பந்தின் இந்த அழகிய மாங்கனித் தீவிலே கிறிஸ்துவுக்கு முற்பட்ட கால வரலாற்று சிந்தனையை கைவிட்டு, இருபத்தோராம் நூற்றாண்டுக்குரிய நவீன சிந்த்னையின்படி இனப்பிரச்சினையை அணுகவேண்டும். சிங்கள மக்களும் தமிழ்பேசும் மக்களும் இலங்கைத் தீவின் இணை உரிமையாளர்களும் இணைப் பங்காளர்களும் என்ற மனபாங்குடன் ஒரு புதிய அரசியலை அணுக அரசாங்கம் தயாராக வேண்டும்.
தற்போது சிங்கள மக்களிடம் தமிழரை வெற்றிகொண்ட மனப்பாங்கும், தமிழரிடம் வேதனையும் வெறுப்பும் நிறைந்த நிலையும் காணப்படுகின்றது. ஒரே நாடு ஒரே மக்கள் என்று சொல்லிக்கொண்டே பூநகரி வெற்றி விழாவையும், கிளிநொச்சி வெற்றி விழாவையும், முள்ளிவாய்க்கால் வெற்றி விழாவையும் கொண்டாடிய தினமும், இனிவரும் நாட்களில் மே மாதம் 12ம் திகதி முதல் 18ம் திகதிவரை கொண்டாடப்படவுள்ள இராணுவ வெற்றிவிழாவும், தமிழர்களின் மனங்களை எப்படி உடைத்து சிதறிடிக்கப்போகின்றது என்பதை சிந்தியுங்கள். இராணுவத்தால் தீவு நிரம்பி வழிந்து ஒன்றுபட்டது போல் காணப்பட்டாலும், மனத்தால் தீவு இரண்டுபட்டே இருக்கின்றது. புத்தபகவான் பரிநிர்வாணம் அடைவதற்காக தவமிருந்தார் என்ற மகிமை சிங்கள மக்களுக்கு தெரியும்.
சுதந்திர இலங்கையில் இதுவரை இரண்டரை லட்சத்திற்கும் மேலான உயிர்களை இழந்து தமிழ்மக்கள் தமது உரிமைக்காக தவமிருக்கின்றார்கள் என்ற உண்மையை சிங்கள சகோதரர்களும் இந்த உலகமும் புரியும் நாள் வந்திருக்கின்றது. தன் சொந்த சகோதர இனத்துடன் அதிகாரங்களைப் பங்கிட்டுக் கொள்ள தயாரில்லாமல், அந்நிய நாடுகளிடம் கையேந்தி தனது சொந்த தமிழ் மக்களுக்கெதிரான அரசியலை வலைவீசி வரும் அரசாங்கங்கள் நடத்தியதன் விளைவாய் இலங்கைத் தீவை அந்நிய அரசுகளின் காலடிக்குள் சிக்குண்டிருப்பதையும் ஆட்சியாளர்கள் உணர இன்னும் எவ்வளவு காலம் எடுக்குமோ தெரியாது.
ஒரு இனத்தை எந்த இனம் ஒடுக்குகின்றதோ அந்த இனமும் அமைதியாக இருக்க முடியாது அந்த நாடும் சுபீட்சம் அடைய முடியாது. அத்துடன் எம் ஓரினத்தை ஒடுக்க எடுத்த நடிவடிக்கைகளின் விளைவால் அந்நிய தேசங்களிடம் அடிமைப்பட்டு போகவும் நேரும். சுதந்திரமும் சுபீட்சமும் நிறைந்த இலங்கையை கட்டியெழுப்ப வேண்டுமென்றால், அது ஏனைய இனங்களின் தனித்துவ உரிமைகளை அங்கீகரிப்பதிலும் அவர்களுடன் அதிகாரங்களை பங்கிட்டுக்கொள்வதிலுமே அதனை ஆரம்பிக்க வேண்டும். அதற்கான துணிச்சலையும், தூரப்பார்வையையும், இன்றைய அரசாங்கம் முன்னெடுக்குமா என்பதே இன்றைய கேள்வியாகும்.
முதிர்ந்த அரசியல் அனுபவமிக்க சம்பந்தர் ஐயா தலைமையில் இதற்கான வாய்ப்பை அளிக்க எமது கட்சி தயாராக உள்ளது. இத்தகைய அரிய வரலாற்று வாய்ப்பை பயன்படுத்தி தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய நல்ல தீர்வை ஏற்படுத்தி, புதிய இலங்கையை கட்டியெழுப்ப அரசாங்கம் தயாராக வேண்டும். இதனை தவறவிட்டால், வரலாறு தான் விரும்பும் இன்னொரு திசைக்கு தீர்வை இட்டுச் செல்லும் என்பது திண்ணம்.
சுனாமியாலும் யுத்தத்தாலும் அழிந்து சின்னாபின்னப்பட்டிருக்கும் தமிழ்பேசும் மக்களின் மனங்களைப் புரிந்து அவர்களின் துன்பங்களைப் பகிர்ந்து அவர்களின் தனித்துவமான உரிமைகளை புரிந்து அதற்கேற்ப நியாய பூர்வமானதும் நீதியானதுமான தீர்வை காணவேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு. நாம் இரு சுதந்திரமான தேசிய இனங்களாக ஒரு நாட்டின் மக்களாக ஒன்றினைந்து நம் தேசத்தைக் கட்டியெழுப்புவோம் என்ற பிரகடனத்தை மனமுவந்து நாம் அனைவரும் நினைப்போம் என்று கூறி என் கன்னி உரையை நிறைவு செய்கின்றேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக