20 செப்டம்பர் 2010

16 பஸ்களில் போராளிகளை முள்ளிவாய்க்காலில் வைத்து ஏற்றி சென்றனர்.

வன்னியில் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் சரணடைந்த மற்றும் பிடிபட்ட போராளிகளையும் ஏற்றி 16 பஸ்களில் கொண்டு சென் றார்கள். இன்றுவரை அவர்களின் கதி என்ன வென்று தெரியாது. இவ்வாறு முன்னாள் போராளி ஒருவரின் தாயார் நல்லிணக்க ஆணைக்குழுமுன் நேற்று சாட்சியம் அளிக்கும் போது தெரிவித்தார்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு கண்டாவளை பிரதேச செயலகத்தில் நேற்று நடத்திய அமர்வில் சாட்சியம் அளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
போராளிகளை விடுவிக்க பணம் கேட்ட இராணுவம்
விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து முதலில் சரணடைந்த போராளி ஒருவரே எமது பிள்ளைகளைக் காட்டிக்கொடுத்தார். எமது பிள்ளைகள் வலுக்கட்டாயமாகவே விடுதலைப்புலிகளினால் அழைத்துச்செல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து தப்பிவந்து இறுதி யுத்தத்தின்போது இராணுவப் பகுதிகளை நோக்கிச்சென்றபோது இராணுவத் தரப்புடன் நின்றிருந்த குறித்த போராளி எமது பிள்ளைகளை இராணுவத்துக்குக் காட்டிக்கொடுத்தார். இராணுவம் எமது பிள்ளைகளைப் பிடிக்கும் போது பணம் தந்தால் விட்டுவிடுவதாகக் கூறினார்கள். நாங்கள் இரண்டு லட்சம் ரூபாவைக் கட்டினோம். தாங்கள் எமது பிள்ளைகளை விசாரணையின் பின் மூன்று நாள்களில் விடுவதாகக் கூறி அழைத்துச் சென்றார்கள்.
இவ்வாறு அழைத்துச்செல்லப்பட்டவர்களும் சரணடைந்தவர்களும் ஒரு கூடாரம் போன்ற அறையில் வைக்கப்பட்டிருந்தார்கள். அதனுள் சென்று பார்க்க எமக்கு அனுமதி தரப்படவில்லை. சரணடைபவர்களை மூன்று நாள்களில் விடுவிப்பதாக படையினர் அறிவித்ததை அடுத்து ஜோசப் பிரான்லின், ரெஜினோல்ட் ஆகிய பங்குத்தந்தையர் அவர்களிடம் பெற்ற உத்தரவாதத்தின் அடிப்படையில் போராளிகள் பலரும் கையளிக்கப்பட்டார்கள்.
அவ்வாறு கையளிக்கப்பட்டவர்கள் 16 பஸ்களில் ஏற்றிச் செல்லப்பட்டனர். இதுவரை அவர்களுடன் எந்தத் தொடர்பும் இல்லை. உயிருடன் இருக்கிறார்களா? இல்லையா? என்றுகூடத் தெரியாத நிலைமையில் நாங்கள் இருக்கிறோம்.
எமது சொத்துக்கள் யுத்தத்தில் அழிவடைந்தாலும் பரவாயில்லை. பிள்ளைகளை எம்மிடம் ஒப்படையுங்கள் அவர்களுடன் மரநிழலின் கீழாவது சந்தோசமாக வாழ்வோம் அவர்களை எவ்வளவு கஸ்டத்தின் மத்தியில் வளர்த்தோம் என்பது எமக்குத்தான் தெரியும். இந்த வயதிலும் (வயது 53) நாம் உழைத்துக் கஷ்டப்படுகிறோம். எமது பிள்ளைகள் இருந்திருந்தால் இந்த நிலைமை எமக்குத் தோன்றியிராது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக