19 செப்டம்பர் 2010

சிறையிலுள்ள தமிழ் இளைஞர்களின் அந்தரங்க உறுப்புகளை நசித்துச் சித்திரவதை!


பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினர் சிறையிலுள்ள நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்களைத் தொடர்ந்தும் சித்திரவதை செய்து வருவதாக தனது பெயரை வெளிவிட விரும்பாத ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்தார். பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைதான இளைஞர்களைச் சந்தித்தபோதே தமக்கு இவை தெரியவந்ததாக அவர் கூறினார். வேலைவாய்ப்பின் நிமித்தம் கொழும்பிலும் அதன் புறநகரிலும் தங்கியிருந்த தமிழ் இளைஞர்கள் தவிர வடக்குக் கிழக்கில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் கைதான இளைஞர்களும்கூட கொழும்பு பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவின் தலைமையகத்திலும் பூசா முகாமிலும் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா, வெலிகந்தை ஆகிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் புலிகளை மேலதிக விசாரணைகள் என்ற பெயரில் கொழும்புக்குக் கொண்டுவந்து அங்கு பல சித்திரவதைகளைச் செய்துவருகிறார்கள் போலீசார். மேலும், தாம் தயாரித்துள்ள அறிக்கைகளில் மேற்படி இளைஞர்கள் கையெழுத்துப் போட மறுத்தால் அவர்களது வாழ்நாள் முழுவதையும் அச்சிறைகளிலேயே கழிக்க வேண்டிவரும் என்றும் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினர் அச்சுறுத்தி வருகின்றனர்.
இரும்புக்கம்பிகள், கிரிக்கெட் மட்டைகள், குண்டாந்தடிகள் ஆகியவற்றால் இவ்விளைஞர்களைத் தாக்கிவரும் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினர் அவ்விளைஞர்களின் அந்தரங்க உறுப்புகளையும் நசித்துச் சித்திரவதை செய்கின்றனர். அதோடு தாம் சித்திரவதை செய்து கொலைசெய்த இளைஞர்களை வீடியோ எடுத்து அவற்றை அங்குள்ள இளைஞர்களுக்குக் காண்பித்தும் அச்சுறுத்தி வருவதாக மேற்படி ஊடகவியலாளர் கூறியுள்ளமை எங்கள் உடலையே அச்சத்தில் உறைய வைக்கிறது.
இவ்விளைஞர்களைப் பார்வையிட வருகின்ற உறவினர்களும் வெளியில் சொல்ல முடியாத பல துன்பங்களுக்கு ஆளாகியுள்ளனர். இவர்கள் தமது பிள்ளைகள், சகோதரர்களுடன் பேசுவதற்கு 10 நிமிடங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. வெளியிலிருந்து வரும் உணவுகளைத் தடுப்புக் காவலில் உள்ளவர்களுக்கு கொடுக்க அனுமதிக்காத சிறை அதிகாரிகள், தம்மால் நடத்தப்படும் உணவகத்தில் மட்டுமே உணவை வாங்கும்படியும் கட்டாயப்படுத்துகின்றனர்.
மேலும், தமது உறவுகளைப் பார்க்கவரும் உறவுகளிடமிருந்து பணம் கறந்துவருவதாக முஸ்லிம் அதிகாரியான அப்தீன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள வேளை, மொகமட் எனப்படும் முஸ்லிம் அதிகாரி இனத்துவேசமாக அங்குள்ள தமிழ் இளைஞர்களைச் சித்திரவதை செய்வதாகவும் கூறப்படுகிறது.
தடுப்புக் காவலில் உள்ள இளைஞர்களுக்கு போதிய மருத்துவ வசதி, சுகாதார வசதிகளும் மறுக்கப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு மூன்று கழிப்பறைகள் மட்டுமே அங்குள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. அதிக தண்ணீர் செலவழிப்பவர்களுக்கும் சித்திரவதை நடப்பதாக ஊடகவியலாளர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக