04 செப்டம்பர் 2010

கொழும்பு சர்வதேச எழுத்தாளர் மாநாட்டைப் புறக்கணிப்போம்.



2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5,6,7,8 ஆம் திகதிகளில் கொழும்பில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நடத்துவதற்கு இலங்கை அரசு தீர்மானித்துள்ளது. கடந்த ஜனவரி 3 ஆம் திகதி கொழும்பில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கெடுத்த சிலரும், புலம்பெயர் தமிழ் எழுத்தாளர்கள் சிலரும் சேர்ந்தே இதைத் தீர்மானித்ததாகக் கூறப்படுகிறது. இந்திய அரசின் கூட்டுச் சதியுடன் கடந்த ஆண்டு இலங்கையில் தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கை அரசு இப்போது தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நடத்துவதற்கு தயாராகிறது.
கடந்த ஆண்டு நடந்த போரில் இலங்கைப் படைகள் புரிந்த போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்காக சர்வதேச சமூகம் பல முனைகளிலும் இருந்து தங்கள் கண்டனத்தை வெளிப்படுத்திய வண்ணம் உள்ளன. இதன் காரணமாக ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசுக்கு எதிராக பொருளாதாரத் தடை விதித்துள்ளது. ஐ.நா செயலாளரும் ஐ.நா அங்கத்துவ நாடுகள் பலவும் இலங்கை ஜனாதிபதி மஹிந்தவை போர்க் குற்றவாளியாக சர்வதேச நீதிமன்றில் நிறுத்தி விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து வருகின்றன.
இந்த அழுத்தங்களைக் குறைக்கவென இந்த ஆண்டு ஜூன் மாதம் 3,4,5 ஆம் திகதிகளில் இந்தியத் திரைப்பட விழாவை கொழும்பில் நடத்தியது இலங்கை. ஆனால் தமிழினத்துக்கு எதிராக இலங்கை புரிந்த கொடுமைகளுக்காக தமிழ்த் திரையுலகம் அவ்விழாவைப் புறக்கணித்ததோடு, இந்தியாவின் பிற மொழிக் கலைஞர்களும் தமிழர்களுக்காக அவ்விழாவைப் புறக்கணித்தனர். எனவே விழா தோல்வியடைந்ததால் தாம் தமிழர்களுக்கு விரோதியல்ல எனக் காண்பிக்க முனைந்த இலங்கையின் சூழ்ச்சியும் வாய்க்கவில்லை.
இதையடுத்து தற்போது சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டைக் கொழும்பில் நடத்தி தன் கைகளில் உறைந்துள்ள ஒரு இலட்சம் தமிழரின் இரத்தக் கறையை மறைக்க இலங்கை அரசு முயற்சிக்கிறது. எழுத்தாளர்களின் முகங்களின் பின்னால் தனது கோர முகத்தை மறைக்க இலங்கை முனைகிறது.
எனவே என்ன நோக்கத்துக்காக இந்த மாநாடு நடக்கிறது என்பதை தமிழ்ப் படைப்பாளிகள், உணர்வாளர்கள், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும். ஈழத் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட கொடும் தாக்குதல்களையும் அதன் உச்சமாக முள்ளிவாய்க்காலில் நடந்த கொடூரப் படுகொலைகளையும் வார்த்தைகளால் விபரிக்க முடியாத விதமாக இலங்கை அரசு அரங்கேற்ற்றியது.
எனவே தனது கோர முகத்தை சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் மூலம் ஜனநாயக, தமிழ்ப் பாச, தமிழ் நேச அரிதாரம் பூசிக்காட்ட இலங்கை முயல்கிறது. இந்நிலையில் உலகெங்கிலும் உள்ள தமிழ் எழுத்தாளர்கள், படைப்பாளர்கள், பத்திரிகையாளர்கள் அனைவரும் இலங்கையின் முயற்சிக்குத் துணை செல்லாமல் அந்த மாநாட்டை முற்றுமுழுதாகப் புறக்கணிக்க வேண்டும் என்று தமிழினத் துரோக கொழும்பு-சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டுக்கு எதிரான தமிழ்ப் படைப்பாளிகள், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை, இம்மாநாட்டில் தமிழ் எழுத்தாளர்கள் எவரும் பங்கெடுத்துக் கொள்ளக்கூடாது என்று ஒபாமாவுக்கான நியூயோர்க் தமிழர்கள் அமைப்பும் வலியுறுத்தியுள்ளது. உலகின் கவனத்தைத் திசை திருப்பும் நோக்கத்துடன் இலங்கை அரசு மேற்கொள்ளும் ஒரு நடவடிக்கையாகவே தமிழ் எழுத்தாளர் மாநாடும் அமைவதாகவும் இவ்வமைப்புச் சுட்டிக்காட்டியுள்ளதோடு அனைத்து தமிழ் எழுத்தாளர்கள், வாசகர்கள் மற்றும் விமர்சகர்கள் இம்மாநாட்டைப் புறக்கணிக்க் வேண்டும் என்றும் கேட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக