29 செப்டம்பர் 2010

சாதாரண கைதிகள்போல் புலிகளை நடத்த முடியாதென்கிறது சிங்களம்.

விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை சாதாரண கைதிகள் போல நடத்த முடியாது என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன் யாப்ப அபயவர்த்தன பி.பி.சி க்குத் தெரிவித்துள்ளார். அவர்களை சாதாரண சட்டத்தின் கீழுள்ள குற்றவாளிகள் போல நடத்தமுடியாது என்பதை எந்தவொரு நாடுமே ஏற்றுக்கொள்ளும் என்றும் அவர் கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தில் ஏராளமான இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை சர்வதேச சட்டத்துக்கு முரணானது என்று இந்தவார ஆரம்பத்தில் சர்வதேச நீதியாளர்கள் சபை தெரிவித்திருந்தது. இலங்கை மனித உரிமை நிலவரத்தை மேம்படுத்தும்படி இலங்கையை வலியுறுத்த வேண்டும் என்று நிதிவழங்கும் நாடுகளையும் ஐக்கிய நாடுகள் சபையையும் இச்சபை வலியுறுத்தியுள்ள நிலையில் யாப்ப இவ்வாறான கருத்தை வெளியிட்டுள்ளார்.
தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விடுதலைப் புலிகள் பற்றிய முக்கிய தகவல்களைத் தந்துகொண்டிருப்பதாகக் கூறியுள்ள யாப்ப, தமது நாடு ஒரு சுதந்திர நாடு என்றும் வெளிநாட்டுச் சக்திகளுக்கு தாங்கள் அடிபணியப் போவதில்லை என்றும் மேலும் கூறியுள்ளார்.
யாப்பவின் இக்கருத்தை எதிர்க்கட்சியான ஐ.தே.க இன் பிரதித் தலைவர் கரு ஜெயசூரியவும் ஏற்றுக்கொள்வதாக பி.பி.சி இடம் கூறியுள்ளார். இறைமையுள்ள ஒரு நாட்டின்மீது சர்வதேச அமைப்புகள் தமது நிபந்தனைகளைத் திணிக்கக் கூடாது என்று அவர் சொன்னார். இதேவேளை, கே.பி, கருணா, பிள்ளையான் போன்றவர்களை ஒருவிதமாகவும் தடுப்புக் காவலிலுள்ளவர்களை ஒருவிதமாகவும் அரசு நடத்துவதைத் தம்மால் ஏற்க முடியாது என்றும் அனைவரையும் ஒரே போல நடத்த வேண்டும் என்றும் கரு ஜெயசூரிய கூறியதாக பி.பி.பி செய்தி தெரிவிக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக