மூன்று வயதான தனது மகனைக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணையைச் சந்தித்த தந்தை ஒருவருக்கு நேற்று யாழ். மேல் நீதிமன்றத்தால் மரண தண்டனை வழங்கப்பட்டது. இத்தீர்ப்பைக் கேட்டதும் அவர் நீதிமன்ற இரண்டாம் மாடிக் கட்டடத் தொகுதியில் இருந்து கீழே குதித்துப் படுகாயமடைந்தார். தற்போது யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இச்சம்பவத்தால் நேற்று யாழ். நீதிமன்ற வளாகம் பெரும் பரபரப்பாகக் காணப்பட்டது.
மேற்படி கொலைச் சம்பவம் 2003 ஆம் ஆண்டு பருத்தித்துறை வல்லிபுரக் கோயிலடிப் பகுதியில் நடந்தது. இராஜராஜன் இராஜகுமார் (37) எனப்படும் குறித்த நபர் தனது மூன்று வயது மகனின் இரண்டு காலிலும் பிடித்து நிலத்தில் அடித்துப் படுகொலை செய்தார் என்றும் தனது மனைவியின் கையை வெட்டித் துண்டாக்கினார் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டு இவருக்கெதிராக வழக்குத்தாக்குதல் செய்யப்பட்டது.
சட்டமா அதிபரினால் சமர்ப்பிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களின் பேரில் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி எஸ்.பரமராஜா முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. விசாரணை முடிவில் இவருக்கு மகனைக் கொன்ற குற்றச்சாட்டுக்குத் தூக்குத் தண்டனையும் மனைவியின் கையை வெட்டித் துண்டாடிய குற்றத்துக்கு 25,000 ரூபா தண்டப் பணமும் அறவிடப்பட்டது. தண்டப்பணம் செலுத்தத் தவறும் பட்சத்தில் இரண்டுவருட சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று கூறி மேல்நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக