18 செப்டம்பர் 2010

கிளிநொச்சியில் பி.பி.சி யினருக்குத் தடை!

கடந்த ஆண்டு நிறைவடைந்த போரின்போதான போர்க்குற்ற விசாரணைகளை முன்னெடுப்பதற்காக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமைத்துள்ள நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணை இன்று கிளிநொச்சியில் நடைபெறுகின்றது. மூன்று நாட்கள் நடக்கவுள்ள இவ்விசாரணையில், பொதுமக்கள் தமது சாட்சியங்களை அளிக்கவுள்ளனர். இனியும் ஒரு போராட்டம் வெடிப்பதைத் தடுக்கும் விதமாக இவ்வாணைக்குழு பாடுபட்டு வருவதாக அரசு கூறிவருகிறது.
ஆனால் இன்று கிளிநொச்சியில் ஆரம்பமாகும் இவ்விசாரணையில் பொதுமக்கள் எவ்வாறான சாட்சியங்களை அளிக்கிறார்கள் என்பது குறித்துச் செய்திகளை சேகரிப்பதற்கு பி.பி.சி செய்திசேவையை அனுமதிக்க முடியாது என்று சிரேஷ்ட பாதுகாப்பு அமைச்சு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இன்றுமுதல் நடக்கும் இவ்விசாரணைகளில், போரினால் நேரடியாகப் பாதிப்புகளுக்கு உள்ளான பொதுமக்கள் சாட்சியங்களை அளிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வில் செய்தி சேகரிக்க பாதுகாப்பு அமைச்சு தடையை விதித்துள்ளது.
இவ்வாணைக்குழு முல்லைத்தீவுக்குச் செல்லவுள்ளதோடு, இறுதிக்கட்ட போர் நடந்த முள்ளிவாய்க்கால் பகுதிக்கும் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்விசாரணைகளில் பெரும்பாலானவை வெளிப்படையாகவே நடக்கவுள்ளதாகவும் கூறப்ப்படுகிறது. ஆனால் எதற்காக பி.பி.சி க்கு அனுமதி மறுக்கப்பட்டது என்பதை இராணுவ தொடர்பாடல் அதிகாரி தெரிவிக்கவில்லை.
வெளிப்படையான விசாரணைகளை நடத்தவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழுவுக்கு எதிர்ப்பைத் தெரிவித்தே இவ்வாணைக்குழுவை மஹிந்த நியமித்திருந்தார். ஆனால் இதில் ஊடகவியலாளர்கள் பங்குபற்றக்கூடாது என்றால் இவ்விசாரணையின் உண்மைத்தன்மை எவ்வாறு இருக்கும் என்பதை நாம் ஊகித்து விளங்கிக்கொள்ள முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக