12 செப்டம்பர் 2010

கூட்டமைப்பு அரசில் சேர்ந்தால் தமிழர்களுக்கு நன்மை! கருணா.


தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசுடன் இணையும் பட்சத்தில் தமிழ் மக்கள் நன்மை அடைவார்கள் என்று மீள்குடியேற்றத்துறைப் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். அவர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கி இருக்கும் பேட்டி ஒன்றிலேயே இவ்வாறு கூறி உள்ளார். அவர் அப்பேட்டியில் இது சம்பந்தமாக முக்கியமாக தெரிவித்துள்ளவை வருமாறு:
”தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரயோசனம் அற்ற ஒன்று என்று நான் ஒருபோதும் கூற மாட்டேன்.ஆயினும் தமிழ் மக்களின் தேவைகளை உணர்ந்து அக்கட்சி அதன் கொள்கையிலும்,நிலைப்பாட்டிலும் சில மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.அப்போதுதான் தமிழ் மக்களின் நம்பிக்கையை கூட்டமைப்பு வென்றெடுக்க முடியும். உதாரணமாக தமிழ் மக்கள் பட்டினி கிடக்கின்றார்கள்.
இந்நேரத்தில் கொள்கைகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்க முடியாது.மக்கள் பலவீனம் அடைந்து விடுவார்கள்.அரசின் ஆதரவைப் பெற்று இம்மக்களின் வாழ்வாதாரத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும். மக்கள் மரத்துக்குக் கீழ் வசிக்கின்றபோது கொள்கைகளைப் பற்றிப் பேசுவது பொருத்தம் அற்றது.தமிழ் மக்கள் கடந்த 30 வருட யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள்.
எனவே அம்மக்களின் எதிர்காலத்தைச் சிந்தித்துக் கூட்டமைப்புச் செயற்பட வேண்டும்.காலத்தை அனுசரித்து நடக்க வேண்டும். அதுதான் உலக நியதி. அரசு தற்போது மிகவும் பலம் பொருந்திய நிலையில் உள்ளது.எனவே கூட்டமைப்பு அரசுடன் இணைந்தால் தமிழ் மக்கள் நன்மை அடைவார்கள்.கூட்டமைப்பு அதன் கொள்கைகளை விட்டுக் கொடுக்காமலேயே அரசுடன் இணைந்து செயற்பட முடியும்.
கூட்டமைப்பு அதன் கொள்கைகளைக் கைவிட்டு விட வேண்டும் என்று நான் கூறவில்லை.கூட்டமைப்பு உட்கட்சிப் பிளவுகளுக்கு உட்பட்டு விடக் கூடாது. கூட்டமைப்பின் எம்.பி ஒருவர் அரசுக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளார். கட்சியின் போக்கில் சில மாற்றங்கள் தேவைப்படுகின்றன.
அரசை எதிர்ப்பதால் எதையும் சாதித்து விட முடியாது என்பதைக் கூட்டமைப்பு உணர்தல் வேண்டும். அரசுடன் பரஸ்பர இணக்கப்பாடு ஒன்றுக்கு வந்து இணைந்து செயற்பட வேண்டும்.”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக