07 செப்டம்பர் 2010

சரத் ஆதரவு படையதிகாரி இலங்கையை விட்டு ஓட்டம்..

சரத் பொன்சேகாவுக்கு எதிராக இராணுவ நீதிமன்றில் சாட்சியமளிப்பதற்காக அழைக்கப்பட்ட மேஜர் ஜெனரல் அசோக தோரதெனிய என்ற முன்னாள் இராணுவ அதிகாரி விசாரணைக்கு முகம் கொடுக்காமல் சிங்கப்பூருக்குத் தப்பிச் சென்றுள்ளார்.
சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாக இருந்தபோது மேஜர் ஜெனரல் அசோக தோரதெனிய ஆயுத தளபாடப் பிரிவுக்குப் பொறுப்பாக இருந்தவர்.
இவரே ஆயுத தளபாடக் கொள்வனவுகள் மற்றும் படையினருக்குத் தேவையான ஆயுததளபாடங்கள் பற்றிய மதிப்பீடுகளை மேற்கொண்டு வந்தார்.
இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் இவர் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவராகவும் நியமிக்கப்பட்டிருந்தார்.
ஆனால் சரத் பொன்சேகா கைதுசெய்யப்பட்டதும் அவருக்கு நெருக்கமானவராக இருந்த மேஜர் ஜெனரல் தோரதெனியவும் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாக இருந்த காலத்தில் இடம்பெற்ற ஆயுதக்கொள்வனவு முறைகேடுகள் பற்றி விசாரிக்க அமைக்கப்பட்ட இராணுவ நீதிமன்றத்தில் இவரை முன்னிலையாகும்படி கடந்த வாரம் அழைப்பு விடுக்கப்பட்டது.
இவரைச் சந்தித்து அழைப்பைக் கொடுப்பதற்காக ஒரு இராணுவ காவல்துறை அதிகாரி சென்றிருந்தார்.
ஆனால் அவரை சந்திக்க முடியவில்லை. இதனால் அந்த அழைப்புக் கடிதத்தை அவரது வீட்டுச் சுவரில் ஒட்டிவிட்டு வந்தார்.
தற்போது அவர் சிறிலங்காவை விட்டு வெளியேறியுள்ளது தெரியவந்துள்ளது. அவர் சிங்கப்பூர் விமானம் ஒன்றில் தப்பிச் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக