விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடை குறித்து அமைக்கப்பட்டு உள்ள டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி விக்ரம்ஜித்சென் அவர்களின் தீர்ப்பு ஆயத்தில், இந்த விசாரணையில் தன்னையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று வைகோ நேற்று (24.9.2010) காலை பத்து மணி அளவில், ஒரு மிக விரிவான விண்ணப்பத்தைத் தாக்கல் செய்தார். அதில், (குற்றம் சாட்டுகிறேன்) என்று அவர் வெளியிட்டு உள்ள ஆங்கில நூலையும் இணைப்பாகச் சேர்த்து இருந்தார்.
நேற்று பிற்பகல் 3.30 மணி அளவில் விசாரணைக்கு இந்த வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. தன்னையும் ஒரு தரப்பாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று தான் கொடுத்த வாதத்தை, வைகோ, நீதிபதி முன் வைத்தார்.
சட்டவிரோத நடவடிக்கைகள் சட்டத்தின் பிரிவு 9 ஐச் சுட்டிக்காட்டி, அத்துடன் இந்தச் சட்டத்தின் 35, 36 ஆகிய பிரிவுகளையும் மேற்கோள் காட்டி, அந்த
36- ஆவது பிரிவின் கீழ், இதனால் பாதிக்கப்படுகின்ற யாரும் முறையிடலாம் என்ற அடிப்படையில், தன்னையும் இந்த விசாரணையில் சேர்க்க வேண்டும் என்று கூறினார்.
மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் நடவடிக்கைகளும், வைகோவின் பேச்சுகளும் மேற்கோள் காட்டப்பட்டு, 98 ஆம் ஆண்டு, தடை உத்தரவிலேயே சொல்லப்பட்டு இருக்கிறது. தொடர்ந்து ஒவ்வொரு முறை தடையை நீட்டிக்கும்போதும் தன்னுடைய பேச்சுகளைக் காரணமாகக் காட்டி இருக்கிறார்கள். எனவே, தான் பாதிக்கப்பட்டவன் என்ற முறையில், தன் தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும் என்று சொன்னார்.
உடனே நீதிபதி; ‘விடுதலைப் புலிகளை ஆதரிக்கிறீர்களே, நீங்கள் ஏன் உறுப்பினராகச் சேரவில்லை?’ என்று கேட்டார். ‘நான் உறுப்பினராகச் சேரவில்லை. ஆனால், அவர்களுடைய தமிழ் ஈழக் கோரிக்கையைத் தொடக்கத்தில் இருந்தே ஆதரித்து வருகிறேன். அவர்களது இயக்கத்தையும் ஆதரித்து வருகிறேன்’ என்றார் வைகோ.
உடனே அரசாங்க வழக்கறிஞர், ‘வைகோ, அந்த அமைப்பின் உறுப்பினராகவோ, அதிகாரபூர்வ பிரதிநிதியாகவோ இல்லை. அதனால், அவர் தரப்பு வாதத்தை, இந்த வழக்கில் அனுமதிக்கக் கூடாது’ என்றார். ஆனால், வைகோவின் தரப்பு வாதத்தைத் தொடர்ந்து எடுத்து உரைப்பதற்கு நீதிபதி அனுமதி அளித்தார்.
தொடர்ந்து வைகோ பேசும்போது, விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை நீடிப்பதற்கு, இந்திய அரசு தற்போது தந்து உள்ள காரணங்களுள், முதலாவது காரணமே, மிகவும் தவறானதும், உண்மைக்கு முற்றிலும் புறம்பானதும் ஆகும். விடுதலைப்புலிகள், உலகத்தில் உள்ள எல்லாத் தமிழர்களுக்காகவும், இந்தியாவில் உள்ள தமிழர்களுக்காகவும் சேர்த்து, தனித் தமிழ் ஈழ நாடு கோரிக்கை வைத்து உள்ளதால், அது இந்தியாவின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் ஆபத்தாக முடியும் என்று இந்திய அரசு குறிப்பிட்டு உள்ளது.
மாண்புமிகு நீதிபதி அவர்களே, இந்தப் பிரச்சினையில் உண்மையை எல்லோரும் உணர்வதற்கு, இதுவே எனக்கு ஒரு வாய்ப்பைத் தந்து உள்ளது. தமிழ் ஈழம் என்பது, இலங்கைத் தீவில் உள்ள வடக்கு,கிழக்குப் பகுதி. அது அவர்களின் தாயகம். வரலாற்றின் தொடக்கத்தில் இருந்து, அவர்கள் அரசு ஆண்ட பூமி.
உடனே நீதிபதி கேட்டார்: அப்படியானால், அவர்கள் இந்தியாவின் ஒரு பகுதியைச் சேர்க்க விரும்பவில்லையா?
வைகோ: ஒருக்காலும் இல்லை. தமிழ்நாட்டில் ஒரு அங்குல இடத்தையாவது அவர்கள் சேர்த்துக் கொள்ள விரும்பினார்கள் என்பதற்கு, இந்திய அரசு ஏதாவது ஒரு ஆதாரத்தைக் காட்ட முடியுமா? இது விடுதலைப்புலிகள் பற்றி ஒரு தவறான எண்ணத்தை ஏற்படுத்த, இந்திய அரசு செய்கின்ற, திட்டமிட்ட நச்சுத்தன்மை வாய்ந்த பிரச்சாரம் ஆகும்.
நான் இந்திய நாட்டின் ஒற்றுமைக்கு எதிரானவன் அல்ல. நாட்டுப்பற்றில் நாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. தமிழ்நாட்டைப் பிரிக்க வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை. தனித்தமிழ் ஈழ நாட்டை ஆதரிக்கிறோம். அதை அமைப்பதுதான் எங்கள் குறிக்கோள். நீதிபதி அவர்களே, பாகிஸ்தானின் ஆதிக்கத்தில் இருந்து, கிழக்கு பாகிஸ்தானைப் பிரித்து, ‘வங்கதேசம்’ என்று ஒரு தனிநாடு அமைக்க, அந்த மக்கள் போராடியபோது, மேற்கு வங்காளத்தில் உள்ள வங்காளிகளும், அதே வங்கமொழி பேசுகிறவர்கள்தான், பழக்கவழக்கங்கள் எல்லாம் ஏறத்தாழ ஒன்றுதான், ஆனால், மேற்கு வங்காளத்தையும் சேர்த்து, அகன்ற வங்கதேசம் கேட்கிறார்கள் என்று யாரும் கூறவில்லையே?
நீதிபதி சிரித்துக்கொண்டே, ‘அப்படிக்கூட ஒரு பேச்சு வந்தது உண்டு’ என்றார். ஆனால், அப்படி நடக்கவில்லையே என்றார் வைகோ.
மேலும், கொசோவா தனிநாடு அமைவதற்கும், கிழக்குத் தைமூர் தனிநாடு அமைவதற்கும், பாலஸ்தீன விடுதலைக்கும் ஆதரவு கொடுப்பவர்கள், தமிழ் ஈழத்துக்கு மட்டும் ஏன் மறுக்கிறார்கள்? அந்த நியாயம் தமிழனுக்குக் கிடையாதா? என்று கேட்டார்.
நீதிபதி, ‘நீங்கள் இந்தத் தடையால் எப்படிப் பாதிக்கப்படுகிறீர்கள்?’
வைகோ: விடுதலைப்புலிகள் அமைப்பைத் தடை செய்து இருப்பதால், அவர்களது கொள்கையை ஆதரித்துப் பேசினால், அரசாங்கம் வழக்குப் போடுகிறது. இப்படிப் பேசியதற்காக, என்மீது இரண்டு தேசத்துரோக வழக்குகளை அரசு போட்டு இருக்கிறது. அந்த வழக்குகளை நான் நீதிமன்றத்தில் சந்திக்கிறேன். ‘விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசுவது தவறு இல்லை; அது குற்றம் ஆகாது’ என்று, நான் தொடுத்த வழக்கில், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்து உள்ளது.
சிங்கள அரசு நடத்தும் இனப்படுகொலையால் ஈழத்தமிழர்கள் பாதிக்கப்பட்டு அடைக்கலம் தேடி, தஞ்சம் நாடி, தமிழ்நாட்டுக்கு வந்தால், அவர்களைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்று முத்திரை குத்தி, சிறை முகாமுக்கு அனுப்புகிறார்கள். அல்லது, இலங்கைக்கே திருப்பி அனுப்புகிறார்கள். புலிகளின் மீதான தடையால், ஈழத்தமிழர்களுக்கு இப்படிப்பட்ட கொடுந்துன்பமும், துயரமும் நேர்கிறது. இந்தக் காரணத்துக்காகவே, தடையை நீட்டிக்கக் கூடாது என்கிறேன்.
அரசாங்க வழக்கறிஞர், தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகள் செயல்படுவதாகச் சொன்னார். அது உண்மை அல்ல. இது அரசின் காவல்துறை ஜோடிக்கும் பொய் வழக்குகள் ஆகும். விடுதலைப்புலிகள் அமைப்பே இலங்கையில் ஒழிக்கப்பட்டு விட்டது என்று இந்திய அரசு கூறிவிட்டு, இந்தத் தடை ஆணைத் தகவலை அவர்களுக்குத் தெரிவிக்க, சட்டத்தில் கூறியபடி, எந்த நடைமுறைகளிலும், முயற்சிகளிலும் ஈடுபடாமல், இது விடுதலைப்புலிகளுக்கு என்று மொட்டையாக அரசு அறிவித்து உள்ளது. அது மட்டும் அல்ல, விடுதலைப்புலிகள், இந்திய அரசாங்கத்தைத் துரோகிகள் என்று குற்றம் சாட்டிப் பிரச்சாரம் செய்வதாக, இந்தத் தடை அறிவிப்பில் குறிப்பிட்டு உள்ளது. ஒருவகையில் இது உண்மைதான்.
நீதிபதி, இது யார் சொல்லுவது? என்றார்.
வைகோ, ‘நான் சொல்லுகிறேன்’ என்றதுடன், இந்திய அரசு ஈழத்தமிழர்களுக்குத் துரோகம் செய்கிறது என்று பிரதமருக்கு எழுத்து மூலமாகவே தந்து இருக்கிறேன். ஆங்கிலத்தில் நான் வெளியிட்ட புத்தகத்தையும் இங்கே தந்து இருக்கிறேன். 2008 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி எனக்கு எழுதிய கடிதத்தில், ‘இலங்கையின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டைக் காக்க, இந்தியா இராணுவ உதவி செய்து இருக்கிறது’ என்று பிரதமர் எழுதி உள்ளார். உலகம் முழுமையும் இணைய தளத்தில் புலிகளுக்கு ஆதரவாக, இந்தியாவுக்கு எதிராக பிரச்சாரம் செய்யப்படுவதாக, இந்த அரசு ஆணையில் குறிப்பிட்டு உள்ளார்கள். மனித உரிமைகளைக் காக்க உலகில் எழுகின்ற குரல் இது.
ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன், இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்களை விசாரிக்க, இந்தோனேஷியாவின் முன்னாள் அரசு வழக்கறிஞர் மார்க்சுசி தரிஸ்மான்,தெற்கு ஆப்பிரிக்காவின் யாஸ்மின் சுகா (மனித உரிமைப் போராளி) அமெரிக்க வழக்கறிஞர் ஸ்டீவன் ராட்னர் ஆகிய மூவர் கொண்ட குழுவை நியமித்தார்.
அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இலங்கை அதிபர் ராஜபக்சே அமைச்சரவையில் உள்ள அமைச்சர் ஒருவர், ஐ.நா. பொதுச்செயலாளரை, ‘சர்வதேச விபச்சார புரோக்கர்’ என்று போர்டு எழுதி வைத்துப் போராட்டம் நடத்தினார்.
உடனே நீதிபதி, ‘வைகோ, இதைத் தாண்டி அரசியல் எல்லைக்குள் நீங்கள் போய்விட வேண்டாம்’ என்றார்.
உடனே அரசு வழக்கறிஞர் எழுந்து, ‘வைகோவும் முன்பு மத்திய அரசில் இடம் பெற்று இருந்தார். அப்போது, அவர் இதை எதிர்க்கவில்லை’ என்றார்.
வைகோ, ‘நான் தொடக்கத்தில் இருந்தே புலிகளை ஆதரித்து வருகிறேன். புலிகள் அழிக்கப்பட்டு விட்டார்கள் என்று சொல்லப்படுவதற்குப் பிறகு ஏற்பட்டு உள்ள நிலைமை இது. நான் இதை அரசியல் மேடையாக ஆக்க விரும்பவில்லை’ என்றார். நீதிபதி, தமிழ்நாட்டு அரசு வழக்கறிஞரைப் பார்த்து, ‘நீங்களும் அரசியல் பேசாதீர்கள்’ என்றார்.
வைகோ: விடுதலைப்புலிகள் மீதான தடை, தமிழர்கள் அனைவருக்குமே துன்பம் விளைவிப்பதற்காகத்தான் அரசாங்கம் பயன்படுத்துகிறது. தடையை நீடிக்க நீங்கள் அனுமதிக்கக் கூடாது என்று நான் வேண்டுகிறேன்.
நீதிபதி, உங்கள் மனுவின் மீதான ஆணை பின்னர் பிறப்பிக்கப்படும் என்று கூறி வழக்கை ஒத்தி வைத்தார்.
அதன்பிறகு, இந்த வழக்கின் அடுத்த விசாரணை, அக்டோபர் 5 ஆம் நாள் சென்னையிலும், அக்டோபர் 20 ஆம் நாள், உதகமண்டலத்திலும் நடைபெறும் என்று நீதிமன்றப் பதிவாளர் அறிவித்தார். மறுமலர்ச்சி தி.மு.கழகச் சட்டத்துறைச் செயலாளர் வழக்கறிஞர் ஜி.தேவதாஸ், இந்த விசாரணையில், வைகோவுடன் கலந்து கொண்டார்.
‘தாயகம்’ தலைமைக் கழகம்
சென்னை - 8 மறுமலர்ச்சி தி.மு.க.,
24.09.2010
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக