01 மே 2010

பார்வதி அம்மாவை திருப்பி அனுப்பிய அன்று நடந்தது என்ன?-பூங்குழலி.

கடந்த 16-ஏப்ரல்-2010 அன்று தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் தாயார் பார்வதி அம்மையார் திருப்பி அனுப்பப்பட்டதானது உலகத் தமிழர்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. தமிழகத் தமிழர்களை ஆற்றாமையில் தள்ளிவிட்டிருக்கிறது. இந்த நிலையில், அன்றைய நிகழ்வின் நேரடி சாட்சி என்ற முறையில் நடந்தவற்றை பதிவு செய்ய வேண்டியது எனது கடமை என உணர்ந்தேன். அதன் வெளிப்பாடே இந்த பதிவு.

16-ஏப்ரல்-2010 - தில்லியில் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய `பேசப்படாத படுகொலை - இலங்கையின் போர்க் குற்றங்கள்` என்ற தலைப்பிலான மாநாட்டில் கலந்து கொண்டு இரவு 7:30 மணிக்கு விமானம் மூலம் சென்னைக்கு வந்து சேர்ந்தேன்.

8:30 மணி அளவில் வீட்டிற்குள் நுழைந்தபோது வாசலிலேயே காத்திருந்த அப்பா, `உடனடியாக சாப்பிட்டுவிட்டு கிளம்பு. அவங்க வர்றாங்க. அழைக்கப் போகணும்` என்றார். கடந்த ஒரு வார காலமாக எந்நேரமும் வரலாம் என காத்திருந்ததால் அப்பா யாரை பற்றிச் சொல்கிறார் என்பது உடனே புரிந்தது.

தமிழீழத் தேசியத் தலைவரின் தாயார் பார்வதி அம்மையார் அவர்கள் வர இருக்கிறார்கள் என்பதை தெரிந்த உடன் அவ்வளவு நேரமும் இருந்த பயணச் சோர்வு மறைந்து பரபரப்புத் தொற்றிக் கொண்டது.

கடந்த சில நாட்களுக்கு முன் இலங்கையிலிருந்து மலேசியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சிகிச்சைப் பெற்று வந்த பார்வதி பாட்டி அவர்களின் உடல்நிலை ஒரு வார காலத்திற்கு முன் நலிவுற்றதாக செய்தி வந்தபோது அனைவரும் பதறிவிட்டோம்.

இந்தியாவிற்கும் கனடாவிற்கும் விசா விண்ணப்பித்திருந்தும் இரு நாடுகளிடமிருந்தும் இன்னமும் பதில் வரவில்லை. ஒரு வேளை இந்திய விசா கிடைத்தால் உடனடியாக அவர்களை அழைத்து வர அத்தனை ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. நம் வீட்டிலேயே தங்க வைத்து சிகிச்சை மேற்கொள்ள அறையும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில்தான் 16-ஏப்ரல், 2010 அன்று காலை மலேசியாவில் உள்ள இந்தியத் தூதரகம் பார்வதி பாட்டிக்கு இந்தியாவில் தங்கி சிகிச்சை பெற 6 மாத காலம் விசா வழங்கியது. அன்று மாலை விமானத்திலேயே பயணம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு அன்று இரவு வந்து சேருவதாக திட்டமிடப்பட்டிருந்தது. உடனடியாக கிளம்பினோம்.

வைகோ அய்யாவிற்கும் தகவல் அளிக்கப்பட்டு அவரும் விமான நிலையம் நோக்கிப் பயணப்பட்டார். அப்பாவும் வைகோ அய்யாவும் விமான நிலையத்திற்குள் வந்தால் பரபரப்பாகிவிடும். கூட்டம்கூடி அதனால் பாட்டிக்குத் தொந்தரவு ஏற்படலாம் என கருதி, விமான நிலையத்திற்கு அருகிலேயே நானும், இளவழகன் அய்யா அவர்களும் எங்களுக்குத் துணையாக வழக்கறிஞர் தம்பி ஒருவரும் மற்றொரு தம்பியும் மட்டும் வேறொரு வாகனத்தில் மாறிக் கொண்டு உள்ளே சென்றோம்.

அப்பாவும் வைகோ அய்யாவும் விமான நிலையத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு வாகனத்திலேயே காத்திருந்தனர்.

நானும் இளவழகன் அய்யாவும் அந்த தம்பிகளும் வருகைப் பகுதிக்குச் சென்றோம். அப்போது மணி 10:15. பன்னாட்டு வருகையின் முகப்புக்குச் செல்ல நெடுந்தூரம் நடக்க வேண்டும். நடந்து சென்று அங்கிருந்த வருகைப் பட்டியலில் பாட்டி வரவேண்டிய விமானம் வந்து விட்டதா என பார்த்தோம். வரவில்லை. அப்போது மணி 10:30.

வருகைப் பட்டியல் பலகைக்கு கீழேயே நின்று கொண்டு பட்டியலில் ஒரு கண்ணும்.. வெளியே வருபவர்கள் மீது ஒரு கண்ணுமாக நின்ற கொண்டிருந்தோம். 10:40-க்கு திடீரென பெரும் எண்ணிக்கையில் காவல்துறையினர் வந்தனர். வெளிவருபவர்கள் நடந்து வரக்கூடிய வழி நெடுகிலும் 3 அடிக்கு ஒரு காவலர் என அணிவகுத்து நின்றனர்.

நானும் தம்பிகளும் பார்வையாலேயே ஒருவருக்கொருவர் கேள்விக் கேட்டுக்கொண்டோம். `அவசரப்பட வேண்டாம். ஒருவேளை வேறு யாரும் முக்கியமானவர்கள் வர்றாங்களோ என்னவோ` என்று நான் சொன்னேன்.

அடுத்தபடியாக காவல்துறை ஆட்கள் பார்வையாளர் வரிசையில் நின்றிருந்த அனைவரையும் வரிசையாக விடியோ எடுக்கத் தொடங்கினர். அதற்குள் பாட்டி வர இருந்த விமானம் வந்துவிட்டதாகப் பலகையில் விளக்கு எரிந்தது.

வருகை முகப்பை நோக்கினால், சென்னை புறநகர் ஆணையர் ஜாங்கிட் நின்று கொண்டிருந்தார். அவரைச் சுற்றி 10-க்கும் மேற்பட்ட காவல் உயர் அதிகாரிகள் நின்று கொண்டிருந்தனர். உயர் அதிகாரிகளைப் பார்த்தவுடன் நிச்சயம் இது பாட்டிக்காகத்தான் என புரிந்தது. எப்படியோ செய்தி தெரிந்து வந்து விட்டிருக்கின்றனர் என்பதை புரிந்து கொண்டேன்.

எனது அச்சம் என்னவாக இருந்தது என்றால், பாட்டி வெளியே வந்த உடன், காவல்துறை அவரை தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டு போய்விடுமோ என்பதுதான். அப்படி காவல் துறை செய்ய முற்பட்டால் அதை நானோ, இளவழகன் அய்யாவோ, அந்த தம்பிகள் இருவருமோ மட்டும் தனியாகக் கையாள முடியாது என்பது புரிந்தது. எங்களைத் துரும்பாகத் தூக்கி எறிந்து விட்டு பாட்டியைக் கொண்டு சென்று விடுவார்கள் என பயந்தேன்.

இதற்கு மேலும் தாமதிக்க வேண்டாம் என்று உடனடியாக அப்பாவிற்கு தகவல் கொடுத்தேன். உடனடியாகக் கிளம்பி வாருங்கள் இல்லையென்றால் தவறு நடந்துவிடும் என்று கூறினேன். அடுத்து வழக்கறிஞர் சந்திரசேகரன் அவர்களைத் தொடர்பு கொண்டு வழக்கறிஞர்களை அனுப்புமாறு கூறினேன்.

மூன்றாவதாக ஊடக நண்பர் ஒருவரைத் தொடர்பு கொண்டு நிலைமையை எடுத்துச் சொல்லி அனைத்து ஊடகங் களுக்கும் தெரிவிக்குமாறு கூறினேன்.

இதற்குள் தலைவர்கள் இருவரும் வருகை முகப்பிற்கு வந்து விட்டனர். அவர்களைச் சுற்றி பல காவல் அதிகாரிகளும் அவர்களைத் தடுக்க முற்பட்டபடி வந்து கொண்டிருந்தனர். ஆனால் அவர்களைக் கடந்து நடையை எட்டி வைத்து தலைவர்கள் விரைவாக வந்து கொண்டிருந்தனர்.

இதற்கிடையே வைகோ அய்யா அவர்களின் உதவியாளர் பாலன் அவர்கள் அங்கு நின்று கொண்டிருந்ததையும் அவர் அவசரம் அவசரமாக நுழைவுச் சீட்டுக்கள் வாங்குவதையும் பார்த்தேன். நல்லது என நினைத்து தடுப்புக் கம்பியை தாண்டி நானும் உள் சென்று ஒரு நுழைவுச் சீட்டுப் பெற்றுக் கொண்டு தலைவர்களுக்கு முன் பார்வையாளர் அறைக்குள் சென்றேன்.

அதற்குள் பார்வையாளர் அறை வாயிலுக்கு வந்த தலைவர்களைச் சுற்றி அரண் அமைத்த காவல் துறையினர் அவர்களை உள்ளேவிட முடியாது என தடுத்தனர்.

பாலன் அவர்கள் நுழைவுச் சீட்டை காட்டி அனைவருக்கும் நுழைவுச் சீட்டு இருக்கிறது என்றார். வைகோ அய்யா அவர்களும் “நுழைவுச் சீட்டு வைத்திருப்பவர்களை ஏன் அனுமதிக்க மறுக்கிறீர்கள்? அனுமதிக்கப்பட்ட எல்லைவரைதானே நாங்கள் செல்கிறோம். அதை ஏன் தடுக்கிறீர்கள்?” என்றார்.

ஆனால் பேசிக்கொண்டிருக்கும்போதே ஒரு காவல்துறை அதிகாரி சட் டென வைகோ அய்யா அவர்கள் கையைப் பற்றி அவர் தோளில் கைவைத்து `உள்ளே விட முடியாதுங்க` என்று தள்ளினார். வைகோ அய்யா அவர்களும் அவரை ஒட்டி நின்றிருந்த அப்பாவும் தடுமாறி விட்டனர். அப்பா மிகுந்த கோபத்துடன் “ஏன் இப்படி காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்கிறீர்கள்? எந்த சட்டத்தின் அடிப்படையில் எங்களைத் தடுக்கிறீர்கள்?” எனக் கேட்டார்.

வைகோ அய்யா அவர்களுடன் வேளச்சேரி மணிமாறன் அவர்களும் இன்னமும் இரண்டு தோழர்களும் மட்டுமே வந்திருந்தனர். அவரும் அனைவருக்கும் தெரிவிக்க வேண்டாம்.. பத்திரமாக பாட்டியைக் வெளிக் கொணர்வதுதான் முக்கியம் என இரண்டு தோழர்களை மட்டும் அழைத்து வந்திருந்தார்.

தலைவர்களைத் தள்ளியது கண்டு அந்த தோழர்கள் கொதித்து விட்டனர். பெரும் வாக்குவாதமும் தள்ளுமுள்ளும் நடந்தது. எனக்கென்ன கவலை என்றால், தலைவர்களிடம் தேவையற்ற வாக்கு வாதத்தை வளர்ப்பதன் நோக்கமே அவர்கள் கவனத்தை திசைத் திருப்பி பாட்டியைக் கொண்டு சென்று விடுவார்களோ என்பதாக இருந்தது.

அந்த நிமிடம்வரை பாட்டியைத் தமிழகத்திற்குள் நுழையவே விடாமல் திருப்பி அனுப்புவார்கள் என்று நினைத்துகூட பார்க்கவில்லை. இந்த பயத்தின் காரணமாக வாக்குவாதத்தில் காதையும் பயணிகள் வரும் வழியில் கண்ணையும் வைத்த வாறே நின்றிருந்தேன்.

இதற்குள் என்னுடன் வந்த தம்பிகள் நுழைவுச் சீட்டு பெற முற்பட்டதால் நுழைவுச் சீட்டுக் கொடுப்பதையே நிறுத்திவிட்டு அனைத்தையும் மூடிவிட்டனர். கூடியிருந்த மக்களையும் விரைவாக விரட்டிவிட்டனர். ஏதோ பெரும் கலவரம் நடப்பது போன்ற சூழலை காவல்துறையினர் ஏற்படுத்தினர்.

என்னுடன் வந்த தம்பி தான் வழக்கறிஞர் உள்ளே விடுங்கள் என்று கேட்டபோதும் விடவில்லை. பெரும் வாக்குவாதத்திற்கு பின் ஒரு வழியாக தலைவர்கள் உள்ளே வந்து அமரும் போது மணி 11:30.

இதற்குள் ஊடகத் துறை நண்பர் ஒருவர் அழைத்து `அம்மாவைத் திருப்பி அனுப்பிட்டாங்களாம்` என்று கூறினார். என்னால் நம்ப முடியவில்லை. பொய்ச் செய்தியாக இருக்கும். காவல்துறை வேண்டுமென்றே பரப்புகிறது என்று நினைத்தேன். இருந்தபோதும் தலைவர்களிடம் வந்த செய்தியை தெரிவித்தேன்.

ஊடகத்தினரும் தோழர்களும் கூடத் தொடங்கிவிட்டனர். ஒவ்வொருவராக ஊடகத்தினர் மீண்டும் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டதாகவே சொல்லிக் கொண்டிருந்தனர். உண்மையாக இருக்குமோ என்பதை நினைப்பதற்கே கவலையாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. இப்படிகூட செய்வார்களா? ஒரு மூதாட்டியை அனுமதிக்கக்கூடவா இவர்களால் முடியாது? முறையான விசா இருக்கிறதே.. பின் என்ன? என கேள்விகள்.

அவர்கள் நம் வீட்டில்தான் தங்குவதாக இருந்ததால், அவர்களிடம் நம் வீட்டு முகவரியும் தொலைபேசி எண்ணும் அளிக்கப்பட்டிருந்தது. அதை அவர்கள் நுழைவு பதிவேட்டில் எழுதி இருப்பார்கள். ஓரு வேளை திருப்பி அனுப்புவதாக இருந்தால் சட்டப்படி அவர்கள் குறிப்பிட்டிருக்கும் முகவரிக்கோ, தொலைபேசி எண்ணுக்கோ தெரிவிக்க வேண்டும். ஆனால் அப்படியான அழைப்பு எதுவும் வரவில்லை. முறையான தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அதனால் அப்படியான அறிவிப்பு வரும் வரை காத்திருக்கலாம் என நினைத்தோம்.

மணி 11:45, 12:00, 12:30 என கடந்து கொண்டிருந்தது. ஒரு ஊடக நண்பர் அழைத்து `அவர்கள் வந்த அதே விமானத்திலிருந்து இறக்காமலேயே திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார்கள். 11:40-க்கு அந்த விமானம் கிளம்பியது` என்றார். தலைவர்களிடம் அச்செய்தியை தெரிவித்தேன். இருந்தபோதும் கிளம்ப மனமில்லை.

அவர்கள் பயணித்த விமானத்தின் அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு அது மீண்டும் மலேசியாவுக்கு பயணப்பட்டு விட்டதா? எத்தனை மணிக்கு என்று கேட்டபோது அவர்களும் `ஆம். 11:40-க்கு` என்றனர். அப்போ, வந்த செய்தி உண்மைதானா? பெரும் இயலாமை மனதை கவ்வியது. இயலாமையின் முதல் வெளிப்பாடான கண்ணீர் எட்டிப் பார்த்தது. அவ்வளவுதானா?

அவரின் உடல்நலம் மீண்டும் ஒரு பயணத்தைத் தாங்குமா? படுக்கையிலே படுத்தபடியே பயணித்த அவரை அப்படியே திருப்பி அனுப்பி இருக்கின்றனரே? குறைந்தபட்ச முதலுதவியாவது செய்தனரா? மலேசியாவில் இருந்து வெளியேறிய பிறகு மலேசிய அரசு மீண்டும் அனுமதிக்க மறுத்தால் என்னாவது? அப்படி மறுத்தால் மீண்டும் கொழும்புக்கே அனுப்புவார்களே? அந்த பயணத்தை அவர் உடல் தாங்குமா? அவருடன் பயணித்த பெண் மலேசியாவை சேர்ந்தவராச்சே.. அவரை மலேசியாவிலேயே இறக்கி விட்டு விடுவார்களே? அப்படியானால் கொழும்புக்கு யார் அவருடன் செல்வார்? குறைந்தபட்ச மனித நேயம் கூடவா இந்த அரசுக்கு இல்லை? அப்படியா தலைவர் மீது காழ்ப்புணர்ச்சி? மீண்டும் மீண்டும் தோற்றுக் கொண்டிருக்கிறோமா? என்ன செய்யப் போகிறோம்? ஒவ்வொரு முறையும் தோற்று விட்டு கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கப் போகிறோமா? இயலாமையும் ஆற்றாமையும் பொங்கியது.

வரிசையாக தோழர்களும் வெளிநாட்டு மற்றும் உள்ளுர் ஊடகத்தினரும் அழைத்துக் கொண்டிருந்தனர். விளக்கிக் கொண்டிருந்தேன்.

மலேசியாவுக்கு அழைத்து உறுதிப்படுத்தச் சொன்னோம். அவர்கள் 1 மணி அளவில் உறுதிப்படுத்தினர். அதன் பிறகு தலைவர்கள் ஊடகத்தினரிடம் உணர்ச்சிப் பெருக்குடன் தங்கள் கண்டனத்தையும் வருத்தத்தையும் வெளிப்படுத்திவிட்டு கிளம்பினர். வெளியே வந்து வாகனத்தில் ஏறினோம்.

வீடு வந்து சேர்ந்த போது மணி 2:30. நடந்தவற்றை விளக்கி அப்பாவின் அறிக்கையை அடித்து ஊடகங்களுக்கு அனுப்பி முடிக்கும் போது மணி 4. இந்நேரம் விமானம் மலேசியாவில் இறங்கி இருக்குமே என்று மலேசியாவுக்கு அழைத்துக் கேட்டேன். விமானம் வந்து விட்டது. இன்னமும் என்ன நிலை என்று தெரியவில்லை. காத்திருக்கிறோம் என்றனர்.

இலங்கையில் சிவாஜிலிங்கம் அய்யாவுக்கும் தகவல் கொடுத்திருந்தோம். ஒருவேளை கொழும்புக்கு அனுப்பினார்கள் என்றால் அவர் அதற்குரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டுமே?

காலை 6:15 மணி அளவில் மலேசியாவில் இருந்து தகவல் வந்தது. ஒரு மாத விசாவுடன் உள்ளே அனுமதித்திருக்கிறார்கள் என்று. சிவாஜிலிங்கம் அய்யாவும் அழைத்துச் சொன்னார்.

பாட்டியின் உடல்நிலையும் சீராக இருப்பதாகவும். உடனடியாக சிகிச்சைக்கு அழைத்துச் சென்றிருப்பதாகவும் சொன்னார்கள். இந்தியாவிற்கு இல்லாத மனித நேயம் மலேசிய அரசிற்காவது இருக்கிறதே என்ற எண்ணம் தோன்றியது. தாங்கொணா இயலாமை, ஆற்றாமை மற்றும் அவமானத்துடனும் கழிந்த அன்றைய இரவு மலேசிய அரசின் மனித நேயமும், பாட்டியின் உடல்நலம் சீராக இருப்பதாக வந்த செய்தியும் அளித்த குறைந்தபட்ச நிம்மதியுடன் முடிவுக்கு வந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக